அமேசான் காட்டுத் தீ குறித்து ஜி7 மாநாட்டில் பேச்சு: ஒருமித்த குரலில் உலகத் தலைவர்கள்
அமேசான் மழைக்காட்டில் உருவான காட்டுத் தீயை அணைப்பதற்கு ஒப்பந்தம் ஒன்றை எட்டும் நிலைக்கு, ஜி 7 மாநாட்டுக்கு வந்துள்ள உலகத் தலைவர்கள் நெருங்கி வந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமையன்று இது குறித்து பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், காட்டுத்தீயை அணைப்பதற்கான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிக்கு தேவையான ஒப்பந்தம் உருவாவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது என்று தெரிவித்தார்.
திங்கள்கிழமையன்று, பிரான்ஸின் பியரிட்ஸ் நகரில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் மற்றும் கனடா நாட்டின் தலைவர்கள் தங்களின் சந்திப்பு மற்றும் விவாதத்தை தொடர்ந்து வருகின்றனர்.
பிரேசிலில் அமேசான் காட்டில் உருவான காட்டுத்தீ தொடர்பாக சர்வதேச அளவில் நிலவும் பதற்றத்துக்கு மத்தியில் இந்த கூட்டம் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
அமேசானில் இவ்வாறான காட்டுத் தீ ஏற்பட வலதுசாரி கருத்தியல் கொண்ட பிரேசில் அதிபர் சயீர் போல்சனாரூதான் காரணம் என்று சூழலியல்வாதிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
அதாவது பொல்சனாரூ அரசின் கொள்கைகள் காடு அழிப்பை ஊக்குவிக்கின்றன. காடுகளை அழித்து விவசாயம் செய்ய, மரங்களை வெட்ட, வனத்தை மேய்ச்சல் நிலமாக மாற்ற அவர் ஊக்குவிக்கிறார் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
இந்த காட்டுத்தீயின் தீவிரம் மற்றும் அதற்கு போல்சனாரூ அரசு ஆற்றியுள்ள எதிர்வினைகள் ஆகியவை சர்வதேச அளவில் கண்டனங்களையும், போராட்டங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
கடந்த வாரம் இதனை ”சர்வதேச பிரச்சனை” என்று வர்ணித்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், அமேசான் காட்டுத்தீ பிரச்சனை ஜி7 மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டியது என்று மக்ரோங் வலியுறுத்தினார்.
ஞாயிற்றுக்கிழமையன்று அவர் இது குறித்துக் கூறுகையில், ”காட்டுத்தீயினால் பாதிக்கபட்டுள்ள நாடுகளுக்கு உதவ அனைத்து நாடுகளின் தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமேசான் காட்டுத்தீயை கட்டுப்படுத்த 10 மில்லியன் பவுண்ட் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
என்ன செய்கிறது பிரேசில்?
வெள்ளியன்று, உலக நாடுகளின் அழுத்தம் அதிகரித்ததால் தீயை அணைக்க ராணுவத்தை அனுப்பியுள்ளார் போல்சனாரூ.
44,000 படைகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடத் தயாராக உள்ளதாகவும், ஞாயிறன்று ஏழு மாநிலங்களில் தீயை கட்டுப்படுத்த ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
போர் விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் உதவியை ஏற்றுக் கொண்டதாக, போல்சனாரூ ஞாயிறன்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னர் பிற நாடுகள் பிரேசிலின் இறையாண்மையில் தலையிடுவதாக குற்றம்சுமத்தியிருந்தார் போல்சனாரூ.
மேலும் வெள்ளியன்று, ராணுவ உதவி குறித்து பேசிய போல்சனாரூ, “காட்டுத்தீ சம்பவங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. சர்வதேச தடைகளுக்கு அதை ஒரு காரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.” என தெரிவித்திருந்தார்.
சனிக்கிழமையன்று, ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க், பிரேசிலில் எரியும் காட்டுத்தீயை அணைக்க பிரேசில் தவறிவருவதால் தென் அமெரிக்க நாடுகளுடன் ஏற்படக்கூடிய ஒப்பந்தமும் சிக்கலில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் எழுந்த விமர்சனங்களின் ஒரு பகுதியாக, பிரேசில் நாட்டின் மாட்டுக்கறி இறக்குமதியை மொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என ஃபின்லாந்தின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
என்ன நடக்கிறது?
பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிகிறது.
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அமேசான் மழைக்காடு பல முறை பற்றி எரிகிறது என எச்சரிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை.
2018 தரவுகளோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு இதுவரை மட்டும் அமேசான் மழைக் காட்டில் தீப்பற்றும் சம்பவம் 83 சதவீதம் அதிகரித்துள்ளது என பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை எச்சரிக்கிறது.
பிரேசிலில் இந்த 8 மாதங்களில் மட்டும் 75,000 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
குறிப்பாக பிரேசிலின் ரொரைமா, ஆக்ரி, ரோந்தோனியா மற்றும் அமசோனாஸ் ஆகிய பகுதிகள் இந்த காட்டுத் தீ சம்பவங்களால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
போல்சனாரூ அரசாங்கம் காடுகளை அழிக்க ஊக்குவிப்பதே இதற்கு காரணம் என்று சூழலியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அமேசான் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
பெருமளவில் கார்பனை கிரகித்து பருவநிலை மாற்றத்தின் வேகத்தை குறைப்பதற்கு இந்த அமேசான் காடுகள் முக்கிய பங்காற்றுகின்றன. அமேசான் காடுகள் பல நாடுகளில் இருந்தாலும், பெரும்பாலான பகுதி பிரேசிலில் உள்ளது.
கரியமில வாயுவை கிரகித்துக் கொண்டு ஆக்சிஜனை உருவாக்குவதால் அமேசான் காடு உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு மூன்று மில்லியன் தாவர வகைகளும், விலங்குகளும் உள்ளன. மேலும் ஒரு மில்லியன் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.
அமேசானை பாதுகாக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள், புகழ்பெற்ற நபர்கள், சூழலியலாளர்கள் கோரிவருகின்றனர்.
ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், அரசு இதற்கு தீர்வு கான வேண்டும் என வீதியில் இறங்கி போராடிவருகின்றனர்.
ஞாயிறன்று, போப் பிரான்ஸிஸும் அமேசான் காடுகளை பாதுகாக்க வேண்டும் என்று கோரினார்.