அயோத்தி வழக்கு – உச்ச நீதிமன்றம் இன்று இறுதித் தீர்ப்பை வழங்குகிறது
இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றில் மிகவும் உற்று நோக்கப்பட்ட ஒரு முக்கிய வழக்கான ராமர் கோயில், பாபர் மசூதி நிலத்தகராறு வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று (சனிக்கிழமை) தீர்ப்பளிக்க உள்ளது.
உச்ச நீதிமன்றம் வழங்கப்போகும் இந்தத் தீர்ப்பு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் சமூகம், மதம் மற்றும் கலாசாரம் சார்ந்த தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கணிக்கப்படுகிறது.
இந்த வழக்கு மற்றும் தீர்ப்பின் தன்மையை உண்மையை உணர்ந்து செய்தி ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையம், ஊடகங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும், தீர்ப்பு தொடர்பான செய்திகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தன.
அரசியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராம ஜென்மபூமி – பாபர் மசூதி நிலத்தகராறு வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுமார் 40 நாட்களாக தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், அக்டோபர் 16ம் தேதி இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்தது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கு விசாரணை நடைபெற்ற நாட்களின் அடிப்படையிலும், நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்களின் மணி நேரத்தையும் கணக்கில் கொண்டு பார்த்தால் இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே இதுதான் இரண்டாவது நீண்ட விசாரணையாகும்.
இந்த பட்டியலில் 68 நாட்கள் நடைபெற்ற கேசவனாந்தா பாரதி வழக்குதான் முதலிடத்தில் உள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்த அமர்வில், அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி அசோக் பூஷண், நீதிபதி அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதற்கிடையே, ஓய்வுப்பெற்ற நீதிபதி கலிஃப்புல்லா தலைமையில் ஒரு மத்தியஸ்த குழுவும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டு, அந்த குழுவும் அதன் ஆய்வறிக்கையை தாக்கல் செய்துவிட்டது.
அயோத்தி நிலத்தகராறு வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரித்து மனுதாரர்களான ராம் லல்லா, நிர்மோஹி அகாரா மற்றும் சுன்னி வக்ஃப் வாரியத்துக்கு சரிசமமாக பிரித்து தீர்ப்பளித்தது.
இந்த உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துதான் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
sources : BBC