அரசு பொதுத்துறை பங்குகள் விற்பனையால் அடைய நினைப்பது என்ன?
இந்திய அரசு 2019-20 ஆம் நிதியாண்டில் பொதுத்துறை பங்குகளை விற்பதற்கு நிர்ணயித்துள்ள ரூ.1.05 லட்சம் கோடி என்ற இலக்கு மிகப் பெரியதாக உள்ளது.
அரசுக்குச் சொந்தமான அல்லது பொதுத்துறையைச் சேர்ந்த 24 நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பங்குகளை விற்பதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்கும்.
சில நிறுவனங்கள் முழுமையாக விற்கப்படும். குறிப்பாக லாபம் ஈட்டாத நிறுவனங்கள் அவ்வாறு விற்கப்படும். மற்ற சிலவற்றில் அரசின் பங்குகளில் ஒரு பகுதி விற்கப்படும்.
தனியார்மயமாக்கல் மற்றும் பங்குகள் விற்பனை என்பவை ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றன என்றாலும், தனியார்மயமாக்கல் என்பது அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தில் அரசின் கட்டுப்பாட்டை இழப்பதாக இருக்கும்.
அதனால் அரசின் பங்குகள் 51 சதவீதத்துக்கும் மேலானவை, விற்கப்படும். பங்குகள் விற்பனை என்பதில் அரசு குறைந்த அளவு பங்குகளை மட்டுமே விற்கும் என்பதால், நிர்வாகத்தில் கட்டுப்பாட்டை அரசு தக்க வைத்துக் கொள்ளும்.
பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், நலத் திட்டங்களுக்குச் செலவிடுதலை அதிகரிக்கவும் அரசு நிதி திரட்டுகிறது.
எனவே, நரேந்திர மோதி அரசாங்கம் பங்குகள் விற்பனை மற்றும் தனியார்மயமாக்கல் மூலம் இவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட முடியுமா? அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று அரசு விரும்புகிறது?
கடந்த இரண்டு ஆண்டுகளில், பங்குகள் விற்பனை இலக்கை மோதி அரசு விஞ்சியுள்ளது. உதாரணமாக 2018-19 ஆம் ஆண்டில் அரசின் இலக்கு ரூ.80,000 கோடியாக இருந்த நிலையில், சற்றேறக்குறைய ரூ.85,000 கோடியை திரட்டிவிட்டது. எனவே, நடப்பு நிதியாண்டுக்கான இலக்கும் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அரசின் கொள்கை உருவாக்கும் அமைப்பான நிடி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் இதில் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
“இந்த இலக்குகளை நாங்கள் பங்குகள் விற்பனை, தனியார்மயமாக்கல் மற்றும் அரசு சொத்துகளை ரொக்கமாக மாற்றுதல் என மூன்று வழிகளில் பூர்த்தி செய்வோம். ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கோடி ரூபாயை எளிதில் திரட்டுவோம் என்று நாங்கள் நம்பிக்கையாக இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
பங்குகள் விற்பனை செய்வதற்கான நிறுவனங்களையும், சொத்துகளையும் அடையாளம் கண்டு, அதுகுறித்து அரசுக்கு ஆலோசனை சொல்ல வேண்டும் என்பதும் நிடி ஆயோக்கின் பணிகளில் ஒன்றாக உள்ளது. துணைத் தலைவர் என்ற முறையில் ராஜீவ் குமாருக்கு இதில் முக்கியப் பங்கு உள்ளது.
பிபிசிக்கு நேர்காணல் அளித்த அவர், தாங்கள் பரிந்துரைத்த 46 நிறுவனங்களில், மொத்தம் 24 நிறுவனங்களின் பங்குகளை விற்பது மற்றும் தனியார்மயமாக்குவதற்கு அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.
”மகாராராஜா” விற்பனைக்கு
“ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்குவது தொடர்பாக நிறைய பரபரப்பு உள்ளதை நீங்கள் காணலாம். அதை விற்பதற்கான புதிய திட்டம் ஒன்றை நீங்கள் விரைவில் காணப் போகிறீர்கள்.”
இது நடந்துவிட்டால், இந்த ஆண்டில் முக்கியமான தனியார்மயமாக்கலாக ஏர் இந்தியா விற்பனை அமையும். கடந்த ஆண்டு இதை விற்பனைக்கு முன் வைத்தது மோதி அரசு. ஆனால் இதை வாங்குவதற்கு தனியார் துறையில் இருந்து யாரும் முன்வரவில்லை.
அரசின் 74 சதவீத பங்குகள் விற்பனைக்கு வந்தன. ஆனால், அரசு விதித்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளால், இதை வாங்குவதற்கு வாய்ப்புள்ள நிறுவனங்கள் பின்வாங்கிவிட்டன.
உதாரணமாக, அதன் அலுவலர்களை ஐந்து ஆண்டுகளுக்கு பணி நீக்கம் செய்யக் கூடாது என்பது அரசின் நிபந்தனைகளில் ஒன்று என்று பொருளாதார விவகார நிபுணர் விவேக் கவுல் தெரிவிக்கிறார். தனியார் துறையினருக்கு இது ஏற்புடையதாக இல்லை.
இந்த முறை அரசு தன் நிபந்தனைகளைத் தளர்த்தியுள்ளது. விற்பனைத் திட்டத்தை மேலும் கவர்ச்சிகரமானதாக ஆக்கியுள்ளது. ”கடந்த ஆண்டு ஏற்பட்ட தோல்வியில் இருந்து நாங்கள் பாடங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த முறை அதே தவறுகளை நாங்கள் மீண்டும் செய்ய மாட்டோம்,” என்று ராஜீவ் குமார் கூறினார்.
விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதன் விவரங்கள் இன்னும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.
அரசு அதில் 100 சதவீத பங்குகளை விற்று, நிறுவனத்தில் இருந்து முழுமையாக வெளியேறிவிடுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அது பங்குச் சந்தை மூலமாக கொண்டு வரப்படுமா என்பதும் தெரியவில்லை. நடைமுறைகள் விரைவில் தொடங்கும். ஆனால் அதற்கான காலம் எதுவென இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.
இது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கைகளில் உள்ளது. பங்குகள் விற்பனைக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இறுதி செய்யும், பங்குகள் விற்பனைக்கான ஐந்து உறுப்பினர் கமிட்டியின் தலைவராக அவர் இருக்கிறார். (மற்ற நால்வரும் கேபினட் அமைச்சர்கள் தான்).
இந்த கமிட்டியின் முன்னாள் தலைவர் அருண் ஜேட்லி ஓய்வுபெற்றதை அடுத்து, இந்தப் பொறுப்பை அமித் ஷா ஏற்றுக் கொண்டுள்ளார்.
அரசின் பங்கு விற்பனை நடைமுறை குறித்து பொருளாதார நிபுணர்களிடம் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. நரேந்திர மோதி அரசின் கீழ் அரசின் ஒரு நிறுவனம் தன் பங்குகளை விற்கிறது, அதை வாங்குமாறு வேறொரு அரசு நிறுவனம் நிர்பந்திக்கப் படுகிறது.
சமீபத்தில் மிகப் பெரிய பங்கு விற்பனையில் அரசுக்குச் சொந்தமான இரு பொதுத் துறை நிறுவனங்கள் ஈடுபட்டன. பண வசதி மிகுந்த, கடன் இல்லாத ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எச்.பி.சி.எல். நிறுவனத்தில் கட்டுப்பாடு செலுத்தும் அளவுக்கு 51 சதவீத பங்குகளை சுமார் ரூ.37,000 கோடிக்கு வாங்கியது. இதற்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ரூ.24,000 வங்கிக் கோடி கடன் வாங்கியது.
எனவே இதை உண்மையில் பங்குகள் விற்பனை என்று கூறலாமா? அப்படி கூற முடியாது என்கிறார் விவேக் கவுல். ”பங்குகள் விற்பனை என்பது வெறும் நாடகத்தைத் தவிர வேறெதுவும் கிடையாது. அல்லது அரசு நிதி திரட்டுவதற்கான எளிய வழி என்று நாம் கூறலாம்,” என்கிறார் அவர்.
உண்மையான பங்கு விற்பனை என்பது அரசு நிறுவனங்களையோ அல்லது அதன் பங்குகளையோ ஒரு தனியார் நிறுவனம் வாங்குவதாகத் தான் இருக்கும். இதை மறுக்கிறார் நிடி ஆயோக்கின் ராஜீவ் குமார்.
இது செயல்திறனை உண்மையில் மேம்படுத்தும் என்று நான் நினைக்க வேண்டியுள்ளது. இது முதலாவது விஷயம். அடுத்ததாக, பங்கு விற்பனைகள் அனைத்திலும் அதை வாங்கக் கூடிய தனியார் ஒருவரை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது,” என்று அவர் கூறினார்.
ஓ.என்.ஜி.சி. மற்றும் எச்.பி.சி.எல். விவகாரத்தில் செய்ததையே இப்போதும் மத்திய அரசு செய்யக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.
1991ல் இந்தியாவில் தாராளமயமாக்கல் தொடங்கிய பிறகு, இதே நடைமுறையை அனைத்து அரசுகளும் பின்பற்றி வந்துள்ளன என்பது மோதி அரசின் செயலை நியாயப்படுத்துவதாக இருக்கும்.
பங்குகள் விற்பனை வேகமாக இருக்கிறதா, மெதுவாக நடக்கிறதா?
பங்குகள் விற்பனையின் வேகம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகமாக இருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால் இதற்காக அரசைப் பாராட்ட வேண்டுமா அல்லது குற்றம் சொல்ல வேண்டுமா? நீங்கள் எந்தப் பக்கத்தைச் சேர்ந்த சிந்தனைவாதி என்பதைப் பொருத்து அது அமையும்.
தனியார்மயமாக்கலை ஆதரிக்கும், நிறுவனங்களை நடத்துவதில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று நம்புவோரைப் பொறுத்தவரை, பங்குகள் விற்பனையில் மோதியின் அரசின் வேகம், மெதுவாகத்தான் இருக்கிறது என்று கூறுவார்கள். அரசின் அனைத்து அல்லது பெரும்பாலான நிறுவனங்களை அரசு விற்றுவிட்டு, வீட்டுவசதி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மின்வசதி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.
ஆனால், அரசின் நிறுவனங்கள் மற்றும் சொத்துகளை தனியாருக்கு விற்பதை எதிர்ப்பவர்கள். பங்குகள் விற்பனையில் மோதி அரசின் வேகத்தைப் பார்த்து அஞ்சுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பு அரசின் தனியார் மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
அரசின் சொத்துகள் மற்றும் நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக் கூடாது என்று அந்த அமைப்பு வலியுறுத்துகிறது. பங்குகள் விற்பனையின் வேகம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
”பங்குகள் விற்பனையை நாங்கள் முழுமையாக எதிர்க்கவில்லை. முக்கியமானவற்றை விற்பதை நாங்கள் எதிர்க்கிறோம்,” என்று அந்த அமைப்பைச் சேர்ந்த அருண் ஓஜா கூறினார். ”பங்குகளை பொது மக்களிடம் விற்கலாம்,” என்கிறார் அவர்.
மூலதனம் எங்கிருந்து வரும்?
கடந்த காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதத்துக்குக் குறைந்துவிட்டது. ஒரு காலத்தில், அதாவது 2003 முதல் 2012 வரையில் ஏற்றுமதி வளர்ச்சி 13-14 சதவீதம் இருந்தது. இப்போது இது இரண்டு சதவீதத்துக்கும் கீழாகக் குறைந்துவிட்டது. இதுபற்றி அரசுக்கு கவலை இருப்பதாக ராஜீவ் குமார் ஒப்புக் கொள்கிறார்.
‘உண்மையில் எங்களுக்குக் கவலை இருக்கிறது. இந்த வளர்ச்சிக் குறைவை கூடிய சீக்கிரத்தில் சரி கட்டுவதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சிகளில் அரசின் அனைத்துத் துறைகளும் ஈடுபட்டிருக்கின்றன,” என்று அவர் கூறினார்.
நாட்டில் மூலதனத்துக்குக் கடும் பற்றாக்குறை இருக்கிறது. உள்நாட்டு நிறுவனங்களிடம் போதிய மூலதனம் இல்லை. இவற்றில் பெரும்பாலானவை கடன் சுமையில் இருக்கின்றன. வங்கிகளின் நிதி நிலைமையும் ஊக்கம் தரக் கூடியதாக இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெளிநாட்டு மூலதனத்தைக் கொண்டு வர வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் சீர்திருத்தங்களை அமல் செய்யவும், தொழில் செய்தலை எளிதாக்கவும் மோதி அரசு முயற்சிகள் மேற்கொண்டது. அதற்குப் பலன் கிடைத்தது. 2018-19 ஆம் ஆண்டில் கிடைத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டின் தொகை 64.37 பில்லியன் டாலர் என்பது மகிழ்ச்சிக்கு உரிய செய்தி.
இந்திய அரசுக்கு சொந்தமாக 257 நிறுவனங்கள் உள்ளன. 70க்கும் மேற்பட்டவை தொடங்கப்பட உள்ளன. இவை தவிர, அதன் பெரிய சொத்துகளில் ஒன்றாக ரயில்வேயும் சொந்தமாக வைத்திருக்கிறது. அதற்கும் மேலாக அரசுக்குச் சொந்தமான வங்கிகளில் அதன் கூட்டு பங்கு மதிப்பு 57 சதவீத அளவுக்கு உள்ளது. கட்டுப்பாட்டு அதிகாரத்தை இழந்துவிடாமல், வங்கிகளில் இருந்து ஐந்து முதல் ஆறு சதவீதம் வரையிலான பங்குகளை அரசு விற்க முடியும் என்று ராஜீவ் குமார் வாதிடுகிறார்.
ஆனால், அதற்கு அரசின் உறுதியான நிலைப்பாடும், அரசியல் உறுதியும் தேவை என்று நிபுணர்கள் நம்புகின்றனர். மோதி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் முந்தைய அரசுகளிடம் இருந்து மாறுபட்டவை கிடையாது என்று விவேக் கவுல் கூறியுள்ளார். சொல்லப் போனால், சோஷலிசத்துக்கு தீவிர முக்கியத்துவம் தந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தைப் போலவே உள்ளது என்கிறார் அவர்.
”அமெரிக்காவுக்கே முதல் உரிமை,” என்ற தேசியவாதக் கொள்கையை அறிவித்ததன் மூலம், உலகமயமாக்கல் முயற்சிகளுக்கு அமெரிக்க அதிபர் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
நரேந்திர மோதி தலைமையிலான அரசுக்குள்ளேயே இரண்டு கருத்துகள் உள்ளன. அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதற்கு முன் தேசத்தின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஒரு தரப்பு கூறுகிறது. ஆனால் உலகமயமாக்கலைத் தொடரலாம் என்று இன்னொரு தரப்பு கூறுகிறது.