கொரோனா வைரஸ் கதவுகளின் கைப்பிடிகளில் 9 தினங்கள் வரை உயிர்பிழைத்திருக்கும் – புதிய ஆய்வில் தகவல்
கொரோனா வைரஸானது அறை வெப்பநிலையில் கதவுக் கைப்பிடிகள், பஸ் மற்றும் புகையிரத கைப்பிடிச் சட்டங்கள் என்பனவற்றில் 9 தினங்கள்வரை உயிர்பிழைத்து வாழும் வல்லமையைக் கொண்டது என புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
ஜேர்மனியிலுள்ள றுஹர் பல்கலைக்கழகம் மற்றும் கிரெய்ப்ஸ்வால்ட் பல்கலைக்கழகம் என்பனவற்றைச் சேர்ந்த நிபுணர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர்கள் கொரோனா வைரஸுக்கள் தொடர்பான 22 ஆய்வுகளிலிருந்து பெற்ற தரவுகளை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வை முன்னெடுத்திருந்தனர்.
அவர்கள் பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகம் மற்றும் மரத்தாலான மேற்பரப்புக்களில் கொரோனா வைரஸ் சராசரியாக இரு மணித்தியாலங்கள் முதல் 9 நாட்கள்வரை வாழ்வதாக கூறுகின்றனர்.
மேற்படி மேற்பரப்புகள் தொற்று நீக்கப்படாவிட்டால் சாதாரண காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகளை விடவும் நான்கு மடங்கிலும் அதிக காலம் கொரோனா வைரஸ் வாழக்கூடியது என இந்த ஆய்வு கூறுகிறது. சாதாரண காய்ச்சல் வைரஸானது மேற்பரப்புகளில் இரு நாட்கள் மட்டுமே உயிர் வாழும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கைப்பிடிகள் உள்ளடங்கலான மேற்பரப்புகளிலுள்ள இந்தக் கொரோனா வைரஸை அற்ககோல் அல்லது சலவைத்தூள் மூலம் இலகுவாக கொல்ல முடியும் என்ற போதும் அவற்றை கவனிக்காது விட்டால் அவை நீண்ட காலம் தொடர்ந்து வாழும் வல்லமையைக் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதேசமயம் இந்த வைரஸ் மருத்துவர்களால் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெற அணியப்படும் பாதுகாப்பு மேலங்கிகளில் இரு நாட்களுக்கு அதிகமான காலம் வாழும் வல்லமையைக் கொண்டுள்ளதால் மருத்துவர்கள் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பின்னர் அந்த மேலங்கிகளை உடனடியாக அகற்றி உரிய முறையில் சுத்திகரிக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வைரஸ் தொற்றுக்குள்ளாகும் பொருளொன்று நோய்க்கிருமிகளைப் பரப்பும் ஊடகமாக மாறுவதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.
சாதாரண காய்ச்சல் வைரஸ் போன்று கொரோனா வைரஸ் குளிர்மையான காலநிலை பிடித்தமானது எனத் தெரிவிக்கும் ஆய்வாளர்கள் வெப்பநிலை 4 பாகை செல்சியஸ் அல்லது அதற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த வைரஸ் 28 நாட்களுக்கு மேற்பட்ட காலம் வாழும் வல்லமையைக்கொண்டது எனக் கூறுகின்றனர்.
ஆனால் வெப்பநிலை 30 பாகை செல்சியஸிலும் அதிகரிக்கும்போது இந்த வைரஸுகள் உயிர்பிழைத்திருக்கும் வீதம் வீழ்ச்சியடைவதாக ஜேர்னல் ஒப் ஹொஸ் பிட்டல் அன்பெக்ஸன் ஆய்வேட்டில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு கூறுகிறது.
சாதாரண சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் அற்ககோலைப் பயன்படுத்தி மேற்பரப்புக்களிலுள்ள கொரோனா வைரஸுக்களை ஒரு நிமிடத்திலேயே அழிக்க முடியும் என தமது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சலவைத்தூளானது எந்த மேற்பரப்பிலிருந்தும் வைரஸுக்களை 30 செக்கன்களில் நீக்குவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதன்போது மேற்பரப்புகளிலிருந்து எவ்வளவு வைரஸ் மனிதனுக்கு தொற்ற முடியும் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்றபோதும், மேற்பரப்புகளிலிருந்து சுமார் 31சதவீதத்திற்கும் அதிகமான அளவான வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என ஆய்வாளர் கள் மதிப்பீடு செய்துள்ளனர்.