சந்திரயான் 2: ‘பரபரப்பான கடைசி 15 நிமிடங்கள்’ – லேண்டர் தரை இறங்குவதை நீங்கள் எங்கு, எப்படி பார்க்கலாம்?
இந்தியாவின் நிலவை நோக்கிய பயணம் என்கிற லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியான சந்திரயான்-2 கடந்த ஜூலை 22ஆம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்டது.
சந்திரயான்-2இல் மூன்று முக்கிய கலன்கள் உள்ளன. முதலாவதாக, சுற்றுவட்டக்கலன் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும். இரண்டாவதாக, நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் கலன். மூன்றாவதாக, இந்த தரையிறங்கிய கலனில் இருந்து ரோவர் ஊர்தி வெளியேறும்.
சந்திரயான் விண்கலத்தின், ‘விக்ரம்’ தரையிறங்கும் கலன் சுற்றுவட்டக் கலனிலிருந்து வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக கடந்த வாரம் இஸ்ரோ தெரிவித்திருந்தது.
இந்நிலையில் செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 1:30 – 2:30 மணி அளவில் நிலவின் மேற்பரப்பை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் காலை 5:30 – 6:30 மணி அளவில் நிலவின் தென் துருவ பகுதியில் ரோவர் தரையிரக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.
இதன் கடைசி 15 நிமிடங்கள், அதாவது விக்ரம் தரையிரங்கும் கலன் நிலவின் மேற்பரப்பில், தானே நிலைநிறுத்திக் கொள்ளும் தருணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
தரையில் இருந்த எந்த கட்டுப்பாடும் இல்லாமல், விக்ரம் கலன் அதுவாகவே வழிநடத்திக் கொள்ளும் அந்தத் தருணம், “படபடப்பான 15 நிமிடங்கள்” என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இதை நீங்கள் எப்படி பார்க்கலாம்?
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பப்படும். இஸ்ரோ இணையதளத்திலும் நேரலையாக ஒளிபரப்பப்படும்.
மேலும், இஸ்ரோவின் யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களிலும் நேரலை ஒளிப்பரப்பாகும்.
பிபிசி தமிழின் ஃபேஸ்புக் மற்றும் யூ டியூப் பக்கங்களிலும் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்டும்.
Sources : BBC Tamil