ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?
மிகச் சமீபத்தில் இலங்கை வாழ் மக்களில் வாக்களிக்க தகுதியுடைய வாக்காளர்கள் அனைவரும் தமது நாட்டில் எதிர்கால ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குரிமையை பிரயோகிக்கவிருக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே.
சிலர் இந்த வாக்களிப்பால் எமக்கு என்ன பயன். சிறையில் உள்ள எமது குழந்தைகளுக்கு விடுதலை அளிப்பதாகக் கூறியும் இன்றும் அதற்குரிய ஆயத்தங்கள் நடைபெறவில்லை. நாம் இழந்த எமது காணியை மீளப்பெற முடியவில்லை என்பன போன்ற உண்மையான பிரச்சினைகளைக் கூறி நாங்கள் யாருக்கும் வாக்களிக்காமல் இருந்தால் என்ன? என்று அங்கலாய்த்துக் கொண்டு இருக்கின்றனர். இவர்களது அங்கலாய்ப்புக்கான காரணம் உண்மையேயாகும்.
ஆயினும் ஒரு விடயத்தை அவர்கள் மறந்து விடுகிறார்கள். வாக்களிக்காமல் விடுவதால் மேற்படி பிரச்சினைகள் தீருமா? என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வீட்டில், நாட்டில், உலகில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றை தீர்ப்பதற்கு அப்பிரச்சினைகளைப் பற்றி நாடுகள் ஒன்றுபட்ட மனம் இல்லாதபோதும் தொடர்ந்தும் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஒரு பொழுதும் விரக்தி மனநிலையில் இருந்து வாழ்க்கையை நடத்தக்கூடாது.
இன்று பலர் கூறும் ஒரு விடயம் என்னவெனில் ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களித்து நமக்கு என்ன பலன் வரப்போகிறது என்ற விரக்தி நிலையில் கேள்வியை எழுப்புவதை நாம் காணக்கூடியதாயிருக்கிறது. இந்தக் கேள்வி தனிப்பட்ட மக்கள் மனதில் மட்டுமல்ல சமூகத்தின் மத்தியிலும் உள்ளதை நாம் காணலாம்.
உண்மையில் அவர்கள் யோசிக்க வேண்டியதொரு விடயம் என்னவெனில் அவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்காமல் இருப்பதால் ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கப் போகிறாரா? என்பதேயாகும். ஆகவே வாக்காளர் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விடயம் வாக்களிப்பது தமது தேவைகளுக்கு மட்டுமல்ல பிறரது தேவைகளுக்காகவுமே என்பதை பற்றியாகும். அப்படிச் சிந்திக்கும் போது எமக்காக இல்லாவிட்டாலும் பிறருக்காகவாவது வாக்களிப்பது அவசியம் என்பது அவர்களுக்குப் புலப்படும். தேசிய நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை என்பதற்காகவேனும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற உண்மையை அவர்கள் உணர்வர் எனலாம்.
ஜனாதிபதித் தேர்தலின் நிலைமை
ஜனாதிபதித் தேர்தலின் நிலைமையை பின்வரும் தலைப்புகளின் கீழ் ஆராய்வது பலன் தருவதாக இருக்கும்.
1. ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட இருக்கும் கட்சிகளும் நிலைமையும்.
2. சிறுபான்மைக் கட்சிகளும் நிலைமையும்.
3. புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளின் நிலைமை.
4. மிதக்கும் நிலையில் உள்ள வாக்குக்குளின் நிலைமை
ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட இருக்கும் கட்சிகள்
ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட இருக்கும் பிரதான கட்சிகள் பல இருப்பினும் அவற்றுள் முக்கிய கட்சிகளாக உள்ளவை மூன்று கட்சிகளேயாகும். அவையாவன,
1. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான கட்சிகள்.
2. ஸ்ரீ லங்கா பொதுசன முன்னணியின் தலைமையிலான கட்சிகள்.
3. மக்கள் விடுதலை முன்னணி (J.V.P)
4. இடதுசாரிகள் ஆகியனவே முக்கிய கட்சிகளாக களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.
சில உதிரிக் கட்சிகளும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடலாம். வெற்றிபெற மாட்டோம் என்று தெரிந்தும் வெற்றி பெறுகிறோம் என்ற கோஷத்துடன் இவர்களும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இவற்றுள் உண்மையான போட்டி ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான கட்சிகளுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கட்சிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டியேயாகும். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் போட்டியையும் குறைவாக மதிப்பிட முடியாது. மிதக்கும் வாக்குகள் ஆங்கிலத்தில் FLOATING VOTE எனலாம். கிட்டத்தட்ட 25% – 30% வீதத்திற்குமிடையில் சகல தேர்தல்களிலும் இவ்வாக்குக்கள் இடம்பெறுவதை நாம் காணலாம். இவை மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடைக்கும் பட்சத்தில் தேர்தலில் அக்கட்சியும் உயரிய நிலை ஒன்றைப்பெற இடம் ஏற்படலாம். இனி ஒவ்வொரு கட்சியினதும் நிலையைப் பார்ப்போம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைமை
சென்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவிக்கான போட்டிக்கு முக்கியத்துவம் அளித்து அவரை வெற்றிபெறச் செய்தது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களேயாவார் என்பது பற்றி இரண்டு அபிப்பிராயத்துக்கு இடமில்லை. வெற்றி பெற்ற ஜனாதிபதியே அதற்குப் பாராட்டும் தெரிவித்திருந்தார். மாதுளுவாவே சோபித தேரரின் பங்கும் இக்கட்சிக்கே இருந்தது. அதேபோல் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பங்களிப்பும் குறைத்து மதிப்பிட முடியாமல் இருந்தது.
ஆனால் இந்நிலைமை இன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அபேட்சகருக்குக் கிடைக்குமா? என்பதை இன்றும் தீர்மானிக்க முடியாமல் இருக்கிறது. காரணம் இக்கட்டுரை எழுதும் போதும் கூட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணியில் உள்ள கட்சிகளின் சார்பில் யார் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடப் போகிறார் என்பது தெளிவில்லை என்பதும் ஒரு காரணமாகும்.
மூன்று நபர்களின் பெயர்களே அடிபடுகின்றன.
1. ரணில் விக்கிரமசிங்க
2. சஜித் பிரேமதாஸ
3. கரு ஜயசூரிய
ஆகியோரின் பெயர்களே அடிபடுகின்றன. ரணில் விக்கிரமசிங்க பெயர் அடிபட்டாலும் அவர் பதவிக்கு மிக ஆசைப்பட்டவர் இல்லை என்பது அவரது அரசியல் வாழ்வில் இருந்து நாம் காணக்கூடியதாயிருக்கிறது. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கும் தனது அபேட்சகர் நிலையை விட்டுக்கொடுத்ததில் இருந்து அவர் நாட்டின் நலனையே முக்கியமாகக் கருதுபவராக இருப்பதால் இம்முறை கட்டாயம் அவர் போட்டியிட அடம்பிடிப்பார் என்று கூற முடியாது. கட்சியின் தீர்மானத்திற்கு அவர் விட்டுக் கொடுப்பார். ஆகவே கட்சியிலேயே இது தங்கியுள்ளது.
சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் பாராளுமன்ற அங்கத்தவர்களின் ஆதரவு உள்ளவராவார். சில தலைவர்களும் அவரை ஆதரிக்கின்றனர். தன்னால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை வீடுகளை நிர்மாணிக்கும் பணியின் மூலம் மக்களுக்குக் காட்டி மக்களின் ஆதரவையும் பெற்றவராகிறார். அவரது பெயரும் இக்கட்சியின் சார்பில் அடிபடுகிறது.
மூன்றாவது நபராக கரு ஜயசூரியவின் பெயர் அடிபடுகிறது. கரு ஜயசூரியவின் அரசியல் வாழ்வை நாம் ஆராய்ந்தால் அவர் எந்த பதவியையும் கேட்டுப் பெற்றவர் என்று கூற முடியாத ஒரு தலைவர் என்பதைக் கண்டு கொள்ளலாம். கொழும்பு மாநகர சபையில் போட்டியிட அவர் அழைக்கப்பட்டு வெற்றி பெற்றார். பின்னர் கொழும்பு நகராதிபதியாகவும் சேவையாற்றினார். அதன்பின்னர் கம்பஹா மாவட்டத்திற்கு பாராளுமன்றத்திற்கு போட்டியிடுமாறு கட்சி கட்டளையிட்டபோது அங்கும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் எந்தப் பதவியையும் கேட்டுப் பெற்றதில்லை. கட்சியே இவருக்கான பதவியை தெரிவு செய்து அவரை நிறுத்தி வெற்றி பெறுவதை நாம் காணலாம்.
சபாநாயகராக நியமிக்கப்பட்ட அவர் பாராளுமன்ற வரலாற்றில் எந்த சபாநாயகரும் தாக்குப்பிடிக்க முடியாத ஒரு சூழ்நிலையைச் சமாளித்து இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டச் செய்தவராவார். ஆகவே அவர் தோல்வி என்பதை அறியாதவராகிறார். இவரும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட வேண்டும் என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறுவதால் இவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் இயங்கும் கூட்டணியின் அபேட்சகராக போட்டியிட இடமுண்டு. ஆகவே போட்டியிடுபவர்கள் யார் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உள்ள கூட்டுக் கட்சிகளுக்கு உள்ள பிரச்சினையாகும். எனவே போட்டி ஐக்கிய தேசிய முன்னணியின் அபேட்சகருக்கும் ஸ்ரீலங்கா பொதுசன முன்னணிக்கும் இடையே இருக்கும் என அரசியல் நோக்குநர்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுசன முன்னணியின் நிலைமை
முதன்முதலாக ஜனாதிபதி பதவிக்கு இக்கட்சி இம்முறை போட்டியிடுகிறது. முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வின் சகோதரருமான கோதத்பாய ராஜ
பக் ஷ இக்கட்சியின் சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார். சிங்கள பௌத்த மக்கள் மத்தியிலும் இராணுவ வீரர்கள் மத்தியிலும் இவர் பெரிதும் வரவேற்கப்படுபவராக விளங்குகிறார். இவர் செயற்றிறன் மிக்க ஒருவர் என்பதை இலங்கையின் உள்நாட்டுப் போரை முடிவிற்குக் கொண்டு வந்ததன் மூலமும் நாடு நகரவிருத்தி மூலம் கொழும்பையும் ஏனைய நகரையும் அழகுபடுத்தியவர் என்ற புகழையும் பெற்றவராகிறார். இவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் களம் இறங்கப்படும் நபருக்கு இடையேயே ஜனாதிபதி பதவிக்கு கடும் போட்டியேற்பட இடமுண்டு என அரசியல் ஆய்வாளர்கள் கணிப்பிடுகின்றனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் நிலைமை
மக்கள் விடுதலை முன்னணி மிகச் சிறந்த அரசியல் சித்தாந்தத்தை கொண்டவர்களை உள்ளடக்கிய கட்சியாகும். ஏழை மக்களின் நலனுக்காகவும் நாட்டின் இறைமைக்காகவும் மற்றும் நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்காகவும் போராடும் கட்சி இதுவேயாகும். இக்கட்சி மார்கஷிய சித்தாந்தத்தைக் கொண்ட கட்சியாதலால் ஆன்மீக சிந்தனையுடையவர்களைக் கொண்ட பெரும்பாலானோரின் ஆதரவைப் பெறத் தவறிய கட்சியாக விளங்குகிறது.
இக்கட்சியின் ஸ்தாபகராக விளங்கும் காலம் சென்ற விஜயவீர சிறந்த மார்க்சீய சித்தாந்தவாதியாவார். இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவராவார். அதன் பின்னர் நந்தன குணதிலக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 5 இலட்சம் வாக்குக்களுக்கு குறைவான வாக்குகளையே மக்கள் அவர்களுக்கு வழங்கினர்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அக்கட்சியின் சார்பில் இம்முறை அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி பதவிக்கு களம் இறங்கியுள்ளார்.
இக்கட்சியை பொறுத்தவரையில் இளைஞர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் புத்திஜீவிகள் உட்பட சில குறித்த மக்கள் குழுவினரின் ஆதரவு இக்கட்சிக்கேயுண்டு. யாழ் நகரில் இவர்களது போஸ்டரையே காணக்கூடியதாய் இருக்கிறது. வேறு கட்சிகள் இன்றும் தமது பலத்தை காட்டத் தொடங்கவில்லை.
தற்போது போட்டியிடும் அநுரகுமார திசாநாயக்க பொறியியலாளர் ஒருவருக்கு தேவையான தகைமைகளை கொண்டவர் போல் உள்ளார். ஆனால் அரசியலில் இவருக்கு ஒரு தனியிடம் உள்ளவராவார். சகலராலும் பேச்சுத் திறமையால் கவரப்பட்டவராவார். ஆயின் சென்ற இரு தடவையும் தேர்தலில் பெற்ற வாக்குக்களை விட கூடுதலான வாக்குகளை இக்கட்சி பெறும் என்பது உண்மையாயினும் ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான 50% + 1 வாக்குகளைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகளின் நிலைமை
ஒவ்வொரு தேர்தலிலும் சிறுபான்மைக் கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் யாரோ ஒருவர், இருவர் போட்டியிட்டுத் தோல்வியடைவது வழக்கம். மிகச் சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக சிறுபான்மை இனக் கட்சிகள் தம்மை சக்தி மிக்கவர்களாக்கிக் கொள்ளும் கொள்கையை கடைப்பிடிக்க முடியாதவர்களாக இருப்பதை நாம் காணலாம். விசேடமாக தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து இந்த ஜனாதிபதி தேர்தலில் யாரோ ஒரு பகுதிக்கே வாக்களிக்கப் போகின்றனர். இதன்மூலம் தமது பலத்தைக் காட்ட தீர்மானித்துள்ளனர். நிச்சயமாக அவர்களும் பெரும்பான்மைக் கட்சியொன்றும் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவர்கள் வெற்றி பெறுவதை யாரும் தடுக்க முடியாது.
மிதக்கும் வாக்குகள்
ஒவ்வொரு தேர்தலிலும் மிதக்கும் வாக்குகள் நூற்றுக்கு 25% இற்கு மேல் இருப்பதை நாம் காணக்கூடியதாயிருக்கிறது. இவ்வாக்குகள் தேர்தலுக்கு மிக நெருங்கிய போதே அவர்கள் ஒரு கட்சியின் பக்கம் சார்வது வழக்கம். இம்முறையும் வெல்லக்கூடியவர்கள் யார் எனப் பார்த்து அவர்கள் பக்கம் சார்வார்கள். இவர்களைப் போலவே அதாவது யார் வெற்றி பெறப் போகிறார் என்பதை இறுதி நேரம் வரையும் பொறுத்திருந்து பார்த்து விட்டு கடைசியில் வெற்றி பெறும் நபருக்கு ஆதரவளிப்பதே இந்த மிதக்கும் குழுவினரின் செயலாகும். இவர்களுடன் புதிதாக வாக்கைப் பிரயோகிப்பவர்களுக்கும் இம்மிதக்கும் வாக்காளர்களுக்கும் ஒற்றுமை உண்டு. ஆகவே இம்முறை இவர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவரே பெரும்பாலும் ஜனாதிபதியாவார் என்பதில் சந்தேகமில்லை.
மிதக்கும் வாக்காளர் கவனிப்பது என்ன?
நாட்டின் வேலையில்லாப் பிரச்சினை, வாழ்க்கைச் செலவு, பொருளாதார கஷ்டம் என்பனவற்றை மிதக்கும் வாக்காளர் கவனத்தில் எடுப்பதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது யார் வெற்றிபெறப் போகிறார்களோ அவர்களுடன் சேருவதையே அவர்கள் விரும்புவர். ஆகவே அவர்களது வாக்குகள் கிட்டத்தட்ட 30% உண்டு. இவர்கள் எப்பக்கம் சார்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவர் எனக் கூற வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும்
பொதுத் தேர்தல் நாடு பூராகவும் தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தொகுதி ஒவ்வொன்றுக்கும் ஒரு அங்கத்தவராக 225 பேர் தேசியப் பட்டியல் அங்கத்தவர் உட்பட தெரிவு செய்யப்படுவர். இது கட்சி ரீதியாக நடைபெறும். கூடுதலான ஆசனங்களைப் பெறும் கட்சி அரசாங்கத்தை அமைக்கும். குறைந்தளவு ஆசனங்களைப் பெற்ற கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும். ஆகவே ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் ஒரு அங்கத்தவர் தெரிவு செய்யப்படுவார். அவர் அத்தொகுதி மக்களின் பிரதிநிதியாக இருப்பார். இலங்கையின் முழு பிரதிநிதியாக இருக்க மாட்டார். எனவே அந்த அங்கத்தவர் இனரீதியாக, மத ரீதியாக அல்லது வேறு அத்தொகுதியின் நலனுக்காக தெரிவு செய்யப்படுபவராக இருப்பார்.
ஆனால், ஜனாதிபதியானவர் மேலே கூறியவாறு ஒரு தொகுதிக்கு மட்டும் ஜனாதிபதியாக இல்லாமல் முழு இலங்கைக்கும் ஜனாதிபதியாகவே விளங்குவார். ஆகவே இவர் இன ரீதியாகவோ மத ரீதியாகவோ அல்லது அவரது விசேட சேவைக்காகவோ முழு இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதில்லை. ஆகவே ஜனாதிபதியாக ஒருவரைத் தெரிவு செய்யும் போது ஒரு வாக்காளர் எண்ணுகிற எண்ணத்துக்கும் தேர்தல் தொகுதியொன்றின் அங்கத்தவராக ஒருவர் தெரிவு செய்யப்படுவதற்கும் வாக்காளர் கவனிக்கும் அபேட்சகரின் தகைமைகள் வெவ்வேறானவையாகும்.
ஜனாதிபதி தேர்தலில் இடைத் தேர்தல் இல்லை. ஒருவரே இறுதி வருடம் வரையும் இருப்பார். இந்நிலையில் வாக்காளர் கவனிக்க வேண்டியது முழு நாட்டிற்கும் பொதுவானவர் யார் என்பதையே. இதற்கு நல்ல உதாரணமாக இருப்பவர் இங்கிலாந்தில் வின்சன்ட் சர்ச்சில் ஆவார். இவர் யுத்தத்தில் இங்கிலாந்துக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த பெருமகனாவார். ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றார். யுத்தத்தில் வென்றார் என்பதற்காக எல்லாத் தேர்தலிலும் அவரை வெல்ல வைக்க வேண்டுமென்ற எண்ணம் ஆங்கிலேயரிடம் இல்லை. அதுவே ஜனநாயகப் பண்பு ஆகும்.
மிதக்கும் வாக்காளர், புதிய வாக்காளர், தொகுதி வாரியாக சிறுபான்மையினர் ஒருவரது இனம், மதம், அவர் ஆற்றிய சேவையைக் கணக்கில் எடுக்காது இறுதியில் அவரது சேவை முழு நாட்டிற்கும் பொதுவானதா? என்பதைப் பார்ப்பது இதனாலேயாகும். புதியவர்கள் புதிய பதவிக்குத் தெரிவு செய்யப்படுவது இதனாலேயேயாகும். ஆகவே இலங்கையில் நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தல் இந்த எண்ணத்தை சித்திரிக்குமா? எனப் பார்க்க வேண்டும். அப்போது இலங்கை வாழ் மக்கள் ஜனநாயகத்தைச் சரியாக புரிந்து கொண்டார்கள் என்பது விளங்கும்.
தொகுப்புரை
இம்முறை நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியமானதாகும். நாடு மிகச் சமீபத்தில் முகம் கொடுத்த மிலேச்சத்தனமான தாக்குதலில் இருந்து தற்போது விடுபட்டுள்ளது. முழு இலங்கையரும் இன, மத, இடம் என்பவற்றைப் பாராது இத்தாக்குதலில் இருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளனர். இதனைச் சாட்டாக வைத்து சிலர் தமக்கே முத்திரை குத்தப் பார்க்கின்றனர். ஆகவே வாக்காளர் அவர்களை அறிந்து தங்களது வாக்கை உபயோகிக்க வேண்டும்.
எந்த ஒரு மதத்திற்கும் இனத்திற்கும் மற்றும் ஆசாபாசங்களுக்கும் இடம் கொடுக்காத பொதுவான ஒருவரே ஜனாதிபதியாக வர வேண்டும் என எண்ணி வாக்களிக்க வேண்டும். இன சகோரத்துவமும் பொருளாதார அபிவிருத்தியும் முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டும்.
கே.ஜீ. ஜோன்
(சட்டத்தரணியும் ஆய்வாளரும்)
Sources : –virakesari.lk