ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் தேசிய சம்பள ஆணைக்குழு நியமனம்
தேசிய சம்பளக் கொள்கையொன்றை தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கும் உதவுவதற்கும் தேசிய சம்பள ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவினால் இவ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி அவ்வப்போது திருத்தங்களுக்குட்பட்டு வந்த தேசிய சம்பளங்கள் மற்றும் ஆளணி ஆணைக்குழு இரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய ஆணைக்குழுவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றுமுன்தினம் நள்ளிரவு வெளியிடப்பட்டது.
அரச மற்றும் தனியார் துறைகளின் சம்பளங்கள் மற்றும் வேதனங்களின் பேண்தகைமையை தொடர்ச்சியாக பேணுவதற்காக அத்துறைகளின் சம்பளங்கள் உள்ளிட்ட அனைத்து ஊதிய கட்டமைப்புகளையும் மீளாய்வு செய்து, அரசத் துறையிலும் தனியார் துறையிலும் தொழிற்படை தேவைக்கேற்ப இதனை மேற்கொள்வது இதன் நோக்கமாகும்.
உபாலி விஜேவீரவின் தலைமையிலான இவ் ஆணைக்குழு 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. சந்திராணி சேனாரத்ன, கோத்தாபய ஜயரட்ன, சுஜாதா குரே, மதுரா வேஹேல்ல, எம்.எஸ்.டி.ரணசிறி, வைத்தியர் ஆனந்த ஹப்புகொட, உயர் நீதிமன்ற நீதியரசர் சஞ்ஜீவ சோமரத்ன, அஜித் நயனகாந்த, ரவி லியனகே, சரத் எதிரிவீர, பேராசிரியர் ரஞ்சித் சேனாரத்ன, பொறியியலாளர் ஆர்.எம்.அமரசேகர மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஸ்ரீ ரணவீர, டபிள்யூ.எம்.பியதாச ஆகியோர் இவ் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.