செய்திகள்

டிரம்ப் – நரேந்திர மோதி சந்திப்பு: ‘எங்களின் பிரச்சனைகளை நாங்களே தீர்த்துக்கொள்வோம்’

பிரான்ஸில் ஜி7 மாநாடு நடந்துவரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பை இந்திய பிரதமர் நரேந்திர மோதி சந்தித்து பேசியுள்ளார்; இருவரும் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதித்தனர்.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், ஜி7 மாநாட்டில், இருதரப்பு சந்திப்பின் ஒரு பகுதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோதியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசியுள்ளார் என்று தெரிவித்துள்ளது.

“நாங்கள் காஷ்மீர் குறித்து நேற்றைய சந்திப்பில் பேசினோம். காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக பிரதமர் மோதி எண்ணுகிறார். அவர்கள் (இந்தியா) பாகிஸ்தானுடன் இது தொடர்பாக பேசி வருகிறார்கள். நிச்சயமாக இது நல்ல விஷயமாக முடிவடையும் என்று நம்புகிறேன்.” என்று டிரம்ப் தெரிவித்துள்ளது குறித்து ஏஎன் ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

“இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்பான அனைத்து விஷயங்களும் இருநாடுகள் சார்ந்தது. அதனால்தான் பிற நாடுகளுக்கு நாங்கள் தொந்தரவு செய்யவிரும்பவில்லை”. என நரேந்திர மோதி தெரிவித்தார்.

“1947ஆம் ஆண்டுக்கு முன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக இருந்தன. எனவே எங்களின் பிரச்சனைகளை நாங்களே விவாதித்து, தீர்த்துக்கொள்வோம் என நான் நம்புகிறேன்” என மோதி மேலும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் ஹிந்தியில் பேசினார் நரேந்திர மோதி, அப்போது இடையில் பேசிய டிரம்ப், “மோதி நன்றாக ஆங்கிலம் பேசுவார் ஆனால் அவர் பேசவிரும்பவில்லை.” என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.

முன்னதாக , கடந்த 22-ஆம் தேதியன்று பிரான்ஸ் அதிபர் மக்ரோங்கை நரேந்திர மோதி சந்தித்து பேசினார்.

இந்த பேச்சுவார்த்தையிலும் காஷ்மீர் பிரச்சனை விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

வியாழக்கிழமையன்று நரேந்திர மோதி மற்றும் இமானுவேல் மக்ரோங் ஆகிய இரு தலைவர்களும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்னர் இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

நரேந்திர மோதி - இமானுவேல் மக்ரோங்படத்தின் காப்புரிமை PASCAL ROSSIGNOL

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு மக்ரோங் வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீர் பிரச்சனை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு பிரச்சனை என்றும் அதில் வேறு யாரும் தலையிடத் தேவையில்லை என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் குறிப்பிட்டார்.

Back to top button