பணத் தாளாக $10,000 பரிமாற்றம் செய்தால் தண்டனை!
ஆஸ்திரேலியாவில், “பணத் தாளாக பத்தாயிரம் டொலருக்கு கூடுதலாக வர்த்தக பரிமாற்றம் செய்தால் தண்டனைக்குரிய குற்றம்” என்ற சட்டம் வர இருக்கிறது.
உங்கள் வீட்டில் பாரிய திருத்த வேலை ஒன்றை செய்கிறீர்கள் என வைப்போம். அதை செய்து தருபவர், “நீங்கள் பணமாகத் தந்தால், 10% கழிவு தரலாம்” என்று சொன்னால் என்ன செய்வீர்கள். கேட்கும் தொகை அதிகமாக இருந்தால், கிடைக்கும் கழிவும் ஆயிரம் டொலர்களுக்கும் மேலாக இருக்கலாம் என்பதால், நீங்களும் சரி என்று அந்தக் கழிவைப் பெறுகிறீர்கள் என்றால், நீங்கள் தண்டனைக்கு உள்ளாகலாம்.
பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான GST எனப்படும் வரி கட்டாமல் விடுவதற்காக, இப்படி பல வர்த்தக பரிமாற்றங்கள் அரசை மோசடி செய்வதாக அரசு கருதுவதால், அதனைக் குற்றமாக்க சட்டம் கொண்டு வர இருக்கிறது. பத்தாயிரம் டொலருக்கும் அதிகமான தொகையை, பணத் தாளாக கொடுக்கும் ஒருவர், இரண்டு வருட சிறைத் தண்டனை மற்றும் $25,200 வரையான தண்டப் பணம் என்பவற்றை எதிர் கொள்ளலாம். இப்படி செய்வதால், அரசுக்கு சேர வேண்டிய வரிப் பணம் ஒழுங்காக வந்து சேரும் என்றும், கறுப்புப் பணத்தை ஒழிக்கலாம் என்றும், அரச அதிகாரிகள் நம்புகிறார்கள்.
வங்கிகள் ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப் பட்டு, மக்களுக்கு ஒவ்வாத பல நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது அம்பலமாகியது நாம் அறிந்த செய்தி. எனவே, இது சட்டமாக்கப்பட்டால், மக்கள் பணத்தை எப்படி கையாள்கிறார்கள் என்பதில் வங்கிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று, அதனை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள்.
வாகனங்கள், படகுகள், வீடுகள் வாங்குதல், கட்டிடங்களைப் புதுப்பித்தல் போன்ற பெரிய கொள்முதல்களை ABN என்ற ஆஸ்திரேலிய வர்த்தக எண் உள்ள வர்த்தகங்களிடம் பெற்று, அதற்கு பணத்தாள்களை வழங்குபவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தும்.
10,000 என்ற தொகை அதிகம் என்றும் அது 2,000 முதல் 5,000 என்று வரையறுக்கப்பட வேண்டும் என்று KPMG என்ற கணக்கியல் நிறுவனம் வாதிடுகிறது. ஆனால், ஜமைக்கா, மெக்ஸிகோ, உருகுவே மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலும் இப்படியான தொகை தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதால், $10,000 என்ற தொகை சரியானது என்று ஆஸ்திரேலிய மத்திய வங்கி அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
ABN இல்லாத தனியார் ஒருவர் இன்னொருவருக்கு விற்பனை செய்யும் போதோ அல்லது ஒரு நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தும் போதோ, வரவிருக்கும் இந்த சட்டம் பொருந்தாது என்று அரசாங்கம் கூறுகிறது.
இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், 2020 ஜனவரி முதல் நாள் நடைமுறைக்கு வரும்.