“போரின் இறுதிக் கட்டத்தில் முறைகேடுகள் நடக்கவில்லை!”
Sources : – SBS Tamil
இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் தனது கட்டளையின் கீழ் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுவதை நிராகரித்தார்.
கடந்த வாரம் இராணுவத் தளபதியாகப் பதவியேற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்தன என்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கென ஒரு தனி நாடு அமைக்க இலங்கை அரசுடன் நடத்திய போர் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.
“நிச்சயமாக அந்த குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன்” என்று தனது நியமனத்திற்குப் பின்னர் நடத்திய முதல் ஊடக மாநாட்டில், ஷவேந்திர சில்வா செய்தியாளர்களிடம் கூறினார். “அவை குற்றச்சாட்டுகள். யார் வேண்டுமானாலும் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும்” என்று அவர் மேலும் சொன்னார்.
ஷவேந்திர சில்வா இலங்கையின் புதிய இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் தலைவர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்ததோடு, போருக்குப் பிந்தைய நீதி மற்றும் நல்லிணக்க செயல்முறையை இது குறை மதிப்பிற்கு உட்படுத்துவதாகக் கூறின.
போரின் இறுதி நாட்களில், விடுதலைப் புலிகளின் தளத்தை சுற்றி வளைத்த குழுக்களில் ஒன்றான 58 வது பிரிவின் பொறுப்பில் ஷவேந்திர சில்வா இருந்தார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் 2015 ஆம் ஆண்டு நடத்திய விசாரணையின் படி, புதுமாத்தளன் பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றும் பணி ஷவேந்திர சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஒரு மருத்துவமனை மற்றும் ஐ. நா. முகாம் ஆகிய இரண்டும் ஷெல் தாக்குதல்களுக்குள்ளானதை ஆதாரங்களுடன் கண்டறிந்தது. அதன் போது கொத்துக் குண்டுகள் (cluster-type munitions) பயன்படுத்தப்பட்டதாக சாட்சிகள் கூறினர்.
இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாக, இலங்கை அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உறுதியளித்தது. ஆனால், இன்று வரை வாது குறித்து எதுவும் செய்யப்படவில்லை.
மோதலின் இறுதி மாதங்களில் சுமார் 45,000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது