மலேசிய வனப்பகுதியில் தங்கியிருந்த 100 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது
மலேசியா கோலாலம்பூர் அருகே வனப்பகுதியில் தங்கியிருந்த 80 குடியேறிகளை மலேசிய குடிவரவுத்துறை கைது செய்துள்ளது. Segambut Dalam என்ற பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த வீடுகளில் 100 க்கும் மேற்பட்ட குடியேறிகள் தங்கியிருந்திருக்கின்றனர்.
இந்த பகுதியில் ஒப்ரேஷன் சபூ என்ற பெயரில் நடந்த தேடுதல் வேட்டையில் கைதான 80 பேரில் 42 பேர் வங்கதேசிகள், 37 பேர் இந்தோனேசியர்கள், ஒரு வியாட்நாமியர் இருந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
“வனப்பகுதியின் உள்ளே நடு இரவில் நடந்த தேடுதல் வேட்டையில் 117 பேர் பரிசோதிக்கப்பட்டு பல்வேறு குற்றங்களுக்காக 80 குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்,” எனத் தெரிவித்திருக்கிறார் கோலாலம்பூர் குடிவரவு உளவுத்துறையின் தலைமை அதிகாரி ஷரூல்நிசாம் இஸ்மயில்.
இதில் கைதான அனைத்து குடியேறிகளும் 20 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் மீது குடிவரவுச்சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த வீடுகள் மூன்றாண்டுகளில் கட்டிப்பட்டிருக்கலாம். இப்பகுதியில் தேடுதல் வேட்டை நடப்பது இதுவே முதல்முறை,” எனத தெரிவித்திருக்கிறார் குடிவரவுத்துறை அதிகாரி இஸ்மாயில்.
வனப்பகுதியிலிருந்த 50 வீடுகளுக்கும் தண்ணீர், மின்சார வசதி இருந்ததாகவும், பிரதானமாக மரங்களில் கட்டப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. சட்டவிரோதமாக தங்கியுள்ள குடியேறிகளை வேலைக்கு அமர்த்துபவர்களும் அப்பகுதியில் கண்டெய்னர் வடிவ வீடுகளில் தங்கியிருந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த வனப்பகுதியில் தங்கியிருந்த குடியேறிகள் கட்டுமான வேலைகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.