விளையாட்டு
அரை இறுதிக்கு இனி யார் தகுதிபெறமுடியும்?
Sources : BBC Tamil
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்துக்கு நகரவிருக்கிறது. தற்போதைய சூழலில் இரு அணிகள் மட்டுமே அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் வேறு எந்த அணிகள் அரை இறுதிக்கு நுழையக்கூடும் என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை.
புள்ளிப்பட்டியலில் அனைத்து அணிகளும் எட்டு போட்டிகள் விளையாடி முடித்துவிட்டன. அதன் அடிப்படையில் தற்போது 14 புள்ளிகளோடு ஆஸ்திரேலியா முதலிடத்தில் இருக்கிறது.
இந்தியா 13 புள்ளிகளோடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
நியூசிலாந்து 11 புள்ளிகளோடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது
இங்கிலாந்து 10 புள்ளிகளோடு நான்காவது இடத்திலும் பாகிஸ்தான் 9 புள்ளிகளோடு ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
அரை இறுதிக்குத் யார் தகுதி பெறவுள்ளனர் என்பதை இரு முக்கியமான போட்டிகள் நிர்ணயிக்கவுள்ளன.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரை இறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். ஆனால் தோல்வி பெறும் அணி பாகிஸ்தான் – வங்கதேசம் இடையிலான ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
பாகிஸ்தான் – வங்கதேசம் இடையிலான போட்டி ஜூலை ஐந்தாம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பாகிஸ்தான் தோற்றுவிட்டால் ரன்ரேட் கவலைகள் யாருக்கும் ஏற்படாது. ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரை இறுதியில் விளையாடும்.
CHRISTOPHER LEE-IDI
நியூசிலாந்து, பாகிஸ்தான் வென்றால்?
நியூசிலாந்து – இங்கிலாந்து இடையிலான போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெறும் பட்சத்தில், பாகிஸ்தான் வங்கதேசத்தை தோற்கடித்தாலே 11 புள்ளிகளோடு நேரடியாக அரை இறுதிக்குத் தகுதி பெறும்.
இங்கிலாந்து 10 புள்ளிகள் மட்டுமே பெற்று அரை இறுதியிலிருந்து வெளியேறும்.
இங்கிலாந்து, பாகிஸ்தான் வென்றால் ?
நியூசிலாந்து அணியை இங்கிலாந்தும், வங்கதேச அணியை பாகிஸ்தானும் வெல்லும் பட்சத்தில் நான்காவது அணியாக அரை இறுதிக்குள் யார் நுழைவது என்பதை ரன் ரேட் தீர்மானிக்கும்.
இங்கிலாந்து 12 புள்ளிகளோடு புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து விடும்.
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் 11 புள்ளிகளோடு இருக்கும். அப்போது ரன் ரேட் எந்த அணிக்கு அதிகமாக உள்ளதோ அந்த அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடம் பிடிக்கும்.
நியூசிலாந்து தற்போது +0.572 எனும் ரன் ரேட்டில் உள்ளது. பாகிஸ்தான் -0.792 எனும் ரன்ரேட்டில் உள்ளது.
அதனடிப்படையில் பாகிஸ்தான் வங்கதேசத்தை வென்றாலும் சிக்கல் இருக்கிறது. இந்தச் சூழலில் பாகிஸ்தானை விட நியூசிலாந்துக்கு அரை இறுதியில் நுழைய ஒரு படி அதிக வாய்ப்பு இருக்கிறது.
ALAN MARTIN
இங்கிலாந்து – நியூசிலாந்து இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டால் அல்லது டையில் முடிவடைந்தால்?
இப்படியொரு சூழல் உருவானால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்படும். அதனடிப்படையில் நியூசிலாந்து 12 புள்ளிகளோடு அரை இறுதிக்குத் தகுதி பெற்றுவிடும்.
இங்கிலாந்து 11 புள்ளிகள் பெறும்.
இந்த சூழலில் பாகிஸ்தான் வங்கதேசத்தை வென்றாலும் பாகிஸ்தான் அணிக்கு 11 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் இங்கிலாந்து அல்லது பாகிஸ்தான் அணிகளில் ஏதாவதொரு அணி அரை இறுதிக்குத் தகுதி பெறும்.
இங்கிலாந்து அணி +1.000 எனும் ரன் ரேட்டில் உள்ளது. ஆனால் பாகிஸ்தான் -0.792 எனும் ரன்ரேட்டில் உள்ளது.
இந்த சூழலில் பாகிஸ்தான் ரன்ரேட்டை கணக்கில் கொண்டு வங்கதேசத்தை மிகப்பெரிய அளவில் வென்றே ஆக வேண்டும். அப்போது தான் அரை இறுதி வாய்ப்பை நினைத்துப்பார்க்க முடியும்.
பாகிஸ்தான் வங்கதேசம் இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டால் அல்லது ‘டை’யில் முடிவடைந்தால்?
இதுவும் சிக்கலான சூழலே. இப்படியொரு முடிவு கிடைத்தால் பாகிஸ்தான் 10 புள்ளிகள் பெறும்.
இங்கிலாந்திடம் நியூசிலாந்து தோற்றாலும் கூட பாகிஸ்தான் – வங்கதேசம் இடையிலான போட்டியில் மேற்கண்ட முடிவு கிடைத்தால் நியூசிலாந்து அரை இறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றுவிடும்.
ஒருவேளை நியூசிலாந்திடம் மிகமோசமான முறையில் இங்கிலாந்து தோல்வி அடைந்து பாகிஸ்தானை விட இங்கிலாந்துக்கு ரன் ரேட் சரிந்து போனால் மட்டுமே சர்பிராஸ் அணி அரை இறுதிக்குச் செல்வதற்கான வாய்ப்பு இருக்கும்.
ALAN MARTIN
இலங்கை அணிக்கு நூலிழையில் அரை இறுதி வாய்ப்பு
இங்கிலாந்து நியூஸிலாந்திடம் மிக மோசமாக தோற்க வேண்டும்; வங்கதேசம் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் அல்லது அப்போட்டி மழையால் கைவிடப்பட்டோ ‘டை” யிலோ முடிவடைய வேண்டும்; மேலும் இலங்கையிடம் இந்தியா மிகமோசமாக தோற்க வேண்டும்.
இதெல்லாம் மிகத்துல்லியமாக நடந்தால் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய மூன்று அணிகளும் 10 புள்ளிகள் மட்டுமே எடுத்திருக்கும்.
இந்த சூழலில் அதிக ரன் ரேட் வைத்திருக்கும் அணி அரை இறுதிக்குத் தகுதி பெறும்.
தற்போது புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தானை விட இலங்கை ரன் ரேட்டில் பின்தங்கியுள்ளது.
இங்கிலாந்து ( +1) , பாகிஸ்தான் (-0.792) , இலங்கை (-0.934) எனும் ரன் ரேட்டில் உள்ளன.
வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரை இறுதி வாய்ப்பை முழுமையாக இழந்தன.