நடிகர் சேதுராமன் தந்தை உருக்கம் – ‘என் மகன் கடைசியாக பகிர நினைத்தது இதுதான்!’
தமிழ்த் திரைப்பட நடிகரும், மருத்துவருமான சேதுராமன் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு மாரடைப்பின் காரணமாக மரணம் அடைந்த நிலையில், அவருடைய தந்தை விஸ்வநாதன் முக்கிய காணொளி ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
சேதுராமன் 2013ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் அறிமுகமானவர். தோல் நோய் மருத்துவரான இவர் தனியாக கிளினிக் ஒன்றை நடத்தி வந்தார்.
மேலும், இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பராவார். 36 வயதே ஆன இவருடைய திடீர் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், சேதுராமனின் தந்தை விஸ்வநாதன் அவருடைய முகநூல் பக்கத்தில் தன்னுடைய மகன் குறித்து உருக்கமான வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
படத்தின் காப்புரிமை VISWANATHAN SETHURAMAN FACEBOOK PAGEஅதில், “மார்ச் 26ஆம் தேதி என்னுடைய மகன் இயற்கை எய்தினான். இது மிகவும் மோசமான சம்பவம். அன்று மாலை 6 மணியளவில் அவர், ‘நான் நடைப்பயிற்சி முடித்துவிட்டு வருகிறேன். ஒரு தந்தை தன் மகனுக்கு பரிந்துரை செய்யும்படியான வீடியோ ஒன்றை எடுப்போம். நீங்கள் அதற்கான குறிப்புகளை எடுங்கள்’ என கூறிவிட்டு சென்றவர் உயிருடன் திரும்பவில்லை. அதுவே சேதுராமனின் கடைசி பேச்சாக இருந்தது.
எனவே, ஒரு தந்தை தனது மகனிடம் என்ன சொல்ல நினைக்கிறார் என்பதை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். முதலில், ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. அதை பின்பற்ற வேண்டும். இரண்டாவது, அனைவரும் சட்டங்களை முறையாக பின்பற்ற வேண்டும். மூன்றாவதாக நான் நினைப்பது, இப்போது இந்த நொடியில் வாழ பழகிக் கொள்ளுங்கள். இந்த நொடிதான் நிஜமானது. இதை விட்டுவிட்டு கடந்த காலத்திற்கோ, எதிர்காலத்திற்கோ செல்லாதீர்கள். இந்த நொடியை வாழுங்கள்.
இப்போது அனைவரும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறோம் என்பதால் நீங்கள் ஃப்ரீயாக இருக்கின்ற நேரத்தை பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள். எல்லா நேரமும் பிஸியாக இருக்கிறீர்கள் எனில் சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
நாம் அனைவரும் ஒரு மோசமான சூழலை தற்போது எதிர் கொண்டிருக்கிறோம். இந்த சூழலுக்கு இப்போது தைரியம் மட்டுமே தேவையாக இருக்கிறது.
கடவுளிடம், ‘என்னால் மாற்ற முடியாத விஷயத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய திறனை எனக்குக் கொடுங்கள். மேலும், என்னால் முடிந்தவற்றை மாற்றக்கூடிய தைரியத்தை எனக்குக் கொடுங்கள். இதற்கான வேறுபாட்டை உணரக்கூடிய அறிவை எனக்குத் தாருங்கள்’ என வேண்டுவோம்.
உங்களிடம் கூறியதைப் போன்று என் மகனுடைய இழப்பை என்னால் மாற்ற முடியாது. நண்பர்களே இதை நான் எனது அன்பான மகனுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். இதுவே என் மகன் கடைசியாக பகிர்ந்துகொள்ள விரும்பினார்” எனக் கூறியிருக்கிறார்.
					



