ஐ.டி நிறுவனத்தில் 7,000 பேர் ஆட்குறைப்பு: அச்சத்தில் ஊழியர்கள்
சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட் டெக்னாலாஜி சொல்யூஷன்ஸ், 2020க்குள் உலகளவில் சுமார் 7,000 பேரை பணியில் இருந்து விலக்கவுள்ளதாக வெளியான தகவல் சென்னையில் உள்ள ஐ.டி ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களின் உள்ளடக்கத்தைக் கண்காணித்து அவற்றில் உள்ள இன, மத, மொழி ரீதியான வன்முறைக்கு வித்திடக்கூடிய கருத்துகளை நீக்குவது, தனிநபர்களின் அந்தரங்க உரிமைகளை மீறும் வகையிலான பதிவுகளை நீக்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் ‘கண்டெண்ட் மாடரேஷன்’ துறையில் இருந்து விலக உள்ளதாகவும், அடுத்து வரும் காலாண்டுகளில் மூத்த நிலையில் உள்ள 7,000 ஊழியர்கள் படிப்படியாக பணியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றபோதும், ஊழியர்கள் மத்தியில் வேலை பறிக்கப்படுமோ, அடுத்த வேலைக்கு இப்போதே முயற்சி செய்ய வேண்டுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
சென்னையில் எத்தனை ஊழியர்களை பணியில் இருந்து நீக்கப் போகிறார்கள் என இதுவரை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என பிபிசி தமிழிடம் கூறினார் பெயர் கூற விரும்பாத காக்னிசண்ட் ஊழியர் ஒருவர்.
”ஒவ்வோர் ஊழியருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை மதிப்பீடு இருக்கும். அதுமட்டுமல்லாது இதுபோன்ற நெருக்கடி சமயத்தில் பணியாளர்களின் திறன்களை சோதிக்கிறோம் என அறிவிப்பார்கள். இதற்கு முந்தைய காலத்தில் நடந்த மதிப்பீடுகளை வைத்துக்கொண்டு, தற்போது குறைத்து மதிப்பெண் கொடுத்து, எங்கள் நிறுவனத்திற்கு தேவையான திறன் இல்லை என கூறிவிடுவார்கள். யாருக்கு வேலை பறிக்கப்படும் என்ற பயத்தில் இருக்கிறோம்,” என்கிறார் அந்த ஊழியர்.
”வேலையில் இருந்து நீக்கிவிட்டால், என் குடும்ப உறுப்பினர்களிடம் எப்படி சொல்வது எனத் தெரியவில்லை. என்னுடன் வேலைசெய்யும் நண்பர்கள் பலரும் இதே சூழலில்தான் இருக்கிறார்கள். ஆனால், எனக்கு வேலை போகக்கூடாது என்ற சுயநலமான எண்ணம் வந்துவிட்டது,” என வருத்தத்துடன் பேசுகிறார் அந்த ஊழியர்.
மற்றொரு ஊழியர் பேசுகையில் 2017ல் ஏற்பட்டது போல பெரிய அளவில் ஆட்குறைப்பு நடைபெறும் என்ற பதற்றம் காக்னிசண்ட் ஊழியர்களைத் தொற்றியுள்ளது என்றார். ”வேலையில் இருந்து நீக்கப்படுபவர்கள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.10 முதல் 18 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களாக இருப்பார்கள் என்பதால், அவர்களுக்கு மற்ற நிறுவங்களில் எளிதாக வேலை கிடைக்காது. பணியில் இருந்து நீக்கப்படுபவர்களில் ஒரு சிலர் மட்டுமே, புதிய பயிற்சிகள் மற்றும் மதிப்பீட்டில் தேறி மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள். 10,000 பேரில் வெறும் 2,000 பேர்தான் தேறுவார்கள்,”என்கிறார்.
ஐ.டி ஊழியர்களுக்கான அமைப்பை நடத்திவரும் பரிமளாவிடம் பேசினோம். ஊழியர்களை வேலையில்இருந்து நீக்க குறைந்தபட்சம் மூன்று மாதம் அவகாசம் கொடுக்கவேண்டும் உள்ளிட்ட பல விதிகளை மென்பொருள் நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை என்கிறார் பரிமளா.
”ஒரு நிறுவனம் ஆட்குறைப்பில் ஈடுபடுவதற்கு முன்னர், தொழிலாளர் நலத்துறையிடம் தெரிவிக்கவேண்டும். தற்போது காக்னிசண்ட் மூத்த பணியாளர்களை நீக்கப்போகிறோம் என தெரிவித்துள்ளது. மூத்த பணியாளர்கள் என்றால், குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி, சுமார் 40 வயதை தொடும் நபராக இருப்பார்கள்,” என்கிறார்.
”ஒரு சில நிறுவனங்கள் பணியாளர்களை நீக்குவதற்கு பதிலாக, அவர்களாகவே வெளியேற விரும்புவதாக கடிதம் கொடுக்கச் சொல்வார்கள். அடுத்தகட்டமாக மதிப்பீடு செய்கிறோம் எனக் கூறி வெளியேற்ற முயற்சிப்பார்கள். ஊழியர்கள் தொழிலாளர் நலத்துறை அல்லது நீதிமன்றம் சென்றால் வழக்கு முடிய குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும். அதுவரை வேலைக்கு செல்லாமல் இருக்கமுடியாது என்பதால் துணிச்சலுடன், பல நிறுவனங்கள் ஊழியர்களை மிரட்டுவார்கள்,” என்கிறார் பரிமளா.
ஐ.டி நிறுவன ஊழியர்கள் தாமாக முன்வந்து சங்கம் அமைத்து தங்களது உரிமைகளுக்காக போராடினால் மட்டுமே இதுபோன்ற வேலை பறிப்புகளை தடுக்கமுடியும் என்கிறார் பரிமளா.
”ஐ.டி ஊழியர்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக வழக்கு தொடரவேண்டுமெனில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதாவது வந்துள்ளதா, ஊழியர்கள் யாராவது முறையிடத் தயாராக இருப்பார்களாக என்பது முக்கியம். எங்களை போன்ற அமைப்புகள் உதவ தயாராக உள்ளோம். ஆனால் ஊழியர்கள் முன்வந்து பேசவேண்டும்,” என்கிறார் பரிமளா.
Sources : BBC Tamil
பிற செய்திகள்:
கடைசி மெக்டொனால்ட் பர்கர்: 10 ஆண்டுகள் ஆகியும் கெட்டுப் போகாமல் இருப்பது எப்படி?
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழர்களுக்கு முக்கிய வேட்பளார்கள் அளிக்கும் வாக்குறுதிகள் என்ன?
நவம்பர் மாத ராசிபலன்…. அதிர்ஷ்டம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டப்போறது எந்த ராசிக்கு தெரியுமா?
நவம்பர் மாதத்தில் துரத்தும் சந்திராஷ்டமம்.. எந்தெந்த ராசி ரொம்ப உஷாரா இருக்கனும்னு தெரியுமா?