செய்திகள்

கொரோனா வைரஸ் (Coronavirus) இலங்கையை தாக்கியது – சீனப் பயணிகளுக்கு உடனடி விசா முறை ரத்து

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவர் இலங்கையில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கை சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து வருகை தந்த ஒருவருடைய இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையிலேயே இந்த வைரஸ் தாக்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிலிருந்து வருகை தந்த அந்த பெண்ணிற்கு கடந்த 25ஆம் தேதி ஏற்பட்ட காய்ச்சலை அடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரின் இரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த வைரஸ் தாக்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே விசா தரும் முறை உடனடியாக ரத்து செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

40 வயது மதிக்கத்தக்க சீன பெண்ணொருவருக்கே இந்த வைரஸ் தாக்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக டொக்டர் சுதத் சமரவீர குறிப்பிடுகிறார்.

குறித்த பெண்ணின் இரத்த மாதிரியை மேலதிக பரிசோதனைகளுக்காக வெளிநாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் இரத்த மாதிரியின் பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெறும் வரை, அவருக்கு கொரோனா வைரஸ் சிகிச்சைகள் அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அந்தப் பெண்ணிற்கு கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சீனாவின் ஹபே மாகாணத்திலிருந்து வருகைத் தந்த பெண் ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக டாக்டர் சுதத் சமரவீர கூறினார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேசிய குழு

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்குவதை தடுக்கும் வகையில் தேசிய நடவடிக்கை குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு சுகாதார பிரிவினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

மேலும் சீனாவிலிருந்து வருகைத் தருகிற அனைத்து பயணிகளும் விமான நிலைய வளாகத்தில் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

How to protect yourself against coronavirus
How to protect yourself against coronavirus

Sources : BBC

Back to top button