சீரற்ற வானிலையால் 30,838 பேர் பாதிப்பு; மழை தொடரும் சாத்தியம்
சீரற்ற வானிலை காரணமாக 30,838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 6,696 குடும்பங்களை சேர்ந்த 22,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த 589 பேர் 29 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு – கிரான், கிண்ணையடி ஆறு பெருக்கெடுத்துள்ளது. இதனால் முருக்கன் தீவு, பிரம்படி தீவு, சாராவௌி, பொண்டுகள் சேனை உள்ளிட்ட கிராமங்களுக்கான பாதை நீரில் மூழ்கியுள்ளது. அங்குள்ள விவசாய நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
போக்குவரத்து படகு மூலம் இடம்பெறுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு – வௌ்ளாவெளி, மண்டூர், பலாச்சோலை உள்ளிட்ட கிராமங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் படகு மற்றும் உழவு இயந்திரம் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெய்துவரும் மழை காரணமாக கிண்ணியா, தம்பலகாமம் போன்ற தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மூதூர், நல்லூரில் இருந்து தோப்பூருக்கு செல்லும் பிரதான வீதியும் நீரில் மூழ்கியுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மடு – வவுனியா பெரியதம்பனையுடனான பிரதான வீதி உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அத்துடன், சின்னப்பண்டிவிரிச்சான் வீதி, பாலம்பட்டி வீதி என்பனவும் நீரில் மூழ்கியுள்ளன.
பண்டாரவளை – தந்திரியா பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வாகனங்கள் பழுதுபார்க்கும் நிலையம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
பண்டாரவளை பிரதான புகையிரத வீதியில் நேற்று இரவு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக கொழும்பிலிருந்து பதுளை செல்லும் ரயில் அப்புத்தளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மாத்தளை – பிட்டகந்த தோட்டக் குடியிருப்பில் வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பிட்டகந்த தமிழ் வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.
புத்தளம் – கல்பிட்டி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வௌ்ளம் காரணமாக 40 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேர் 2 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று, செங்கலடி குறிஞ்சி மற்றும் எல்லை கிராமங்களில் உள்ள வீடுகளில் வௌ்ளம் புகுந்துள்ளதால், 30 குடும்பங்களை சேர்ந்த மக்கள் மாஞ்சோலை மணிமண்டபத்தில் தங்கியுள்ளனர்.
ஏறாவூர்பற்று, செங்கலடி, ஐயங்கேணி, மணியபுரம் கிராமங்களில் வௌ்ளம் புகுந்துள்ளதால் 19 குடும்பங்களை சேர்ந்த மக்கள் ஐயங்கேணி தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை – ஆலையடிவேம்பு, நாவற்காடு மாதர் அபிவிருத்தி சங்க கட்டடத்தில் 28 குடும்பங்களை சேர்ந்த 79 பேர் வௌ்ளம் காரணமாக தங்கியுள்ளனர். இந்த மக்களை இன்று ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் சந்தித்தார்.
ஊவா பரணகம, கலாகம, அளுத்வத்தை பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 21 குடும்பங்களை சேர்ந்த 104 பேர் வௌியேற்றப்பட்டு அளுத்வத்தை பள்ளிவாசலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வவுனியா, செட்டிக்குளம், இலுப்பைக்குளம் பகுதியில் ஏற்பட்டுள்ள வௌ்ளம் காரணமாக 50 குடும்பங்களை சேர்ந்த 140 பேர் இடம்பெயர்ந்து அன்னை அடைக்கலம் வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Sources :- NewsFirst