சுபஸ்ரீ மரணம்: “உங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளைக் கொன்றுவிட்டீர்களே” – நீதிமன்றம் கண்டனம்
“உங்கள் மகளை வரவேற்க இன்னோரு மகளை கொன்றுவிட்டீர்களே” என பேனர் விபத்து வழக்கில் அ.தி.மு.கவின் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பள்ளிக்கரணையைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளருமான சி. ஜெயகோபால் என்பவர் துரைப்பாக்கம் – பல்லாவரம் சாலை நெடுக தன் மகனின் திருமணத்திற்கு வருகை தரும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை வரவேற்று பதாகைகளை வைத்திருந்தார்.
கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி சென்னை நெமிலிச்சேரியைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ என்பவர் கந்தன்சாவடியிலிருந்த தன் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
பள்ளிக்கரணை ரேடியல் சாலை அருகே சுபஸ்ரீ வந்துகொண்டிருந்தபோது, சரியாக கட்டப்படாத ஒரு பதாகை அறுந்து அவர் மீது விழந்தது. நிலைதடுமாறிய சுபஸ்ரீ மீது பின்னால் நெருக்கமாக வந்துகொண்டிருந்த தண்ணீர் லாரி ஏறி இறங்கியது. அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோதும், உயிரிழந்தார் சுபஸ்ரீ.
இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட லாரியின் டிரைவர் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டார். பரங்கிமலை போக்குவரத்து ஆய்வாளர், பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர், மாநகராட்சி அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பேனரை வைத்த ஜெயகோபால் கைதுசெய்யப்படவில்லை. அதற்குப் பிறகு அவர் தலைமறைவானார்.
இதையடுத்து ஜெயகோபாலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தேடலில் அவர் கிருஷ்ணகிரிக்கு அருகில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற தனிப்படையினர் செப்டம்பர் 27ஆம் தேதியன்று ஒரு தங்கும் விடுதியிலிருந்து அவரைக் கைதுசெய்தனர்.
இந்த நிலையில், ஜெயகோபால் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனது மகனின் திருமணத்திற்காக வாழ்த்துக் கூறி கட்சியினர்தான் பேனர் வைத்ததாகவும் வேண்டுமென்றோ, உள்நோக்கத்தோடோ சாலையில் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் ஏதும் தங்களுக்கு இல்லை என அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமையன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “உங்கள் மகளை வரவேற்க இன்னோரு மகளை கொன்றுவிட்டீர்களே” என மனுதரார் தரப்பிடம் கூறிய நீதிபதி, அந்த விபத்து நடைபெற்ற பிறகு இவ்வளவு நாட்கள் ஏன் தலைமறைவாக இருந்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.
அந்த விபத்து நடந்த பிறகு, தான் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததாக ஜெயகோபால் தரப்பில் கூறப்பட்டது.
இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கு விசாரணையை அக்டோபர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.