செய்திகள்

ஜியோ-வில் இருந்து பிற நெட்வொர்க் எண்ணை அழைத்தால் இனி 6 பைசா கட்டணம் – காரணம் என்ன?

ஜியோ எண்ணில் இருந்து பிற நெட்வொர்க் எண்களுக்கு கால் செய்தால் நிமிடத்துக்கு 6 பைசா வரை வசூலிக்கப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு நெட்வொர்க்கில் இருந்து இன்னொரு நெட்வொர்க் எண்ணுக்கு செய்யப்படும் கால்களுக்காக விதிக்கப்படும் கட்டணம் ஆங்கிலத்தில் இன்டர் கணெக்ட் யூசேஜ் சார்ஜ் சுருக்கமாக ஐ.யூ.சி. என்று அழைக்கப்படுகிறது.

பயனர்களுக்கு இதுவரை ஐயூசி கட்டணம் விதிக்காமல் இருந்த ஜியோ தற்போது கட்டணம் வசூலிக்கப் போகிறது. ஆனால், பயனர்களுக்கு விதிக்கப்படும் இந்தக் கட்டணத்தை ஈடுகட்டும் வகையில், ரூ.10 கட்டணம் செலுத்தியிருந்தால் அதற்குப் பதிலாக 1 ஜிபி அளவு இணைய சேவை இலவசமாக வழங்கப்படும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.

இந்த ஐயூசி கட்டணங்கள் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் நிர்ணயிப்பது. தற்போது அது ஒரு நிமிடத்திற்கு 6 பைசாவாகும். வாடிக்கையாளர்கள் எந்த ஒரு நெட்வொர்க் சேவையிடமிருந்து வரும் அழைப்புகளுக்கும் கட்டணம் செலுத்த தேவையில்லை.

அதேபோல் ஒரு ஜியோ எண்ணில் இருந்து மற்றொரு ஜியோ எண்ணுக்கு செய்யப்படும் அழைப்புகளுக்கும், ஜியோவில் இருந்து லேண்ட் லைன் தொலைபேசிகளுக்கு செய்யப்படும் அழைப்புகளுக்கும் கட்டணம் இல்லை.

ஐயூசி கட்டணத்தை டிராய் நீக்கினால், ஜியோவும் இந்த கட்டணத்தை நீக்கிவிடும் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோபடத்தின் காப்புரிமை GETTY IMAGES

இந்த கட்டணம் ஜியோ வாடிக்கையாளர்களை அழைக்கும்போது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் இந்த கட்டணம் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளில் தாங்கள், 13,000 கோடி ரூபாய் அளவுக்கு பிற மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ஐயூசி கட்டணமாக செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு டிராய் 14 பைசாவாக இருந்த ஐயூசி கட்டணத்தை 6 பைசாவாக குறைத்தது. மேலும் இது 2020ஆம் ஆண்டிற்குள் முடிவுக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதை ஆய்வு செய்ய டிராய் முடிவு செய்துள்ளது.

தற்போது ஜியோ இணைய சேவைக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கிறது.

Back to top button