தமிழிசை செளந்தரராஜன்: தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை ராஜநாமா செய்ய வேண்டும்.
எனவே புதிய தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
கடந்த 2014ஆம் ஆண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழிசை.
மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்றுள்ள இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தனின் மகள் ஆவார்.
நடைபெற்ற மக்களவைத் தேர்தல் 2019-ல் தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை, தேர்தலில் தோல்வியுற்றார்.
இன்று குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான கேரளாவின் ஆளுநர் சதாசிவத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அது நீடிக்கப்படவில்லை, ஆரிஃப் முகமத் கான் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் மஹாராஷ்டிர, ராஜஸ்தான் மற்றும் ஹிமாச்ச பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.