திருமாவளவன் குறித்து காயத்ரி ரகுராம் அவதூறு கருத்து: ட்விட்டரில் மோதல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததால் அவருடைய வீட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர். வி.சி.கவினர் தன்னை தொலைபேசியில் மிரட்டுவதாக திரைப்பட கலைஞர் காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியிருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் கூட்டம் ஒன்றில் இந்துக் கோவில்கள் குறித்தும் அங்குள்ள சிற்பங்கள் குறித்தும் மோசமாகப் பேசியதாக இரு நாட்களுக்கு முன்பாக பா.ஜ.கவின் தமிழகப் பிரிவு வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்த காயத்ரி ரகுராம், “இந்துக்கள் இவரை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடிக்கவும்” என்ற பொருள்படும்படி (all Hindus must ? if u see him anywhere out wandering.) பதிவு ஒன்றை காயத்ரி ரகுராம் வெளியிட்டிருந்தார்.
பிறகு தொடர்ந்து திருமாவளவன் ஊடங்களில் பேசியதைப் பகிர்ந்துவந்த அவர், பிறகு அவர் தன்னுடைய எண்ணை எல்லோருக்கும் பகிர்ந்து தனக்கு போன் செய்யச் சொல்லியிருப்பதாகக் குற்றம்சாட்டினார்.
பிறகு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை tag செய்து, திருமாவளவனின் ஆட்கள் தன்னை மிரட்டுவதாகக் கூறியவர், நவம்பர் 27ஆம் தேதி காலை பத்து மணிக்கு மெரினா கடற்கரைக்கு வரவிருப்பதாகவும் திருமாவளவனுக்கு தைரியம் இருந்தால் அங்கே வந்து இந்துக்களைப் பற்றித் தவறாகப் பேசட்டும் எனக் கூறியிருந்தார்.
இதற்குப் பிறகு, தவறான வார்த்தைகளில் தொடர்ந்து திருமாவளவனை அவர் திட்டியிருந்த நிலையில், திங்கட்கிழமை காலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பெண்கள் அவரது வீட்டை முற்றுகை இட்டனர். காயத்ரி ரகுராம் தற்போது சென்னையில் இல்லை. வீட்டை முற்றுகையிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிகாரபூர்வமாக ஏதும் இதுவரை தெரிவிக்கவில்லை.