பி.வி.சிந்து: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.
ஜப்பானை சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் பி.வி. சிந்து.
“இந்த பதக்கத்தை இன்று பிறந்தநாள் கொண்டாடும் எனது அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன்” என பதக்கம் வென்றபின் சிந்து தெரிவித்தார்.
இதன் மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார் பி.வி. சிந்து.
2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் முன்னிலை ஆட்டக்காரரும் ஸ்பெயின் வீராங்கனையுமான கரோலின் மெரினுக்கு எதிராக 3 செட்களில் இறுதி வரை போராடிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதியில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தார்.
அதே போன்று, கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில், பேட்மிண்டன் பிரிவில் பங்கேற்ற சிந்து, வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டு போட்டியில், பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை ஒருவர் வெள்ளிப்பதக்கம் வென்றது அதுவே முதல்முறை.
2018 காமன்வெல்த் போட்டிகளிலும் தனிநபர் பிரிவில் வெள்ளி வென்றார் பி.வி.சிந்து கலப்பு இரட்டையர் பிரிவில் அணி தங்கம் வெல்ல உதவினார்.
குவியும் வாழ்த்துக்கள்
தனது டிவிட்டர் பக்கத்தில் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சிந்துவின் ஆர்வமும், அர்ப்பணிப்பும் உத்வேகமளிக்கக்கூடியது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிந்துவின் இந்த வெற்றி பல தலைமுறை வீரர்களுக்கு ஊக்கமளிக்கக்கூடியது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.