மீண்டும் கைக்கோர்ந்த மஹிந்த – மைத்திரி: சஜித் – ரணில் தரப்பு தொடர்ந்தும் இழுபறி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இணைந்து கூட்டணியொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரில் இந்த கூட்டணியை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டமைப்பின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த புதிய கூட்டமைப்பின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் இந்த கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் சின்னமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சின்னமான தாமரை மொட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்தர பொதுஜன கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டமைப்பில் 9 கட்சிகள் இடம்பிடித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என அந்த கட்சியின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
யானை அல்லது அன்னம் சின்னத்தின் கீழ் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட தாம் கலந்துரையாடி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டமைப்பின் தலைவராக சஜித் பிரேமதாஸவும் செயற்பட கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானை சின்னத்தின் கீழ் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் சர்ச்சை நிலவி வருகின்றது.
எவ்வாறாயினும், இந்த சர்ச்சைக்கு எதிர்வரும் புதன்கிழமைக்குள் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க தாம் எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கிறார்.
இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் இதயம் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பினர் முயற்சித்து வருகின்றனர்.
எனினும், அந்த சின்னத்திற்கு மற்றுமொரு கட்சி உரிமை கோரியுள்ளது.
தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியே இதயம் சின்னத்திற்கான உரிமையை கோரியுள்ளது.
இதனால் ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது என்பது தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சை நிலவி வருகின்றது.
Sources : BBC Tamil