செய்திகள்

வெங்காய விலை: வெங்காயமில்லாமலேயே கண்களில் தண்ணீர்!

வெங்காயம் விலை உயர்வு விவசாயிகளுக்கு பலனளித்ததா? தமிழகத்தில் நிலவரம் என்ன?

இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.110 முதல் 130 வரையும், பெல்லாரி எனப்படும் பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 140 முதல் 160 வரை விற்கப்படுகிறது. தமிழகத்தில் சில இடங்களில் 200 ரூபாய்க்கும் வெங்காயம் விற்கப்படுகிறது.

இதுவே கடந்த அக்டோபர் மாதத்திற்கு முன்னர் இதன் விலை வெறும் ரூ.30 முதல் 40 வரைதான் இருந்தது. நல்ல விலையேற்றம் இருந்தும், தங்களுக்கு எந்த பலனுமில்லை என்கின்றனர் பெரும்பாலான விவசாயிகள்.

”கடந்த ஆண்டு சின்ன வெங்காயம் பயிரிட்டு கடும் நஷ்டத்தை சந்தித்தேன். இருந்தும், 3 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆண்டு சின்ன வெங்காயம் பயிர் செய்திருந்தேன். 15 டன் சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்படும் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால், வெறும் 8 டன் மட்டுமே கிடைத்துள்ளது. பயிர் இழப்பிற்கான முக்கிய காரணம் பருவநிலை மாற்றம்தான். ஒரு சமயம் தண்ணீர் இல்லாமல் வெயிலில் பயிர்கள் காய்ந்து கருகின, பின்னர் அதிக மழைப்பொழிவால் எஞ்சியிருந்த பயிர்களும் அழுகிப்போனது” என்கிறார் கோவையில் உள்ள நரசிபுரத்தைச் சேர்ந்த விவசாயி கலைச்செல்வன்.

”தற்போது, விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால் ஓரளவுக்கு இழப்பீடை சமாளிக்க முடிகிறது. சென்ற ஆண்டு ஐந்து லட்ச ரூபாய் முதலீடு செய்து இரண்டு லட்சம் கிடைத்தது, ஆனால், இந்த ஆண்டு முதலீடு செய்த அசல் தொகையை எடுக்கும் அளவிற்கு வியாபாரம் உள்ளது. குத்தகை நிலத்தில் சின்ன வெங்காயம் பயிரிட்ட சிறு குறு விவசாயிகள் இந்த ஆண்டும் நஷ்டத்தையே சந்தித்துள்ளனர்” என்கிறார் விவசாயி கலைச்செல்வன்.

”தமிழகத்தில் வெங்காய உற்பத்தி சரிவு குறித்து, கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக, காய்கறி அறிவியல் துறை தலைவர், பேராசிரியர், முனைவர். ஸ்வர்ணப்ரியா பிபிசியிடம் பேசுகையில், ”மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், பஞ்சாப், ஆந்திரபிரதேசம், மேற்கு வங்காளம், ஹரியானா, உத்தர பிரதேசம், ஒடிசா, சட்டீஸ்கர், குஜராத் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் பெல்லாரி உற்பத்தி செய்யப்படுகிறது” என்று கூறினார்.

”தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. சுமார் 30,600 ஹெக்டர் அளவிற்கு, 3 லட்சம் டன் வெங்காயம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது” என்று கூறினார் கலைச்செல்வன்.

”இதில் 90 சதவீத பகுதியில் சின்ன வெங்காயமும், 10 சதவீதத்திற்கு பெல்லாரியும் பயிரிடப்படுகிறது. பொதுவாக ஏப்ரல், மே, ஜூன், அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் வெங்காயம் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்ததால் தமிழகத்தில் வெங்காய உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டது. மேலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் பயிரிடப்பட்டுள்ள வெங்காய பயிர்களும் அதிக ஈரப்பதம் காரணமாக நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன” என்றார் கலைச்செல்வன்.

தமிழகத்தைப் போன்றே வடமாநிலங்களிலும் பருவமழை அதிகம் பெய்ததால் வெங்காய வரத்து குறைந்து, அதன் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் பெருமளவு பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான் என பெரும்பாலானோர் கருத்து தெரிவிக்கின்றனர்.

வெங்காயம் மற்றும் தக்காளிபடத்தின் காப்புரிமை GETTY IMAGES

“சமையலுக்கான அடிப்படை காய்கறிகள் வெங்காயம் மற்றும் தக்காளி. இவை இரண்டும் இல்லாமல் பெரும்பாலும் சமையல் செய்ய முடியாது. எனவே, எவ்வளவு விலை உயர்வு ஏற்பட்டாலும், இவற்றை வாங்கி பயன்படுத்தித்தான் ஆகவேண்டும். பொதுவாக, 4 வெங்காயம் பயன்படுத்தும் சமையலுக்கு, இப்போது இரண்டு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, உணவகங்கள் வெங்காய விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன” என்கிறார் குடும்பத்தலைவி ராஜேஸ்வரி.

வெங்காய விலை உயர்வால், உற்பத்தியாளரான விவசாயிகளும், பொதுமக்களும் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், இருவருக்கும் இடையில் உள்ள வியாபாரிகள் தான் பலன் பெறுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

“வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது அதன் உற்பத்தியாளர்களான விவசாயிகள் கிடையாது, வியாபாரிகள் தான் விலையை உயர்த்தி லாபம் பார்க்கின்றனர். சென்ற ஆண்டு நல்ல விளைச்சல் இருந்தும், வெங்காய விவசாயிகளுக்கு விலை கிடைக்கவில்லை”

இந்த ஆண்டு நல்ல விலை இருந்தும், விளைச்சல் எடுக்க முடியவில்லை. இதில் பாதிக்கப்படுவது விவசாயிகளும், பொதுமக்களும் தான். மீண்டும் வெங்காய சாகுபடி செய்ய விதை வெங்காயம் வாங்கிட வேண்டும், அதன் விலை மற்ற வெங்காயத்தைவிட அதிகம்” என்று கூறுகிறார் விவசாயிகள் சங்க பிரதிநிதியான பொன்.கந்தசாமி.

“இப்படி, அதிக முதலீடு, கடன், நஷ்டம், பருவநிலை மாற்றம் என விவசாயிகளுக்கு பாதிப்புகள் மட்டுமே எஞ்சியுள்ளது. எனவே, அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு வேளாண் பொருட்களின் விலையை விவசாயி நிர்ணயம் செய்யும் நிலையை உருவாக்க வேண்டும். அப்போது தான் பதுக்கல் குறைந்து, விலை ஏற்றம் சரியாகும்” என்கிறார் பொன்.கந்தசாமி.

இதுகுறித்து மொத்த வியாபாரிகள் சிலர் கூறுகையில், “விவசாய நிலத்தில் இருந்து விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு வர போக்குவரத்து செலவு, வேலை ஆட்கள் சம்பளம் ஆகியவை உள்ளன. இதனால், அதன் விலையும் சற்றே உயர்த்தப்படும். விலை உயர்வின் மொத்த லாபமும் வியாபாரிகளுக்கு தான் என்பதை ஏற்க முடியாது. குறிப்பாக, மொத்த விலை வியாபார்களுக்கு விலை உயர்வால் அதிக லாபம் கிடைப்பதில்லை. ஆனால், சில்லறை வனிகர்களுக்கு தான் அதிக லாபம் கிடைக்கிறது” என்கின்றனர்.

சில்லரை வியாபாரிகள் தரப்பில் வாடிக்கையாளர்களின் தேவை, சந்தையில் பொருட்களின் தட்டுப்பாடு, வாங்கும் விலை மற்றும் செலவுகளை கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்யப்படுவதாக கூறுகின்றனர்.

டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் குளிர் காலத்தின் பாதிப்புகளாலும், பண்டிகை நாட்கள் இருப்பதாலும் வெங்காய விலை மேலும் உயரும் எனவும், ஜனவரி மாதத்தில் அறுவடை செய்யப்படும் அளவை பொறுத்து வெங்காய தட்டுபாடு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

“வெங்காயம் இலவசமாக தந்ததால் உயர்ந்த செல்போன் விற்பனை”: தஞ்சாவூர் கடைக்காரரின் அசத்தல் யோசனை

Back to top button