செய்திகள்

வேலணையில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டவருக்கு கொரோனா

யாழ்ப்பாணம், வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கெக்கிராவையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதுடன், அவர் கொவிட் – 19 சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 200 பேரிடம் எழுமாறாக எடுக்கப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அதில் வேலணை புளியங்கூடல் வீதித் திருத்தப்பணிக்கு வருகை தந்த தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களும் அடங்கியிருந்தனர்.

இந்நிலையில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய 199 பேருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, புளியங்கூடல் பகுதியில் 2 வர்த்தக நிலையங்கள் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில் இன்று காலை மூடப்பட்டுள்ளன. அத்துடன், இன்று காலை 9 மணிவரை 10 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், மேற்கொண்டு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Back to top button