செய்திகள்

2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான பலன்கள்

2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான பலன்கள் 1

மேஷ ராசிக்கான பலன் பார்க்க இங்கே செய்யவும்

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கான பலன் பார்க்க இங்கே செய்யவும்


ரிஷப ராசி! நினைக்க இயலாத ராஜ யோகம் வரலாம்

2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான பலன்கள் 2


விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தமிழ் புத்தாண்டு தினத்தன்று கடக லக்னம் லக்னத்தில் சந்திரன், மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய் மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் குரு, சனி, கேது கும்ப ராசியில் சுக்கிரன், மீனம் ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
விகாரி ஆண்டில் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 18ஆம் தேதி நவம்பர் 4ஆம் நாள் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார்.
வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பகவான் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.

[post_ads]

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டில் நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 27,2020ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை நிகழ்கிறது.

கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து ரிஷப ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
(கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 பாதங்கள் வரை)
ரிஷப ராசி நேயர்களே,
விகாரி வருடம் பிறக்கும் நட்சத்திரம் ஆயில்யம் ஆகும். ஆயில்யத்திற்குரிய கிரகமான புதன் உங்கள் ராசிக்கு தன பஞ்சமாதிபதியாவார். எனவே இந்தப் புத்தாண்டை பணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆண்டாகக் கருதலாம். அதுமட்டுமல்ல சகாய ஸ்தானத்தில் கடக லக்னம், கடக ராசியில் ஆண்டின் தொடக்க நாள் அமைகின்றது.
எனவே எதை எதை எல்லாம் சென்ற ஆண்டில் எதிர்பார்த்துக் காத்திருந்தீர்களோ, அவைஅனைத்தும் ஆண்டின் தொடக்கத்தில் வைகாசிக்கு மேல் ஒவ்வொன்றாக நடைபெற்று உள்ளத்தை மகிழ்விக்கப் போகின்றது.
வருடத்தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். மேலும் 8-ம் இடத்தில் குரு, சனி ஆகிய கிரகங்களும் இருக்கின்றன. அஷ்டம ஸ்தானம் வலுவாக இருப்பதால் நிறைய விரயங்கள் ஏற்படுமோ என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். 2-ல் ராகு இருப்பதால் திரண்ட செல்வம் வரும். அந்த செல்வத்தை முழுமையாகச் செலவிடும் விதத்தில் பல வாய்ப்புகள் உங்களுக்கு வரும்.
பழைய நகைகளைக் கொடுத்துவிட்டுப் புதிய நகைகள் வாங்குதல், பெண் குழந்தைகளின் கல்யாணச் சீர்வரிசைப் பொருட்களை வாங்க முன்வருதல் போன்றவற்றில் கவனத்தைச் செலுத்தலாம். சென்ற ஆண்டில் வீடு கட்டும் முயற்சி பாதியிலேயே தடைபட்டிருக்கலாம்.

[post_ads]


அந்தத் தடைகள் இப்பொழுது நிவர்த்தியாகி கட்டிடப் பணியைத் தொடரும் வாய்ப்புக் கிட்டும். ஒருசிலர் வீட்டை விரிவுசெய்யலாம். வயல்கள், தோட்டம் வாங்கும் யோகம் கூட ஒருசிலருக்கு உருவாகலாம். தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடுகள் செய்யும் யோகமும் உண்டு.
கூட்டு முயற்சியில் இனி மாறுதல் ஏற்படலாம். அஷ்டமத்துச் சனியால் நட்பு திடீர்,திடீரென பகையாக மாறும் சூழ்நிலை உருவாகலாம். ஆனால் சகாய ஸ்தானம் பலம்பெற்று இருப்பதால் விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்திணைந்து உங்களுக்கு உறு துணைபுரிவர். பெற்றோர்களின் உடல்நிலையில் மட்டும் மிகுந்த கவனம் தேவை.
ராகு-கேதுக்கள் 2, 8 ஆகிய இடங்களில் இருக்கும் பொழுது ஏற்றமும், இறக்கமும் வந்துகொண்டேயிருக்கும்.
தனுசு குருவின் சஞ்சாரம்
(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)
இக்காலத்தில் குருவினுடைய பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது. நவக்கிரகங்களில் சுபகிரகமாக கருதப்படுவது குரு. அப்படிப்பட்ட குரு வாக்கு, தனம், குடும்பம் என்பதைப் பற்றி எடுத்துரைக்கும் 2-ம் இடத்தைப் பார்ப்பதால் வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும். வருமானம் இரு மடங்காக உயரும். குடும்ப ஒற்றுமை பலப்படும்.
குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் தாய் வழி ஆதரவு திருப்தியாக இருக்கும். சுகங்களும், சந்தோஷங்களும் வந்து சேரும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுபவர்களுக்கு இப்பொழுது புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கைகூடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாகி அவர்கள் மூலம் சலுகை கிடைக்கும்.
படிப்பைத் தொடர விரும்புபவர் களுக்கு குருவின் பார்வை பலத்தால் கல்வி ஸ்தானம் புனிதமடைவதால் நல்ல மதிப்பெண் கிடைக்கும். மேற் படிப்பிற்கான இடம் எளிதில் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க விரும்புபவர்களுக்கு வௌிநாட்டு யோகமும் கைகூடும். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும்.

[post_ads]


வங்கியில் உள்ள சேமிப்புகள் கரைந்து விடுகின்றதே என்று கவலைப்பட்டவர்களுக்கு கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டப் புதிய வாய்ப்பு கள் கைகூடி வரும். நிலபுலன்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கருப்பு நிறப் பயிர்களும், கரும்புப் பயிர்களும் அமோக விளைச்சலைக் கொடுக்கும். இழந்த சொத்துக்களை மீண்டும் வாங்கும் விதத்தில் நல்ல தகவல் கிடைக்கும்.
குருவின் 5-ம் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் செலவிற்கேற்ற வரவு வந்து கொண்டே இருக்கும். கையில் பணம் வைத்துக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டும் என்பது இல்லை. காரியத்தைத் தொடங்கி விட்டால் காசு, பணப்புழக்கம் தானாகவே வந்து சேரும்.
கல்யாண மண்டபங்கள் கட்டுவது, விடுதிகளை கட்டுவது போன்றவற்றில் ஒருசிலர் ஆர்வம் காட்டுவர். மூதாதையர்களின் சொத்துக்களில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். பகைவர்களைப் பற்றிய பயம் அகலும்.
பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் வந்து அமர்வர். வரவேண்டிய சம்பளப்பாக்கிகள் தானாக வந்து சேரும். இடமாற்றம், இலாகா மாற்றம் போன்றவற்றை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு சம்பள உயர்வோடு மாற்றம் வரலாம்.
விருச்சிக குருவின் சஞ்சாரம்
(18.5.2019 முதல் 28.10.2019 வரை)
இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும், பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்குள்ளேயே உலா வருகின்றார். இக்காலத்தில் குருவின் பார்வை 1, 3, 11 ஆகிய இடங்களில் பதிவாகின்றது.
எனவே தேக நலன் செயல்பாடுகள், கவுரவம், அந்தஸ்து, வெற்றிச்செய்திகள், மகிழ்ச்சியான மனோநிலை, சகோதர வர்க்கத்தினர் உதவி ஒத்துழைப்புகள், நீடித்த வழக்குகள், பணிபுரியுமிடத்தில் வரும் முன்னேற்றம், உயர்ந்த மனிதர்களின் உதவி, கவுரவப் பதவிகள், பணப்புழக்கம், தொழிலில் லாபம் ஆகியவற்றில் எல்லாம் குருவின் பார்வை பலம் கூடுதலாகக் கிடைத்து நன்மை காணப்போகிறீர்கள்.
ஜென்ம ராசியைக் குரு பார்க்கும் பொழுது சிரமங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். தித்திக்கும் செய்தி கள் நாள்தோறும் வந்த வண்ணமாகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிய முன்வருவீர்கள்.
அரசு உத்தியோகத்திற்காக முயற்சி செய்தவர்களுக்கு அது கைகூடும். தான் மட்டும் வேலைக்குப் போவது அல்லாமல் தன் வாழ்ககைத் துணைக்கான வேலை, தன் வாரிசுகளுக்கான வேலை போன்றவற்றில் ஆர்வம் காட்டுபவர்களுக்கு அது கைகூடும்.
முன்னேற்றத்தைக் குறிக்கும் 3-ம் இடத்தையும், லாப ஸ்தானத்தைக் குறிக்கும் 11-ம் இடத்தையும் குரு பார்ப்பதால் சென்ற ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாகவே இருக்கும். கருத்து வேறுபாட்டின் காரணமாக விலகிச்சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர்.
அதுமட்டுமல்லாமல் பூர்வீக சொத்து சம்பந்தமாக ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் இதுவரை இருந்த சிக்கல்கள் தீரும். நெட்டையோ, குட்டையோ நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்ற மனநிலையோடு பாகப்பிரி வினைகளை முடித்துக்கொள்வீர்கள். லாப ஸ்தானம் பலம்பெறுவதால் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும்.
சனியின் சஞ்சார நிலை
ஆண்டு முழுவதும் சனி பகவான் அஷ்டமத்தில் தான் சஞ்சரிக்கின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகின்றார். அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை உங்கள் ராசிக்கு 2, 5, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே நினைக்க இயலாத ராஜ யோகம் வரலாம். நிகழ்காலத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்து மகிழ்வீர்கள்.
வேலைக்கு முயற்சி செய்பவர் களுக்கு வேலை, மண மாலை கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டவர்களுக்கு மணமாலை கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. தொழில் போட்டிகள் அகலும். வருமானம் எப்பொழுதும் போல சீராகவே இருக்கும். சனியின் வக்ர காலத்தில் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். பழகுபவர்கள் பகையாகி போகாமலிருக்க அனுசரித்துச் செல்வது நல்லது.
ராகு-கேதுக்களின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். ‘கரும்பாம்பு 2-ல் வந்தால் கனதனம் நிறைய சேரும்’ என்பார்கள். எனவே பணப்பற்றாக்குறை அகலும். வருங்காலம் வசந்தகாலமாக வழிவகுத்துக் கொள்வீர்கள். கேதுவின் பலத்தால் வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும் ஒருசிலருக்கு ஏற்படலாம். பயணங்களை யோசித்து ஏற்றுக்கொள்ளுங்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். நாகசாந்திப் பரிகாரம் செய்வதன் மூலம் நல்ல பலன்கள் உங்களுக்கு வந்துசேரும்.
சனி-செவ்வாய் பார்வைக்காலம்
(14.4.2019 முதல் 23.6.2019 வரை)
இக்காலத்தில் எதிரிகளின் பலம் கொஞ்சம் கூடும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளால் மனக்கவலை ஏற்படும். மன பயம் அகல மந்தன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். விரயங்கள் அதிகரிக்கும். வாங்கிய சொத்துக்களை விற்றுக் கடனை அடைக்கலாமா என்று நினைக்கத்தோன்றும். பதற்றத்தையும், படபடப்பையும் நீக்கி நிதானத்துடன் செயல்படுவதன் மூலமே நீங்கள் உங்கள் லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். செவ்வாய் விரதமும், அங்காரக வழிபாடும் தைரியத்தைக் கொடுக்கும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு ஆண்டு முழுவதும் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருந்தாலும், குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.
பக்கத்து வீட்டாரின் பகை மாறும். வாரிசுகளின் வளர்ச்சிக்காக நீங்கள் செய்த முயற்சிகள் அனைத்தும் கைகூடும். தாயின் ஆதரவு தக்க விதத்தில் கிடைக்கும். சகோதரர்களில் ஒருசிலர் உங்களோடு ஒத்துப்போவது அரிது. ஆடை, ஆபரணம் வாங்கும் அமைப்பும், அயல்நாட்டு யோகமும் உண்டு. விருச்சிகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.
அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்புகள் வரலாம். பணி புரியும் பெண்களுக்கு இடமாற்றங்கள், ஊர்மாற்றங்கள் வருவது உறுதியாகும். குலதெய்வ வழிபாடும், சுயஜாதகத்தில் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும் திருப்தியான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும்.
வருடம் முழுவதும் வசந்தகாலமாக வழிபாடு
வடக்குப்பார்த்த விநாயகரையும், வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயரையும் வழிபட்டு வாருங்கள். அனுமன் கவசம் பாடி வழிபட்டால் பணியில் ஏற்பட்ட தொய்வும் அகலும். பணவரவும் திருப்தி தரும்.

மிதுன ராசிக்காரர்களே! ஆண்டின் தொடக்கமே அமர்க்களமாம்.

2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான பலன்கள் 3
விகாரி ஆண்டில் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 18ஆம் தேதி நவம்பர் 4ஆம் நாள் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார்.
வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பகவான் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.
திருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டில் நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 27,2020ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை நிகழ்கிறது.
கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து மிதுன ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
(மிருகசீரிஷம் 3,4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள் வரை)
மிதுன ராசி நேயர்களே,
விகாரி வருடம் பிறக்கும் பொழுது, உங்கள் ராசியில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் இருக்கின்றார்கள்.
ஊர்ந்து செல்லும் பாம்பு கிரகங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கும். இடமாற்றம், வீடு மாற்றம், ஊர் மாற்றம் போன்றவைகள் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும்.
அதிசார குரு தனுசு ராசியில் சஞ்சரித்தபடி உங்கள் ராசியை சப்தம பார்வையாகப் பார்க்கின்றது. ஆண்டின் தொடக்கமே அமர்க்களமாக அமையப்போகின்றது.
வருடத் தொடக்கநாள் ஆயில்ய நட்சத்திரத்தில் கடக ராசியில் பிறக்கின்றது. தன ஸ்தானத்தில் தனாதிபதி சந்திரன் வலுப்பெற்றும், குருவின் பார்வையோடும் இந்த ஆண்டு பிறப்பதால் சென்ற ஆண்டில் நடைபெறாத காரியங்கள் எல்லாம் ஆண்டின் தொடக்கத்திலேயே நடைபெறப் போகின்றது.
[post_ads]
உடல் ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் துரிதமாக நடைபெறத் தொடங்கும்.
தகராறுகள் எல்லாம் தானாக விலகும். கூட்டுத்தொழிலில் கூட்டாளி களால் ஏற்பட்ட ஏமாற்றங்கள் அகலப் புதிய பாதை புலப்படும்.
நெருக்கடி நிலை மாறும். நிதி நிலை தேவைப்படும் அளவிற்கு மேலாகவே உங்கள் கரங்களில் புரளும். அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவோடு விருப்பப்பட்ட இடத்திற்கு மாறுதல் வாங்கிக் கொண்டு செல்ல வாய்ப்புகள் உருவாகும்.
7-ல் சனி இருக்கின்றாரே என்ன செய்யப்போகிறோம் என்று சிந்திக்க வேண்டாம். குருவோடு சில காலங்கள் அவர் கூடியிருப்பதால் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும். சுபச் செலவுகளாகவே வந்து கொண்டேயிருக்கும்.
சப்தமாதிபதி குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். “குரு பார்க்கக் கோடி நன்மை” என்பது போல குடும்ப முன்னேற்றம் கூடுதலாக இருக்கும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். திருமண முயற்சிகள் கைகூடும். சந்தோஷத்தோடு கூடிய சம்பள உயர்வுகள் வந்து சேரும்.
உங்கள் ராசிநாதன் புதன் நீச்சம் பெற்றிருக்கின்றார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நீச்சம் பெற்றிருப்பது யோகம்தான். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
உதிரி வருமானங்கள் பெருகும். தக்க விதத்தில் தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். பங்குதாரர்கள் நல்ல முறையில் பாகப்பிரிவினை களைச் செய்து கொண்டு தாங்களாகவே விலகிச் செல்ல முன்வருவர். இந்த நல்ல நேரத்தில் புதிய பங்குதாரர்கள் உங்களோடு வந்திணைந்து பொருளாதார நிலையை உயர்த்தப் பாடுபடுவர்.
தனுசு குருவின் சஞ்சாரம்
(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)
இக்காலத்தில் குருவினுடைய பார்வை உங்கள் ராசியிலும், 3, 11 ஆகிய இடங்களிலும் பதிகின்றது. எனவே தேக நலன், செயல்திறன், மகிழ்ச்சியான மனநிலை, கவுரவம், உடன்பிறப்புகளின் உதவி, வழக்குகள், மூத்த சகோதரர், பணியாளர்கள், தொழிலில் லாபம், கவுரவப்பதவி, முன்னோர் சொத்து, பணப்புழக்கம் ஆகியவற்றில் எல்லாம் குருவின் பார்வை பலத்தால் நற்பலன்கள் கிடைக்கப் போகின்றது.
‘ஜென்மத்தை குருதான் பார்த்தால் சிரமங்கள் அகன்று ஓடும்’ என்பர். இதுவரை பட்ட துயரங்கள் இனி அகன்று ஓடும். உடல்நிலை சீராகி உற்சாகப்படுத்தும். உறவினர்களின் ஒத்துழைப்பு கூடுதலாக கிடைக்கும். அரசுவழி உத்தியோக முயற்சி கை கூடும்.
உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கப் போகின்றது. உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
சென்ற ஆண்டு உங்களை விட்டுப் பிரிந்து சென்ற பங்குதாரர்கள் தவறை உணர்ந்து மீண்டும் உங்களோடு வந்திணைந்து செயல் புரியத் தொடங்குவர்.
பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். வீட்டை விரிவு செய்து கட்ட வேண்டுமென்று முயற்சித்தவர்களுக்கு அந்த முயற்சி கை கூடும். ஒருசிலர் பழைய வீட்டைப் புதுப்பிக்க நினைப்பர்.
இதுவரை நீங்கள் உங்கள் பெற்றோர்களுக்கும், உற்றார், உறவினர் களுக்கும் என்னதான் உதவி செய்தாலும் அவர்கள் உரிய விதத்தில் நன்றி காட்டவில்லையே என்று நீங்கள் நினைத்திருக்கலாம். அந்த நிலை இனி அடியோடு மாறப்போகின்றது. பெற்றோர்களின் மணிவிழா, முத்துவிழா, பவளவிழா, சதாபிஷேக விழா போன்றவற்றைக் கொண்டாட நீங்கள் முன்வருவீர்கள்.
ஆக்கப்பூர்வமான யோசனை களால் தேக்க நிலை அகலும். திறமை மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர். ஒத்துவராத பணியாளர்களை ஒதுக்கிவிட்டு புதிய பணியாளர்களை சேர்த்துக்கொள்வீர்கள்.
குருவின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கைகூடும். தடம்மாறிச் சென்றவர்கள் தானாக வந்திணையும் நேரமிது. கடைதிறப்புவிழா, கட்டிடத் திறப்புவிழா, போன்றவைகள் நடைபெறும் நேரமிது.
விருச்சிக குருவின் சஞ்சாரம்
(18.5.2019 முதல் 28.10.2019 வரை)
இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும், பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்குள்ளேயே உலா வருகின்றார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது.
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்புக் கைகூடும். குடும்பத்தில் நடைபெற இருக்கும் சுபகாரியத்தை முன்னிட்டு மனையை விரிவுபடுத்திக்கட்டும் முயற்சி அல்லது கட்டியுள்ள மனையைப் பழுதுபார்க்கும் வாய்ப்பும் உருவாகும்.
குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் இதுவரை தொழில் அமையவில்லையே என்று கவலைப்பட்டவர் களுக்கு இப்பொழுது தொழில் அமையும். படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்று நினைத்தவர்களுக்கு இப்பொழுது படிப்பிற்கேற்ற வேலை மட்டுமல்லாமல், அரசு பணிகளும் கிடைக்கலாம்.
[post_ads]
தொழிலை விரிவு செய்ய தொகை போட முடியவில்லையே, யாராவது உதவி செய்வார்களா என்று சிந்தித்தவர்களுக்கு இப்பொழுது வங்கிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும், வள்ளல்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் பயணங்கள் பலன் தருவதாக அமையும். உத்தியோகத்தில் இருந்து விடுபட்டு விருப்ப ஓய்வில் வெளிவந்து வெளியூரில் தொழில் செய்யலாமா? என்று எண்ணியவர் களுக்கு அது வெற்றிகரமாக நிறைவேறும். வீடுமாற்றம், ஊர்மாற்றம் போன்றவைகள் எதிர்பார்த்த விதம் அமையும். வியாபாரத்தில் புதிய பணியாளர்களை சேர்த்துக்கொண்டு பொருளாதார வளர்ச்சி பெருக வழிஅமைத்துக் கொள்வீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.
சனியின் சஞ்சார நிலை
ஆண்டு முழுவதும் சனி பகவான் கண்டகச் சனியாகச் சஞ்சரிக்கின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியில் வக்ரம் பெறுகின்றார். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை முழுமையாக உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே ஆரோக்கியத் தொல்லை ஓரளவு உருவாகலாம்.
குடும்பத்தினர்களிடம் குறைகளைப் பேசாமல் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே வந்து சேரும். வெளிநாட்டில் உள்ளவர்கள் வேலை கிடைக்காமல் தாய்நாடு திரும்பும் சூழ்நிலைகூட உருவாகலாம். இக்காலத்தில் சனிக்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது.
ராகு-கேதுக்களின் சஞ்சாரம்
உங்கள் ராசியிலேயே ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். எனவே பெரிய மனிதர் களின் தொடர்பும், அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும். தைரியமும், தன்னம்பிக்கையையும் தக்க வைத்துக்கொள்வது நல்லது.
குடும்பத்துடன் உல்லாசப் பயணங்கள் செல்லும் முயற்சி கைகூடும். கேதுவின் பலத்தால் விவாகப் பேச்சுக்கள் விரைவில் முடிவடையலாம். வந்து திரும்பிய வரன்கள் கூட மீண்டும் வரலாம். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். குடும்ப ரக சியங்களை வெளியில் சொல்வதால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும்.
சனி-செவ்வாய் பார்வைக்காலம்
(14.4.2019 முதல் 23.6.2019 வரை)
இக்காலத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி உங்களுக்குத் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் நண்பர்களை நம்பி ஏமாறும் சூழ்நிலை உண்டு. வழக்குகளில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். மனக்குழப்பம் அதிகரிக்கும் இந்த நேரத்தில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. அலைச்சலைக் குறைத்துக்கொள்வதன் மூலம் பிரச்சினை களிலிருந்து விடுபட இயலும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் குரு பார்வை இருப்பதால் நினைத்தது நிறைவேறும். நேசிக்கும் உறவினர்கள் யோசிக்காது வந்து உதவி செய்வர். வங்கிச் சேமிப்பு உயரும். வருமானம் போதுமானதாக இருக்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும்.
புகுந்த வீட்டிற்குப் பெருமை சேர்க்கும் நேரமிது. விருச்சிக குருவின் சஞ்சாரத்தின் போது ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படும். இடுப்பு, முதுகு, கழுத்துப்பகுதிகளில் வலி ஏற்பட்டு அகலும். வேலை ஆட்களை மாற்றும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பும் உருவாகும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்தபடியே இலாகா மாற்றங்கள், ஊதிய உயர்வு உண்டு. சொத்துக்கள் வாங்கும் பொழுது வில்லங்கங்கள் பார்த்து வாங்குவது நல்லது.
சனியின் வக்ர காலத்தில் உறவினர் பகை உருவாகலாம். பவுர்ணமி வழிபாடும், கிரிவலம் வருவதும் மகத்துவமான பலன் தரும்.
வருடம் முழுவதும் வசந்த காலமாக வழிபாடு
புதன்கிழமை தோறும் மகாலட்சமி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். எட்டுவகை லட்சுமிக்குரிய சமயமாலை படித்து வழிபடுவதன் மூலம் தனவரவு திருப்தி தரும். சந்தோஷமும் வந்து சேரும்.

கடக ராசிக்காரர்களே! வருமான யோகத்தில் ஒருபடி மேலே செல்ல போகிறீர்கள்.

2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான பலன்கள் 4
விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
அந்தவகையில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து கடக ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
(புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசி நேயர்களே,
விகாரி வருடம் பிறக்கும் பொழுது உங்கள் ராசியிலேயே பிறக்கின்றது. உங்கள் ராசிநாதன் சந்திரனுக்கு 6-ம் இடத்தில் குரு, சனி, கேது ஆகிய முப்பெரும் கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. சனி பகவான் உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார்.
அஷ்டமாதிபதியாக விளங்கும் சனி பகவான் 6-ல் சஞ்சரிக்கும் பொழுது 6-க்கு அதிபதியான குருவும் இணைந்திருப்பதால் வருடத் தொடக்கத்திலேயே விபரீத ராஜயோகம் செயல்படப் போகின்றது. இல்லம் நோக்கி இனிய செய்திகள் வந்து கொண்டேயிருக்கும்.
12-க்கு அதிபதியான புதனும் நீச்சம் பெறுகின்றார். எனவே பணவரவிற்கு பஞ்சமிருக்காது. எதை எந்த நேரத்தில் எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகின்றீர்களோ, அதை அந்த நேரத்தில் அப்படியே செய்து முடிக்கும் அளவற்ற ஆற்றலும் உங்களுக்கு பிறக்கும்.
சென்ற ஆண்டு வருமானத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு வருமானம் கூடுதலாக கிடைக்கும். உத்தியோக ஸ்தானத்தில் வீற்றிருக்கும் சனியால் ஜீவன ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே வியாபாரத்தை விருத்தி செய்ய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.
குரு பகவான் 9-ம் இடத்திற்கும், 6-ம் இடத்திற்கும் அதிபதியாவார். எதிரிகளின் தொல்லை அதிகரித்தாலும் கூட உங்களைப் பார்த்தால் அவர்கள் சரணடைந்து விடுவர்.
தன்னிச்சையாக நீங்கள் எடுத்த சில முடிவுகள் உங்களுக்கு எதிர்ப்புகளை உருவாக்கும். இருப்பினும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்றவர்களின் நட்பால் பகையை நட்பாக்கிக் கொள்ளப்பாடுபடுவீர்கள்.
சென்ற ஆண்டில் தலைக்கு மேல் இருந்த கடன் சுமை இப்பொழுது படிப்படியாகக் குறையும். வீடு கட்டுவதற்கோ, அல்லது தொழிலை விரிவு செய்யவோ, நீங்கள் கடன் வாங்கியிருந்தால் அது இப்பொழுது வட்டியுடன் சேர்ந்து பெரியளவில் விஸ்வரூபமெடுத்துக் காட்சி தரலாம்.
ஏதேனும் ஒரு முன்னோர் சொத்துக்களை விற்று, அதில் வரும் லாபத்தைக்கொண்டு கடனைத் திருப்பிச் செலுத்தி நிம்மதிப்பெருமூச்சு விடும் வாய்ப்பும் ஒருசிலருக்கு உண்டு.
தனுசு குருவின் சஞ்சாரம்
(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும் மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)
இக்காலத்தில் குருவினுடைய பார்வை உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. வாக்கு, தனம், குடும்பம், தொழில், கர்மம், செயல், எதிர்கால முன்னேற்றம், வாகன யோகம், வெளிநாட்டுப் பயணம், இடமாற்றம், அரசபதவி, பிள்ளைகளின் முன்னேற்றம், சுபவிரயங்கள், அரசுவழிச்சலுகைகள் போன்றவைகளை அறிந்து கொள்ளும் இடத்தில் எல்லாம் குருவின் பார்வை பதிகின்றது. அது யோகம்தான்.
குரு இருக்குமிடத்தைக் காட்டிலும், பார்க்குமிடத்திற்குத் தான் பலன் அதிகம். எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையாக இருந்தாலும், பற்றாக்குறை பட்ஜெட்டால் அவதிப்பட்டாலும் குருவின் பார்வை பலம் இருந்தால் அதிலிருந்து விடுபடும் வாய்ப்புத் தானாக வந்து சேரும்.
[post_ads]
கல்யாணமானாலும் சரி, கடைதிறப்பு விழாவாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிற்கும் குருபகவான் தான் பச்சைக்கொடி காட்ட வேண்டும். அந்த குரு பகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்தை 9-ம் பார்வையாகப் பார்ப்பதால் ஒளிமயமான எதிர் காலத்திற்கு உத்திரவாதம் கிடைக்கப்போகின்றது. படிப்படியாக முன்னேற்றம் வந்து சேரும்.
குருவின் பார்வை பலத்தால் பல நன்மைகள் வந்து சேரப்போகின்றது. இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கல்யாண வயது வந்த பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு திருமணத்தை பேசிமுடித்து மங்கல ஓசை மனையில்கேட்க வழிவகுத்துக் கொள்வீர்கள். தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள்.
பல இடங்களிலிருந்து வரன்கள் வந்து பரிசீலனை செய்து பார்த்ததில் எதுவும் பொருந்தவில்லையே என்று ஏக்கத்தோடு இருந்தவர்களுக்கு ஆக்கப் பூர்வமான தகவல் இப்பொழுது வரப்போகின்றது.
10-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் முத்தான தொழிலும் வாய்க்கும், முன்னேற்றமும் அதிகரிக்கும் என்பது ஜோதிட நியதி. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது 10-ம் இடத்தில் குருவின் பார்வை பதிவதால் இதுவரை தொழில் அமையவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு புதிய தொழில் அமையும்.
கூட்டாளிகள் வந்திணைந்து பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொடுக்க முன்வருவர். கேட்ட உதவிகள் வங்கிகளிலும், வள்ளல்களிடமும் கிடைக்கும்.
அரசுப்பணிக்கு முயற்சித்தவர் களுக்கு அரசாங்க வேலை கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். கர்ம ஸ்தானம் என 10-ம் இடம் கருதப்படுவதால் பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை.
பெற்றோர்களின் உடல் நலத்தில் ஏதேனும் சிறு தொல்லைகள் ஏற்பட்டாலும் அது பெரியளவில் வளர்ச்சியடைய விடாமல் ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனை களைப் பெறுவது நல்லது.
குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் இடமாற்றம், ஊர்மாற்றம் கேட்காமலேயே ஒருசிலருக்கு கிடைக்கும்.
பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். இதுவரை தங்கள் கருத்துக் களுக்கு ஒத்துவராத சகோதரர்கள் இப்பொழுது ஒத்து வருவர். தந்தை வழியில் மட்டுமல்லாமல் தாங்கள் வாங்கிய சொத்துக்களிலேயே இருந்த வில்லங்கங்கள் இப்பொழுது விலகும்.
உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு சகபணியாளர்கள் வெளிநாடு சென்றது போல் தாங்கள் செல்ல முடியவில்லையே என்ற கவலை இனி மாறும். வெளிநாட்டிலிருந்து கேட்ட சம்பளம் கொடுப்பதாகச் சொல்லி இப்பொழுது அழைப்புகள் வந்து சேரலாம். வாகன மாற்றம் செய்ய உகந்த நேரமிது.
விருச்சிக குருவின் சஞ்சாரம்
(18.5.2019 முதல் 28.10.2019 வரை)
இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும் பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்குள்ளேயே உலா வருகின்றார்.
உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது 1, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். உள்ளத்தில் இருந்த கலக்கம் அகலும். தெள்ளத்தெளிவாக சிந்தித்து முடிவெடுப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். மக்கள் செல்வாக்கு மேலோங்கும். கொடுத்த வாக்குறுதி களைக் காப்பாற்றுவீர்கள்.
பெயர், புகழ் உயரக்கூடிய நேரமிது. தொழிலில் பெரிய அளவு முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பதில் அக்கரை காட்டுவீர்கள். பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டுப் புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள்.
உத்தியோகத்தில் இருந்த கெடுபிடிகள் அகலும். இதுவரை உங்கள் கருத்துக்களுக்கு ஒத்துவராத மேலதிகாரிகளின் இப்பொழுது குணம் மாறுவர்.
நீங்கள் கேட்ட சலுகைகளை கேட்ட மாத்திரத்திலேயே கொடுப்பர். அசதி, அவநம்பிக்கை அனைத்தும் விலகும். தந்தை வழியில் ஏற்பட்ட தகராறுகள், பங்காளிப் பகை மாறும். சொத்துக்கள் வாங்க, விற்க உகந்த நேரமிது.
சனியின் சஞ்சார நிலை
ஆண்டு முழுவதும் சனி பகவான் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகின்றார்.
6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 3, 8, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே சகோதர வர்க்கத்தினர்களின் மனமாற்றங்கள் ஏற்படலாம். உங்களோடு ஒத்துவராத சகோதரர்கள் இப்பொழுது ஒத்துவருவர். இழப்புகளை ஈடுசெய்ய தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
வெளிநாட்டில் தங்கிப் பணி புரிய வேண்டுமென்று விரும்பியவர் களுக்கு அங்கு தங்குவதற்கான உரிமம் இதுவரை கிடைக்காதிருந்தால் இப்பொழுது அது கிடைக்கும்.
பார்த்தவர் வியக்குமளவு வீடு கட்டும் யோகம் உண்டு. உடன்பிறப்புகளின் இல்லத் திருமண விழாக்களை முன்நின்று நடத்திவைப்பீர்கள். சனியின் வக்ர காலத்தில் வாழ்க்கைத் துணையோடு பிரச்சினைகள் ஏற்படாதிருக்க சுய ஜாதக அடிப்படையில் பரிகாரங் களைச் செய்து கொள்வது நல்லது.
ராகு-கேதுக்களின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் ராகுவும், 6-ம் இடத்தில் கேதுவும் வருடம் முழுவதும் சஞ்சரிக்கின்றார்கள். இதன் விளைவாக வியாபாரத்தில் சில புதிய மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள். உலுக்கியெடுத்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக மாறும்.
வெளிநாட்டிலிருந்து வியக்கும் தகவல் வந்து சேரும். வியாபாரம் தொழிலில் புதியவர்கள் வந்திணைவர். எதிரிகளின் பலம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். நண்பர்களை நம்பி மிகப்பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
சனி-செவ்வாய் பார்வைக்காலம்
(14.4.2019 முதல் 23.6.2019 வரை)
இக்காலத்தில் கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. எதைச் செய்தாலும் குடும்பப் பெரியவர்களை கலந்து ஆலோசித்துச் செய்வது நன்மை தரும். நிதானம், பொறுமை ஆகியவற்றை அதிகம் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது. வாங்கிய சொத்துக்களை விற்பதும், அதற்கு இணையான சொத்துக்களை வாங்குவதும் வாடிக்கையாகும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் சந்திரபலம் நன்றாக இருப்பதால் தெளிந்த சிந்தனையோடு செயல்படுவீர்கள். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்துகொள்வீர்கள்.
மூன்றாம் நபரால் ஏற்பட்ட முன்னேற்றத் தடைகள் அகலும். வரவு செலவுகள் திருப்தி தரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.
தொழிலில் உங்கள் பெயரை இணைத்துக்கொள்ள குடும்ப உறுப்பினர்கள் சம்மதிப்பர். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
[post_ads]
தாய் மற்றும் சகோதர வர்க்கத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தோடு உயர் பதவிகள் கிடைக்கும்.
இடம் வாங்கும் யோகம் உண்டு. சங்கிலித் தொடர்போல வந்த கடன்சுமை இனி குறையும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குடும்பத்தில் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். பவுர்ணமி வழிபாடும், நரசிம்மர் வழிபாடும் பலன்களை அள்ளித்தரும்.
வருடம் முழுவதும் வசந்த காலமாக வழிபாடு
திங்கட்கிழமை தோறும் தையல் நாயகி பதிகம் படித்து, வைத்தீஸ்வரர் – தையல்நாயகி வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். பவுர்ணமி தோறும் மலை வலம் வருவதன் மூலம் மகத்துவம் கிடைக்கும்.

சிம்ம ராசிக்காரர்களே! நீங்கள் எறும்பைபோல் சுறுசுறுப்பாக செயல்பட போகிறீர்கள்.

2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான பலன்கள் 5
விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
அந்தவகையில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து சிம்ம ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
(மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை)
சிம்ம ராசி நேயர்களே,
விகாரி வருடத் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் பொழுது குரு பகவான் 5-ம் இடத்தில் இருந்து 9-ம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்க்கின்றார். எனவே சுறுசுறுப்போடு பணிபுரியும் வருடமாக இந்த வருடம் அமையப் போகின்றது.
வருடத்தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் ராகு வீற்றிருக்கின்றார். எனவே லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
மிதமிஞ்சிய பொருளாதாரத்தில் மிதக்கப் போகிறீர்கள். அதே நேரத்தில் விரயாதிபதி சந்திரன் விரய ஸ்தானத்தில் வீற்றிருக்க ஆண்டு தொடங்குவதால் இந்த ஆண்டு விரயங்களும் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். குரு பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் சேமிப்பும் உங்களுக்கு அதிகரிக்கும்.
செல்வாக்கு மிக்கவர்களாக விளங்கும் நீங்கள் இந்த ஆண்டு தொழிலில் முத்திரை பதிக்கப் போகிறீர்கள். பொதுவாழ்விலும் புகழ் குவிக்கப் போகிறீர்கள்.
செவ்வாய் பலம் உங்களுக்கு சிறப்பாக இருக்கிறது. யோகம் செய்யும் கிரகமான செவ்வாய் 10-ல் பலம் பெற்றிருக்கும் பொழுது அங்காரக ஸ்தலங்களில் அடியெடுத்து வைத்து வழிபாடு செய்வது நல்லது.
பாக்கிய ஸ்தானம், மற்றும் புத்திர ஸ்தானம் எனப்படும் இடத்தில் கேது வீற்றிருப்பதால் நாக சந்நிதிகளுக்கு சென்று யோகபலம் பெற்றநாளில் பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.
7-ல் சுக்ரன் இருப்பதால் தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்யும் யோகம் உண்டு. அதுமட்டுமல்லாமல் பெண்வழிப் பிரச்சினைகள் அகலும்.
5-ல் கேது இருப்பதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. வெளியில் தங்கிப் படிக்கும் குழந்தைகளாக இருந்தால் அன்றாடம் அவர்களுடன் பேசிப்பேசி தன்னம்பிக்கையை ஊட்டுவது நல்லது.
ஒருசில பிள்ளைகள் உங்கள் பேச்சினைக் கேட்காமல் மனம் போன போக்கில் சில காரியங் களைச் செய்துவிட்டுப் பின்னர் வருத்தப்படலாம். எனவே அன்றாடம் அவர்களோடு பேசி அவர்கள் மனதில் நினைத்தவற்றை நீங்கள் தெரிந்து கொள்வதும் நல்லது.
தனலாபாதிபதியான புதன் வருடத் தொடக்கத்தில் நீச்சம் பெற்றிருக்கின்றார். வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்திற்கும் புதன் அதிபதியாவார். அதே நேரத்தில் ராசிநாதன் சூரியன் உச்சம் பெற்றிருக்கின்றார்.
இவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது, கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு திடீரெனப் புதிய பொறுப்புகளும், தலைமைப் பதவிகளும் கூட வரலாம்.
பொதுவாக ஆண்டின் தொடக்கத்தில் 4 கிரகங்கள் பலம் பெற்றுச் சஞ்சரிக்கின்றன. வலிமையான கிரகங்கள் சஞ்சாரம் செய்யும் பொழுது அதற்குரிய ஆதிபத்யங்களும் நல்ல இடமாக இருப்பதால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
தனுசு குருவின் சஞ்சாரம்
(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)
குருவினுடைய பார்வை 1, 9, 11 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது. ‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்பதால் என்னதான் உங்களுக்கு திசாபுத்தி வலிமை இழந்திருந்தாலும் குரு பார்வையால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். ஆரோக்கியச் சீர்கேடுகள் மாறும். பகையாக இருந்தவர்கள் நட்பாக மாறுவர்.
9-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் ஒளிமயமான எதிர்காலம் உருவாகப் போகின்றது. பொன், பொருட்களின் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாட்களாக நடைபெறாத சில காரியங்கள் இப் பொழுது துரிதமாக நடைபெற்று சந்தோஷத்தை அதிகரிக்கும்.
‘ஐந்திலே குருதான் வந்தால் அனைத்திலும் வெற்றி கிட்டும்’ என்பது ஜோதிட நியதி, அந்த அடிப்படையில் மட்டுமல்லாமல் 5-ம், 9-ம் மிஞ்சும் பலன் தரும் என்பதற்கு ஏற்ப தொழிலில் முன்னேற்றம் வரப்போகின்றது.
புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து லாபம் அதிகரிக்கப் புதிய யுக்தி களைக் கையாளுவர். திடீர் திருப்பங்கள் பலவற்றையும் சந்திக்கும் நேரமிது.
9-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். சிந்தை மகிழும் விதத்தில் சிறப்பான பலன்கள் நிறைய வந்து சேரும். வந்த வரன்களை பரிசீலனை செய்து முடிக்க முன்வருவீர்கள்.
தொழிலில் இருந்த மந்தநிலை மாறும். சொந்தம் சுற்றமெல்லாம் ஆச்சரியப்படும் விதத்தில் உங்களுக்கு முன்னேற்றம் வரப்போகின்றது. பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பல நாட்களாக நிலுவையில் இருந்த பஞ்சாயத்துக்கள் இப்பொழுது உங்களுக்குச் சாதகமாக முடியும்.
குருவின் பார்வை லாப ஸ்தானத்தில் பதிவதால் பொருளாதார மேம்பாடு அதிகரிக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். உங்களுக்கோ, உங்கள் வாரிசுகளுக்கோ வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு இப்பொழுது கைகூடும்.
[post_ads]
வெளிநாடு செல்லும் முயற்சிக்காக பெரும்தொகை கடன் வாங்க நினைப்பவர்களுக்கு அது எளிதில் கைகூடும். கேட்காமலேயே சிலர் கொடுக்க முன்வருவர்.
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிக்குப் பயந்து புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கிடைக்கும். மண், பூமி விற்பனை செய்பவர் களுக்கு கட்டிடம் கட்டி விற்கும் பணியை மேற்கொள்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
விருச்சிகச் சனியின் சஞ்சாரம்
(18.5.2019 முதல் 28.10.2019 வரை)
இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும் பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்குள்ளேயும் உலா வருகின்றார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் விருச்சிகத்தில் இருந்தபடி 8, 10, 12 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார்.
இழப்புகளை குறிக்கும் 8-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய வாய்ப்பு வந்து சேரும். பழைய கூட்டாளிகளால் ஒருசிலருக்கு பிரச்சினைகள் ஏற்படலாம்.
அவர்களை விலக்கிவிட்டு ஒன்று முழுமையான தொழிலை நீங்கள் ஒப்புக் கொள்ளலாம். அல்லது சுய ஜாதகத்தில் திசாபுத்தி வலுவிழந்திருந்தால் புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்ளலாம். மேலும் ஒரு சிலருக்கு அலுவலக மாற்றங்கள் இடமாற்றங்கள் செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகும். அதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
அருளாளர்கள் மற்றும் ஆன்மிகப் பெரியவர்களின் ஆலோசனை அப்போதைக்கப்போது கைகொடுக்கும். அர்த்தாஷ்டம குருவிற்குரிய வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் திடீரென முடிவாகலாம். வழக்குகள் சாதகமாக முடியும். வாரிசுகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். இல்லம் வாங்கும் யோகமும் இக்காலத்தில் உருவாகலாம்.
குருவின் பார்வை பலத்தால் 10-ம் இடமும், 12-ம் இடமும் புனிதமடைவதால் ஓய்வில்லாமல் உழைக்கும் சூழ்நிலையும், அந்த உழைப்பிற்கேற்ற பலனும் இப்பொழுது கிடைக்கும். கடன்சுமை பாதிக்கு மேல் தீரும்.
வரவேண்டிய பாக்கிகள் இப்பொழுது தானாக வந்து சேரும் நேரமிது. அறுபத்து மூவர் வழிபாடும், ஆஞ்சநேயர் வழிபாடும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளும் மலைபோல் வந்த துயரை பனிபோல் விலக்கும்.
சனியின் சஞ்சார நிலை
ஆண்டு முழுவதும் சனி பகவான் 5-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகின்றார். 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 2, 7, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது.
எனவே பிரிந்த உறவினர்கள் ஒன்று சேரும் வாய்ப்பு உண்டு. சுபச்செலவுகள் அதிகரிக்கும். மகிழ்ச்சிகரமான சுற்றுப்பயணங்கள் உண்டு. இளைய சகோதரத்துடன் இணக்கம் ஏற்படும். தொழிலில் லாபம் இருமடங்காக வந்து சேரும். சனியின் வக்ர காலத்தில் வாழ்க்கைத் துணை வழியே விட்டுக் கொடுத்துச்செல்வது நல்லது.
ராகு-கேதுக்களின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் ராகுவும், 5-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும்.
தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வங்கிகளில் கடனுதவி பெற்று வாடகை இடத்தில் இயங்கும் தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றுவது பற்றிச் சிந்திப்பீர்கள். கேதுவின் பலத்தால் பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். சுபவிரயங்கள் உண்டு. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் அகலும்.
சனி-செவ்வாய் பார்வைக்காலம்
(14.4.2019 முதல் 23.6.2019 வரை)
இக்காலத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. எதை செய்தாலும் மூத்தவர்களை கலந்து ஆலோசித்து செய்வது நல்லது.
பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகையால் பிரச்சினைகள் உருவாகலாம். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படாமல் இருக்க வழிபாடுகள் தேவை. பெற்றோர்களின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும் ஆண்டாக இந்த ஆண்டு அமையப் போகின்றது. வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். கல்வியில் தேர்ச்சி பெற்று மற்றவர்களால் பாராட்டுக்களைப் பெறுவர்.
பெண் குழந்தைகளுக்கான திருமண வாய்ப்புக் கைகூடும். ஆன்மிக சுற்றுலாக்கள் அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. பிரிந்து சென்ற உடன்பிறப்புகள் திரும்பி வந்திணைவர்.
தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பழைய நகைகளைக் கொடுத்துவிட்டுப் புதிய நகைகளை வாங்கும் முயற்சி கைகூடும். புதிய தொழிலுக்கு உங்கள் பெயர் பரிசீலனை செய்யப்படும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். திறமை பளிச்சிடும். வாகனம் வாங்க சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். குரு வழிபாடும், திசைமாறிய துர்க்கை வழிபாடும் செல்வ நிலையை உயர்த்தும்.
வருடம் முழுவதும் வசந்தகாலமாக வழிபாடு
சங்கடகர சதுர்த்தி விரதம் இருந்து தும்பிக்கையானை நம்பிக்கையோடு வழிபடுவது நல்லது. குரு கவசம் பாடி குரு வழிபாட்டையும் மேற்கொண்டால் குதூகலமான வாழ்க்கை அமையும்.

கன்னி ராசிக்காரர்களே! இந்த ஆண்டு முழுவதும் கூடுதல் கவனம் தேவையாம்.

2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான பலன்கள் 6
விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
அந்தவகையில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
(உத்ரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் வரை)
கன்னி ராசி நேயர்களே,
விகாரி வருடம் தமிழ் புத்தாண்டு பிறக்கும் பொழுதே உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் சனி, கேது, வியாழன் ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரிக்கின்றார்கள். அர்த்தாஷ்டம குரு, அர்த்தாஷ்டம கேது, அர்த்தாஷ்டம சனி ஆகிய மூன்று கிரகங்களும் 4-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் ஆண்டு முழுவதும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
[post_ads_2]
சனியின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால் எந்தக்காரியத்தையும் தொடங்கும் முன் ஒரு கணம் சிந்திப்பது நல்லது. விரயங்களை சுபவிரயங்களாக மாற்றிக்கொள்ளுங்கள். மருத்துவச்செலவுகள் மனக்கலக்கத்தைத் தரும். இடமாற்றம், வீடு மாற்றம், நாடு மாற்றம், உத்தியோக மாற்றம், ஊர் மாற்றம், வாகன மாற்றம் போன்றவற்றில் ஏதேனும் ஒரு மாற்றத்தை நீங்கள் சந்தித்தே ஆக வேண்டும். வரும் மாற்றங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தரும்.
தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிறுசிறு தொல்லைகள் அடிக்கடி வந்து கொண்டேயிருக்கும். உடல்நலச் சீர்கேடுகள் உருவாகலாம்.
அதுமட்டுமல்ல குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலக்குறைபாடுகள் வந்து கொண்டேயிருக்கும். குரு கல்வி ஸ்தானத்தில் பலம் பெற்றிருப்பதால் குழந்தைகளின் படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் தற்சமயம் ஈடுபடுவது அவ்வளவு நல்லதல்ல. அர்த்தாஷ்டமச் சனி விலகிய பிறகு எடுக்கும் புது முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பதவி ஓய்வுபெற்றுப் பின்பும் பதவி நீடிக்குமா? என்று நினைக்கலாம். ஆனால் 10-ம் இடத்தை சனி, கேது ஆகிய இரண்டு வலிமை பெற்ற கிரகங்கள் பார்ப்பதால் பதவி நீடிப்பு கிடைப்பது அரிது. அதே நேரத்தில் பதவி ஓய்விற்குப் பிறகு வேறு பணியில் சேரும் வாய்ப்புக் கிடைக்கலாம். வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அதை மாற்றம் செய்ய முன்வருவது நல்லது.
தைரிய ஸ்தானாதிபதி செவ்வாய் வருடத்தொடக்கத்தில் 9-ம் இடத்தில் சஞ்சரித்தபடியே தன்னுடைய ஸ்தானத்தை பார்ப்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் உங்கள் முன்னேற்றத்திற்கு மூலகாரணமாக அமையும்.
10-ல் ராகு இருப்பது ஒருவழிக்கு நன்மைதான். பழைய தொழிலில் இருந்து விடுபட்டு புதுத் தொழிலுக்கு மாறும் யோகம் ஒருசிலருக்கு உண்டு. உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.
அதன் விளைவாக விருப்ப ஓய்வில் வெளிவந்து வேறுதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.

விரயாதிபதி சூரியன் 8-ல் இருப்பதால் விரயத்திற்கேற்ற வரவு வந்து கொண்டே இருக்கும். கையில் காசு, பணம் இல்லையே என்று கவலைப்படாமல் காரியங்களைத் தொடங்கினால் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
[post_ads_2]
அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு கேட்ட பதவிகள் கிடைப்பது அரிது. அதே நேரத்தில் கிடைத்த பதவியைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிப்பீர்கள்.
தனுசு குருவின் சஞ்சாரம்
(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)
இக்காலத்தில் குருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எத்தனை கிரகங்கள் பார்த்தாலும், குருவின் பார்வைக்குத்தான் பலன் அதிகம். அங்ஙனம் குரு 8-ம் இடத்தைப் பார்ப்பதால் தொழிலில் இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

வீண் விவகாரங்களால் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறத் தொடங்கும். இடங்கள் வாங்க பத்திரப் பதிவில் ஏற்பட்ட தடைகள் அகலும். சிறுநீரகக் கோளாறுகள் அகலும்.
குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவது யோகம் தான். பத்தாமிடத்தைக் குரு பார்ப்பதால் முத்தான தொழில் அமையும் என்பது முன்னோர் வாக்கு. அந்த அடிப்படையில் நீங்கள் தொழில் நடத்துபவர்களாக இருந்தால் இப்பொழுது தொழில் சூடுபிடிக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.
அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பொதுநலம் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் பின்னணியாக இருக்கும் பிரபலஸ்தர்களின் முயற்சியால் புதிய பதவி களைப் பெறுவர். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சுய ஜாதகம் பலம் பெற்றிருந்தால் இப்பொழுது அவர் களுக்கு அரசுப்பணி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். நேராநேரத்திற்கு சாப்பிட முடியவில்லையே என்றும், நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள பயணம் செய்து கொண்டேயிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றதே என்ற எண்ணம் தலைதூக்கும்.
அதற்குரிய விதத்தில் பலன்களும் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு அங்கிருந்து அழைப்புகள் வரலாம்.
பொதுவாகவே சுபவிரயங்கள் அதிகரிக்கும் நேரமிது. புத்திரப்பேறுக்காகக் காத்திருப்பவர் களுக்கு அது கைகூடும். விலகிச்சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு.
விருச்சிக குருவின் சஞ்சாரம்
(18.5.2019 முதல் 28.10.2019 வரை)
இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும் பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்கு உள்ளேயே உலா வருகின்றார்.
இதன் பலனாக நிறைய மாற்றங்கள் உங்களுக்கு வந்து சேரப்போகின்றது. விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றன.
பல மாதங்களாக வரன்கள் வாயில்தேடி வந்தும், ஒன்று கூட பொருந்தவில்லையே வீட்டில் எப்பொழுதுதான் கெட்டிமேளம் கொட்டும் வாய்ப்பு கைகூடும் என்று நினைத்தவர்களுக்கு இப்பொழுது மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில், வரும் ஜாதகம் எல்லாம் பொருத்தமளிக்கும் விதத்தில் இருக்கப் போகின்றது.
அதுமட்டுமல்ல இதுவரை பார்த்த வரன்களை விட இப்பொழுது வந்த வரன்கள் மிகச் சிறப்பானதாக இருக்கின்றதே என்று நீங்கள் நினைப்பீர்கள்.
ஒன்பதாம் இடத்தைக் குரு பார்ப்பதால் பொன், பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. தந்தை வழியில் ஏதேனும் உதவிகள் கேட்டு இதுவரை உங்களுக்கு அமையாமல் இருந்தால், அது உங்களுக்கு இப்பொழுது அமையும்.
மற்ற சகோதரர்களிடம் காட்டுகிற பாசத்தைக் காட்டிலும் பெற்றோர்கள் உங்களிடம் பாசம் அதிகம் காட்டுவர். அதுமட்டுமல்லாமல் தொழிலுக்காக நீங்கள் உதவி கேட்டால் கூட அதையும் செய்ய முன்வருவர். பூர்வீக சொத்துக்களை பிரிப்பதில் இருந்த தடை அகலும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும்.
குருவின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் தொழிலில் லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகவே கிடைக்கும்.
வசூலாகாத பாக்கிகள் வசூலாகும். வாங்கல் கொடுக்கல்களில் இருந்த மந்தநிலை மாறும். பணிபுரிபவர்களுக்கு பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். பணியிலிருந்து விடுபட்டவர்களுக்கு மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பும் கை கூடும்.
சனியின் சஞ்சார நிலை
ஆண்டு முழுவதும் சனிபகவான் 4-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். அர்த்தாஷ்டமச் சனியாக உலா வருகின்றார்.
இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகின்றார். சனியின் பார்வை உங்கள் ராசியின் மீதும் பதிகின்றது. 6, 10 ஆகிய இடங்களிலும் பதிகின்றது.
[post_ads_2]
எனவே மறைமுக எதிர்ப்புகள் விலகும். மனக்கசப்புகள் மாறும். முக்கியப்பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு பதவி மாற்றங்கள் உருவாகலாம். சனியின் வக்ர காலத்தில் பிள்ளைகள் வழி யில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். விரயங்கள் கூடுதலாகக் கிடைக்கும்.
ராகு-கேதுக்களின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் ராகுவும், 4-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். 10-ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்பார்கள். அந்த அடிப்படையில் ராகு இருப்பதால் தொழில் முன்னேற்றம் உண்டு.
வர்த்தகத்தில் வளர்ச்சி ஏற்படும். பங்கு வர்த்தகமும், ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் இருப்பவர் களுக்கு சீரான லாபமும், சிறப்பான முன்னேற்றமும் கிடைக்கும். வேலைச்சுமை கூடினாலும் கூட பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சுக ஸ்தானத்தில் கேது இருப்பதால் எலும்பு, நரம்பு சம்மந்தப்பட் வகையில் வலி வந்து நீங்கும்.
சனி-செவ்வாய் பார்வைக்காலம்
(14.4.2019 முதல் 23.6.2019 வரை)
இக்காலத்தில் அன்னையில் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். வாங்கிய கடனுக்காக ஒருசில சொத்துக்களை விற்றுக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகும். பிறருக்கு பொறுப்பு சொல் வதைத் தவிர்ப்பது நல்லது. இக்காலத்தில் அங்காரகனுக்கும், சனிக்கும் உரிய ஸ்தலங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டில் வரவும், செலவும் சமமாகவே இருக்கும். பண நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத விதத்தில் வரவு உண்டாகித் தேவைகளைப் பூர்த்தியாக்கும்.
ஆரோக்கியத்தில் மட்டும் அதிக அக்கறை செலுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறு பாடுகள் தோன்றி மறையும்.
பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்பட குலதெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். புகுந்த வீட்டில் உள்ளவர்களிடம் குறிப்பாக வயதில் மூத்தவர்களிடம் ஆலோசனை களைக்கேட்டு செயல்படுவதன் மூலம் அமைதிகாண இயலும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும்.
[post_ads_2]
சகோதரர்களில் ஒருசிலர் மட்டும் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றங்கள் தானாக வந்து சேரும்.ஆனால் அது எதிர்பார்த்த இடமாக அமையாது.
விருப்பப்பட்ட இடம் கிடைக்கவில்லையே என்று கவலைப்படாமல் கிடைத்த இடத்திலேயே விரும்பிப் பணிபுரிவது நல்லது. மேற்குப்பார்த்த துர்க்கை வழிபாடும், திசைமாறிய தெய்வ வழிபாடும் செயல்பாடுகளில் வெற்றியைக் கொடுக்கும்.
வருடம் முழுவதும் வசந்த காலமாக வழிபாடு
பிரதோஷ நேரத்தில் விரதமிருந்து நந்தியெம்பெருமானை வழிபட்டு வருவது நல்லது. நாககவசம் பாடி ராகு-கேதுக்களை வழிபடுவதன் மூலம் தேக நலனும் சீராகும், திடீர் திருப்பங்களும் ஏற்படும்.
– Daily Thanthi

Back to top button