9 வருடங்களின் பின் நிரந்தரமாக திறக்கப்படும் வீதி
கிளிநொச்சி மருதநகர் டி4ஏ வீதி வரும் வெள்ளிக்கிழமை முதல் நிரந்தரமாக திறக்கப்படும் என விதை நடுகை பொருள் அபிவிருத்தி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ச.சதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த வீதியான சுமார் 60 வருடங்களுக்கு மேலாக 200 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்களுக்க சொந்தமான கமக்காரர்கள், பொது மக்கள் ஆகியோர் பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த 2010 தொடக்கம் விதை நடுகை பொருள் அபிவிருத்தி நிலையத்தினர் தங்களின் வயற்காணிகளின் பாதுகாப்புக்கு எனக் கூறி வீதியினை அடைத்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு தடை விதித்திருந்தனர்.
கரடிபோக்கு சந்தியிலிருந்து பரந்தன் நோக்கி மூன்று கிலோமீற்றர் வீதியில் சுமார் ஐநூறு மீற்றர் வரையான பகுதியை குறித்த திணைக்களத்தினர் பூட்டுபோட்டு போக்குவரத்து தடைவிதித்திருந்தனர்.எனவே இது தொடர்பில் பிரதேச மக்களும், கமக்காரர்களும் உரிய திணைக்களங்கள், மற்றும் அதிகாரிகளுக்கு பல முறை அறிவித்தும் அவ்வவ் போது திறப்பதும் பின்னர் ஒரு வாரத்திற்கு மூடிவிடுவதுமாக இருந்து வந்தது.
ஆனால் கடந்த 23.07.2019 அன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய வரும் வெள்ளிக் கிழமை முதல் குறித்த வீதியானது நிரந்தரமாக திறக்கப்படவுள்ளது. இதனை விதை நடுகை பொருள் அபிவிருத்தி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.