செய்திகள்

டெல்லி ஆட்டோ எக்ஸோ: எலக்ட்ரிக் கார்களை (electric cars) இந்தியாவில் வாங்க முடியுமா?

டெல்லியில் நடைபெற்ற 15வது ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், உள்நாட்டைச் சேர்ந்த மகிந்த்ரா கார் தயாரிப்பு நிறுவனம் eKUV100 என்ற மினி SUV மின்சார வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.8.25 லட்சம் அல்லது 11,600 டாலருக்கும் சற்று அதிகம்.

தனிநபர்களுக்கான மிகவும் குறைந்த விலையிலான மின்சார காராக இது உள்ளது. டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் Nexon EV வாகனம் ரூ.14 லட்சம் அல்லது 20,000 டாலர் என இதற்கடுத்த நிலையில் குறைந்த விலை மின்சார காராக உள்ளது.

ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார் தயாரிப்பதற்கான உரிமையை வைத்திருக்கும் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், தன்னுடைய மின்சார கார்கள் திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகிறது.

அந்த நிறுவனம் SUV வகையில் மின்சார வாகனம், ஹேட்ச்பேக் வகை கார், மின்சார பேருந்து மற்றும் வணிக ரீதியில் பயன்படுத்தும் மின்சார லாரியையும் கூட காட்சிப்படுத்தியுள்ளது. இந்திய நிறுவனங்களைத் தவிர, கொரியாவின் ஹியுண்டாய், சீனர் ஒருவர் உரிமையாளராக உள்ள பிரிட்டன் நிறுவனம் எம்.ஜி. மோட்டார்ஸ் ஆகியவை அண்மையில் தங்களுடைய மின்சார SUV வாகனங்களை சுமார் ரூ.25 லட்சம் அல்லது 35 ஆயிரம் டாலர் விலையில் அறிமுகம் செய்தன.

நான்கு சக்கர வாகனம் மட்டுமின்றி, இந்தியாவில் இருசக்கர உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் ஹீரோ மற்றும் பஜாஜ் நிறுவனங்களும் மின்சார வாகன சந்தையில் போட்டியில் இறங்கியுள்ளன. உள்நாட்டில் சில சிறிய நிறுவனங்களும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவின் தேவைக்கு ஏற்ப சில மாறுதல்கள் செய்து விற்கும் வாகனங்களும் வந்துள்ளன. ஆனால் சந்தையில் அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் டெல்லி ஆட்டோ எக்போ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஏறத்தாழ அனைத்து ஆட்டோ மொபைல் நிறுவனங்களும், ”சுத்தமான”, ”பசுமையான” அல்லது ”மின்சார” (clean, green and electric) ஆகிய வார்த்தைகளை உரக்கவும், தெளிவாகவும் கூறுகின்றன. அதனால், எல்லா இடங்களிலும் எல்லோரும் கேட்கும் ஒரு பெரிய கேள்வி…….

மின்சார வாகனங்கள் இங்கே வந்துவிட்டனவா?

”மின்சார வாகனங்கள் வந்துவிட்டன என்று இப்போதும் கூட நான் சொல்ல மாட்டேன். ஏனெனில் முதலில் அவற்றை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஆனால் மின்சார வாகனங்களுக்கான எதிர்காலம் குறித்து டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறது,” என்று டாட்டா மோட்டார்ஸின் மின்சார வாகனங்கள் பிரிவின் தலைவர் ஷைலேஷ் சந்த்ரா கூறுகிறார்.

”டாட்டாவிடம் இருந்து மட்டுமின்றி, மற்ற நிறுவனங்களில் இருந்தும் அதிகமான வாகனங்கள் சந்தைக்கு வரும்போது, சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு வசதி பெருகும்போது, அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மெல்ல மெல்ல மின்சார வாகனங்கள் சந்தையில் வரவேற்பைப் பெறும்,” என்று சந்த்ரா தெரிவித்தார்.

LocalCircles-CNBC TV-18 சர்வே நடத்திய ஆய்வில் ”விலை அதிகமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் மின்சார வாகனங்களை வாங்குவது பற்றி யோசிப்பதில்லை” என்று தெரிய வந்துள்ளது. இந்தியா முழுக்க 180 நகர்ப்புற மாவட்டங்களில் 32,000க்கும் மேற்பட்டவர்களிடம் கருத்து கேட்டதில், மின்சார வாகனம் வாங்குவதற்கு ரூ.15 லட்சத்துக்கும் குறைவான தொகையை செலவழிக்கத் தயாராக இருப்பதாக 65 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

மின்சார கார்கள்

புதிதாக சந்தைக்கு வரும் வாகனங்களின் விலை குறைவாக இருப்பதால், கடைசியில் இந்தியர்களுக்கு ஏற்றதாக அவை இருக்குமா?

சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்கும் வாகனங்களின் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் தர இந்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால், மின்சார வாகனங்கள் குறித்து அரசின் கண்ணோட்டம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. “2030 ஆம் ஆண்டில்தான் இந்தியாவில் மின்சார கார்கள் விற்பனையாகும்” என்று 2017 ஆகஸ்ட் மாதம் மத்திய அமைச்சர் ஒருவர் கூறினார். ஆனால், “பெட்ரோல் மற்றும் டீசல் மீது நாங்கள் எந்தத் தடையும் விதிக்கப் போவதில்லை” என்று 2019 ஆகஸ்ட் மாதம் இன்னொரு அமைச்சர் கூறினார்.

இந்திய அரசு FAME திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை அறிவித்தது. மின்சார வாகனங்களுக்கு 2019-2022 கால கட்டத்துக்கான ஒதுக்கீட்டை பத்து மடங்கு உயர்த்தி 10,000 கோடி ரூபாயாக ஒதுக்கியது.

“பல நிறுவனங்கள் இப்போது மின்சார வாகனங்களை உற்பத்தி செய்கின்றன. மின்சார வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் வகையிலான, FAME-2 கொள்கையால் இது சாத்தியமாகியுள்ளது” என்று இந்திய ஆட்டோமோட்டிவ் உற்பத்தியாளர் சங்கத்தின் (SIAM) டைரக்டர் ஜெனரல் ராஜேஷ் மேனன் பிபிசியிடம் தெரிவித்தார். “பேருந்துகள், டாக்ஸிகள் போனற வணிக ரீதியிலான பயன்பாட்டில் மின்சார வாகனங்கள் வர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், அதன் மூலம் சந்தையில் விற்பனை அதிகரிக்கும்” என்றார் அவர்.

ஆனால் அதிலும் சிறிது பிரச்சினை உள்ளது – FAME அல்லது `துரிதமாக மாற்றம் செய்தல் மற்றும் ஹைபிரிட் மின்சார வாகனங்களை இந்தியாவில் தயாரித்தல்’ திட்டம் என்பது, பொது மக்கள் உபயோகத்துக்கான மின்சார வாகனங்களை தயாரிப்பவர்கள் மற்றும் வாங்குவோருக்கு அரசு ஊக்கத் தொகைகள் அளிப்பதாகும். பொதுப் பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு மட்டும் ஊக்கத் தொகை கிடைக்கும்.

“அரசின் கண்ணோட்டம் இப்போது அதிக ஆக்கபூர்வமானதாக உள்ளது. இரு சக்கர வாகனங்கள், டாக்ஸிகள், பேருந்துகளில் மின்சார வாகனங்களை கொண்டு வருவது பற்றி அரசு சிந்திக்கிறது. இந்தப் பிரிவில் இவை எளிதில் ஏற்கப்படும். அதனால் நிறைய பேர் பயனடைவார்கள். அதைத் தொடர்ந்து பலரும் அதற்கு மாறுவார்கள் என்று நம்பப்படுகிறது” என்று என்.ஆர்.ஐ. ஆலோசனை மற்றும் தீர்வுகள் நிறுவனத்தின் நிர்வாகி அசிம் ஷர்மா கூறுகிறார்.

ஆனால் சந்தையில் அவற்றின் பங்கு வெறும் 20 சதவீதம் மட்டுமே. எனவே நமக்கு எப்போது மின்சார வாகனங்கள் கிடைக்கும்? தனிப்பட்ட நபர்கள் மின்சார வாகனங்கள் வாங்க முடியாமல் தடுப்பது எது?

எலெக்ட்ரா

தனிப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு இன்னும் மூன்று சந்தேகங்கள் உள்ளன என்று SIAM அமைப்பைச் சேர்ந்த மேனன் கூறுகிறார். “விலை குறித்த சந்தேகம் – இப்போது பயன்பாட்டில் உள்ள வாகனங்களைவிட மின்சார வாகனங்களின் விலை அதிகம்; வகைகள் – இப்போது வரும் வாகனங்கள் உயர்ந்த விலை பிரிவில் உள்ளவை; மூன்றாவது விஷயம் கட்டமைப்பு குறித்த சந்தேகம் – சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் எந்த அளவிற்குக் கிடைக்கும் என்பது.

“இப்போதைக்குப் பார்த்தால், தொழில்நுட்ப கண்ணோட்டத்தில் புதிய விஷயங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சார்ஜ் செய்யும் வசதி, பேட்டரி திறன் ஆகியவற்றில் முன்னேற்றம் உள்ளது. உள்நாட்டிலேயே நாம் பேட்டரிகளைத் தயாரிக்கத் தொடங்கினால், விலைகள் இன்னும் குறையும். எனவே மின்சார வாகனங்களின் விலை கணிசமாகக் குறையும்” என்று பிபிசியிடம் மேனன் குறிப்பிட்டார்.

சீனாவை சார்ந்துள்ளதா?

மின்னணு பொருட்களாக இருந்தாலும் அல்லது தொடக்க நிலை மின்சார வாகனங்களாக இரு்தாலும், இந்தியா எப்போதும் சீனத் தயாரிப்புகளையே எதிர்நோக்கியுள்ளது. அவை இந்திய சாலைகளுக்கு ஏற்றவையாக உள்ளதாகக் கருதப்படுகிறது.

2019 ஆம் ஆண்டில் என்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் காலடி வைத்தது. உரிய அளவுக்கு அந்த நிறுவனம் தனது இருப்பைப் பதிவு செய்தது. இந்தக் கண்காட்சியில் சீனாவின் ஜாம்பவான் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் Haval என்ற மின்சார SUV வாகனத்தை அறிமுகம் செய்யும் திட்டத்தையும், GWM EV என்ற மின்சார வாகனத்தை அறிமுகம் செய்யும் திட்டத்தையும் அறிவித்தது. இந்தியாவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யப் போவதாக அந்த நிறுவனம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்தியாவின் மேற்குப் பகுதியில் புனே அருகில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை அந்த நிறுவனம் 2020ன் பிற்பகுதியில் கையகப்படுத்த உள்ளது.

டெல்லியைச் சேர்ந்த Bird Electric என்ற நிறுவனம் அடுத்த 15 – 18 மாதங்களில் சீனாவில் இருந்து Haima மின்சார கார்களை இந்தியாவுக்குக் கொண்டு வர உத்தேசித்துள்ளது. அது 200 கிலோ மீட்டர் வரை செல்லக் கூடியதாக, ரூ.10 லட்சம் அல்லது 14,000 டாலர் விலை கொண்டதாக இருக்கும். Haima என்பது, சீனாவில் சாங்க்ச்சுன் நகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள அரசுக்குச் சொந்தமான FAW குழுமத்தின் ஓர் அங்கம்.

BYD-ல் இருந்து சுமார் 120 மின்சார பேருந்துகள் ஏற்கெனவே இந்திய சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மின்சார வாகன உற்பத்தியில் உலகில் முன் வரிசையில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான BYD நிறுவனத்தின் தலைமையகம் சென்ஜென் நகரில் உள்ளது. மின்சார பேருந்துகளை சென்னையில் Olektra Greentech -ல் அசெம்பிள் செய்கிறது.

இந்திய சந்தையில் சீனாவின் ஆதிக்கம் எதிர்பார்க்கப்பட்டது போல உள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு அடுத்தபடியாக மின்சார வாகன சந்தையில் சீனா உள்ளது. லித்தியம் – அயன் பேட்டரி வணிகத்தில் சீனா தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகம் முழுக்க மின்சார வாகனங்களுக்கான பெரும்பாலான பேட்டரிகளை சீனா தான் வழங்கி வருகிறது.

அதே சமயத்தில், புறக்கணித்துவிட முடியாத அளவுக்கு இந்தியாவின் சந்தை பெரியதாக உள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது மிகப் பெரிய சந்தையாக இந்தியா மாறும். அப்போது 7.4 மில்லியன் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கும் என்று Goldman Sachs ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், கடந்த பல மாதங்களாக இந்தியாவில் ஆட்டோ மொபைல் விற்பனை கடந்த பத்தாண்டுகளில் மிகக் குறைந்த அளவுக்குப் போயுள்ளது. இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன – உள்நாட்டில் பொருளாதாரத் தேக்கம். நுகர்வோர் செலவிடுதல் வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைந்துவிட்டது. சந்தைக் கொள்கைகளில் நிலையற்ற தன்மை மற்றும் மாற்று எரிபொருள் ஆதாரங்களை நாடும் ஆர்வம் ஆகியவை இதர்குக் காரணமாக உள்ளன.

எலக்டிரிக் கார்

மின்சார வாகன உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. Suzuki மற்றும் டாட்டா மோட்டார்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள், உள்நாட்டிலேயே லித்தியம் – அயன் பேட்டரி தயாரிப்பில் பெருமளவு முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன.

லித்தியம் – அயன் பேட்டரிகளை உருவாக்க தங்களின் டாட்டா கெமிக்கல்ஸ் மற்றும் டாட்டா பவர் நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றி வருவதாக டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது. ஆனால், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற அவசியமான தாதுக்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யாமல் இது சாத்தியமாகாது.

இந்தியாவின் லித்தியம் – அயன் பேட்டரி இறக்குமதி 2014-15ல் இருந்து 2018-19 வரையிலான காலத்தில் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது என்று அரசின் கிளீன் டெக்னிகல் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2022க்குள் இது 10 கிகாவாட் அளவுக்கும், 2025 வாக்கில் 50 கிகா வாட் அளவுக்கும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

“உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், உள்நாட்டிலேயே திறன் உருவாக்கப்பட்டாலும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் வாகனங்களுடன் விலையில் போட்டியிட முடியுமா என்பது சந்தேகமே” என்று LiveMint கட்டுரையாளர், நிதி பாய் கூறியுள்ளார்.

விலைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியா போன்ற சந்தையில், மின்சார வாகன ஆதிக்கத்தில் அது ஒரு தடையாக இருக்கலாம்.

Sources : BBC

Back to top button