கறிக் கடைகாரருக்கு கொரோனா வைரஸ் தொற்று: இறைச்சி வாங்கியவர்களுக்கு அரசு வேண்டுகோள்
டெல்லி சென்று திரும்பிய புதுச்சேரியைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள 4 நபர்களில், 3 பேர் புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சார்ந்தவர்கள், ஒருவர் திருவண்டார்கோவில் பகுதியைச் சார்ந்தவர்.
இந்தநோய்த் தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இறைச்சிக் கடை நடத்தி வந்திருக்கிறார். கடந்த 22ஆம் தேதியிலிருந்து புதுச்சேரியில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அத்தியாவசிய மற்றும் இறைச்சிக் கடைகள் திறக்க புதுச்சேரி அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர் இறைச்சி விற்பனை செய்துள்ளதாகவும், அவரிடமிருந்து அப்பகுதி மக்கள் இறைச்சி வாங்கி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரிடம் இறைச்சி வாங்கி சென்றுள்ள நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களுக்கு சளி, இருமல் போன்றவை இருக்கும் பட்சத்தில் அவர்களாகவே தெரியப்படுத்த அரசாங்கம் வேண்டுகோள் வைத்துள்ளது.

பாதிப்பட்டவர்களுடன் மக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பிலிருக்க வாய்ப்பிருக்கும் என்ற சந்தேகத்தின் காரணமாக, அரியாங்குப்பம் பகுதியில் உள்ள மக்கள் 14 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்லவும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டு காவல் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது.
முழுவதுமாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால், இந்த பகுதியில் இருக்கும் மருந்தகம், பால், காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து கடைகளையும் திறக்க தடை செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் வீடு வீடாகச் சென்று அனைவருக்கும் அரசே பால் விநியோகம் செய்கிறது. காய்கறி மற்றும் அத்தியாவசிய தேவைகள் குறித்து தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினால், வீட்டிற்குச் சென்று அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மருந்து தேவைப்படும் பட்சத்தில், மருத்துவக் குழு உதவியுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்று மருத்துவருடன் கொடுக்க ஏற்படும் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் பிற்பகல் 2.30 மணிக்கு மேல் திறக்க தடை செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் முற்றிலுமாக வெளியே வருவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவார்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவர்கள், உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதால், இதனைப் பரவாமல் தடுக்கவும், தகுந்த சிகிச்சை மேற்கொள்ளவும் அனைத்து வசதிகள் இருப்பதாகவும், மேலும் பொதுமக்கள் இதுகுறித்து அச்சம் படவேண்டாம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மாஹேவில் 69 வயதுடைய மூதாட்டி ஒருவர் இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபராவர்.
இவர் தொடர்ந்து 15 நாட்களுக்கு மேலாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, கடந்த மாதம் 28ஆம் தேதி முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தற்போது பாதிக்கப்பட்டுள்ள அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்களும் நலமாக இருப்பதாக சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.