கொரோனாவும் தீர்க்கதரிசனங்களும் – nostradamus coronavirus prediccion
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் உலகெங்கினும் உள்ள மக்கள் மிகுந்த பதற்றத்துக்குள்ளாகியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. உலக சுகாதார ஸ்தாபனமும் இதன் தீவிரத்தை உணர்ந்து இதை தீவிர தொற்று நோயாக (Pandemic) பிரகடனப்படுத்தியுள்ளது. இவ்வைரஸ் தொடர்பில் அதிகமான வதந்திகளே தற்போது தீவிரமாகியுள்ளன. இந்நிலையில் கொரோனா என்ற இந்த வைரஸ் தொற்று குறித்து ஏற்கனவே கூறப்பட்டிருந்ததா போன்ற ஆராய்ச்சிகளும் தேடல்களும் தற்போது ஆரம்பித்து விடப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தீர்க்கதரிசிகளின் எதிர்வுக்கூறல்களில் இந்த கொரோனா வைரஸ் சம்பந்தப்பட்டிருக்கின்றதா என அது தொடர்பாக ஆர்வமுள்ளவர்கள் தேடத் தொடங்கியுள்ளனர். உலக நிகழ்வுகள் தொடர்பில் பல எதிர்வுக் கூறல்களை கூறி பிரசித்தி பெற்ற ஒருவராக விளங்குபவர் பிரான்ஸ் நாட்டின் தீர்க்கதரிசியும் மூலிகை மருத்துவரும் ஜோதிடருமான நோஸ்ட்ரடாமஸ். இவர் 500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்.
மனிதன் நிலவில் காலடி வைத்தமை, உலகப்போர், ஹிரோசிமா –நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல், ஹிட்லர், முசோலினி ஆகியோரின் இறப்பு, அமெரிக்க இரட்டை கோபுரத்தாக்குதல், இந்தியாவில் பெண்ணின் ஆட்சி அவர் கொல்லப்படுதல் (இந்திரா காந்தி) போன்றவற்றை மிகவும் துல்லியமாக கணித்து அதை சங்கேத வார்த்தைகளின் மூலம் எழுதி வைத்தவர் நோஸ்ட்ரடாமஸ். ஆனால் அவர் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றி எழுதியிருக்கின்றாரா என்பது பற்றி இப்போது தேடல் தொடங்கியுள்ளது. ஏனென்றால் சங்கேத வார்த்தைகள் மூலம் அவர் எழுதியுள்ள கணிப்புகள் சுமார் 6 ஆயிரத்தை தாண்டும். அதை இலகு படுத்தம் முயற்சிகள் இன்னும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சில்வியா பிரவுண் 12 வருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு நூலில் இந்த வைரஸ் தாக்கம் பற்றி குறிப்பிட்டுள்ளமை தற்போது வெளிவந்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒரு கொடிய வைரஸ் தாக்கத்தால் உலகம் பாதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சில்வியா பிரவுணின் கணிப்பு
2008 ஆம் ஆண்டு அவர் எழுதிய End of Days: Predictions and Prophecies about the End of the World (நாட்களின் முடிவு : உலக முடிவைப் பற்றிய கணிப்புகளும் தீர்க்கதரிசனங்களும்) என்ற நூலின் 312 ஆவது பக்கத்தில் ஆங்கிலத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“In around 2020 a severe pneumonia-like illness will spread throughout the globe, attacking the lungs and the bronchial tubes and resisting all known treatments. Almost more baffling than the illness itself will be the fact that it will suddenly vanish as quickly as it arrived, attack again ten years later, and then disappear completely.”
இதன் அர்த்தம் என்னவென்றால், “2020 ஆம் ஆண்டில், கடுமையான நிமோனியா போன்ற நோய்த் தாக்கம் உலகம் முழுவதும் பரவி, நுரையீரல் மற்றும் மூச்சுக் குழாய்களைத் தாக்கும். கண்டுபிடிக்கப்பட்ட எந்த மருந்துகளும் சிகிச்சைகளும் இதை கட்டுப்படுத்தாது. நோயை விடவும் மிகவும் குழப்பமான விடயம் என்னவெனில் பரவிய வேகத்தில் அது திடீரென மறைந்து விடும், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதன் தாக்கம் இருக்கும், பின்னர் முற்றிலும் மறைந்துவிடும்.”
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். சமூக ஊடகங்களில் இது தற்போது வைரலாகியுள்ளது. ஆனால் அவர் கூறியுள்ள காய்ச்சல் கொரோனா இல்லை. கொரோனாவின் தொடர்ச்சியாக வரப்போகும் ஒரு காய்ச்சலைப்பற்றி தான் அவர் கூறியுள்ளார் என மற்றுமொரு சாரார் கருத்துக் கூறி வருகின்றனர். சில்வியா பிரவுண் 2013 ஆம் ஆண்டு தனது 77 ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
டீன் கூன்ட்ஸ்
இதேவேளை மற்றுமொரு அமெரிக்க புனைகதை நாவலாசிரியரான டீன் கூட்ஸ் எழுதிய the Eyes of Darkness என்ற திகில் நாவலில் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நாவல் 1981 ஆம் ஆண்டு வெளிவந்ததாகும். இந்த நாவலின் கதை சீனாவின் வுஹான் நகரில் இடம்பெறுவதாகவே சித்திரிக்கப்படுகின்றது.
கதையின் சுருக்கம்
கிறிஸ்டினா இவான்ஸ் என்ற பெண்ணின் மகன் டேனி ஒரு முகாமுக்கு செல்கிறார். எனினும் டேனி சென்ற ஒரு மாதத்திற்குள் அவர் இறந்து விட்டதாக கிறிஸ்டினாவுக்கு தகவல் வருகின்றது. இதை அவரால் நம்ப முடியவில்லை. ஒரு வருடத்திற்கு பிறகு மகனுக்கு அந்த முகாமில் என்ன நடந்தது என்று கண்டுபிடிக்க முடிவு செய்கிறார். அந்த முயற்சியில் தன் மகன் டேனி சாகவில்லை என்றும் உயிருடன் ஒரு இராணுவ முகாமில் இரகசியமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான் என்பதை தெரிந்து கொள்கிறார்.