செய்திகள்

தாழமுக்கம் உருவாகிறது ! எதிர்வரும் நாட்களில் தொடர்ச்சியாக மழை !

இலங்கையில் வட கிழக்குப் பிராந்தியங்களில் எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் சில நாட்களுக்கு தொடர்ச்சியாக மழை காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரி சூரியகுமார் தெரிவித்தார்.

இதேவேளை, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் அடுத்து வரும் 48 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்க மண்டலம்  (Low Pressure Area) உருவாகி, அதனை அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் இது மேலும் வலுவடைந்து, தாழமுக்கமாக (Depression) உருமாறி மேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கரையோரப் பிரதேசத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 02 ஆம் திகதியளவில் அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக இலங்கையில் வட கிழக்குப் பிராந்தியங்களில் முக்கியமாக மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற மாவட்டங்களின் சில பகுதிகளில் எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் சில நாட்களுக்கு தொடர்ச்சியாக மழை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என குறிப்பிட்டார்.

இதேவேளை, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலையுடன் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Back to top button