செய்திகள்

ரஜினிகாந்த் விளக்கம்: “என் ட்வீட்டை ட்விட்டர் தவறாக புரிந்து கொண்டு விட்டது”

ரஜினிகாந்த் மக்கள் ஊரடங்கு தொடர்பாகப் பகிர்ந்த ட்வீட்டை ட்விட்டர் நேற்று நீக்கியது.

இதற்கு இப்போது ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

அவர், “நேற்று பதிவு செய்த காணொளியில் 12 – 14 மணி நேரம் மக்கள் வெளியில் நடமாடாமல் இருந்தாலே கொரோனா வைரஸ் பரவுவது தடைபட்டு, சூழல் மூன்றாம் நிலைக்கு செல்வது தவிர்க்கப்படலாம் என்று நான் கூறி இருந்ததால், அது,” இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும்,” என்று பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அதிகம் பகிரப்பட்டது. இதனால் ட்விட்டர் நிர்வாக அதை நீக்கி உள்ளது.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு பரிந்துரைக்கும் காலம் வரை இன்றைப் போலவே சுய தனிமைப்படுத்துதலை நாம் கவனமாகப் பின்பற்றி இந்த கொடிய வைரஸை வீழ்த்துவதற்கான முயற்சியில் கவனத்தை செலுத்துவோம். இவ்வேளையில் என்னுடைய காணொளியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, ஆதரித்து, மக்களிடம் பதிவைச் சரியான முறையில் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி,” என்ற ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நடந்தது என்ன?

நடிகர் ரஜினிகாந்த் கொரோனா குறித்து வெளியிட்டிருந்த வீடியோவை ட்விட்டர் நீக்கியது.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று சனிக்கிழமை கொரோனா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “12-14 மணி நேரம்வரை கொரோனா பரவாமல் தடுத்துவிட்டால், இந்தியாவில் மூன்றாம் நிலை பரவலைத் தடுத்துவிடலாம்” என்ற கருத்தையும், வேறு சில கருத்துகளையும் தெரிவித்திருந்தார்.

அந்த வீடியோ அவரது ட்விட்டர் மற்றும் யு டியூப் பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வீடியோ தங்களது விதிமுறைகளை மீறி இருப்பதாகக் கூறி ட்விட்டர் அந்த பதிவை நேற்று சனிக்கிழமை நீக்கியது.

இருந்தபோதும், அந்த வீடியோ யு டியூபில் பார்க்கக் கிடைக்கிறது.

ட்விட்டரில் ரஜினிகாந்தை 57 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

Back to top button