செய்திகள்

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2022: சிம்மம்

உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிரச்னைகளைப் பேசித்தீர்ப்பீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணையோடு மனம்விட்டுப் பேசி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.

போராடும் மனமும் தாராள குணமும் கொண்ட சிம்மராசிக்காரர்களுக்கு இந்த 2022ஆம் ஆண்டு எப்படிப்பட்ட பலன்களைத் தரும் என்பதைப் பார்க்கலாம்.

சிம்மராசிக்கு 7ஆம் வீடான கும்பத்தில் குரு அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பது என்பது மிகவும் சாதகமான அம்சம். பணவரவில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிரச்னைகளைப் பேசித்தீர்ப்பீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணையோடு மனம்விட்டுப் பேசி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். திருமணமாகிக் குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்குக் குழந்தைபாக்கியம் உண்டாகும். சகோதர சகோதரிகளுக்குத் திருமணம் கைகூடும்.

உங்கள் ராசிக்கு நாலாம் வீடான விருச்சிகத்தில் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பண வரவு திருப்தி தரும். வழக்குகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள்களாக முயன்றும் நடக்காத வீடு கட்டும் பணியை இப்போது வெற்றிகரமாகத் தொடங்குவீர்கள்.

சுக்கிரன் 6ஆம் வீட்டில் மறைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புதுவருடம் பிறப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி முதல் குருபகவான் 8ஆம் இடமாகிய மறைவு ஸ்தானத்துக்குச் செல்வதால் குடும்பத்தில் சின்னச் சின்னக் குழப்பங்கள் வந்து நீங்கும். செலவுகள் அதிகரிக்கும். சொல்லமுடியாத பணிச்சுமையால் ஓய்வெடுக்க முடியாமல் திண்டாடுவீர்கள். தேவையற்ற விவாதங்களைத் தொடங்கவோ கலந்துகொள்ளவோ வேண்டாம். பண நெருக்கடியும் அதிகமாகும்.

கேது பகவான் ஆண்டின் தொடக்கத்தில் நான்காம் இடத்தில் இருக்கிறார். மார்ச் மாதம் 20ஆம் தேதிவரை அங்கு சஞ்சாரம் செய்யும் கேதுபகவானால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம் என்பதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்து இடுவதற்கு முன்பாக நன்கு யோசித்துச் செய்யவும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களோடு மோதல் போக்கும் ஏற்படலாம் என்றாலும், 21.3.2022 அன்று கேதுபகவான் 3ஆம் இடத்துக்கு வந்துவிடுகிறார். ராகு பகவானும் 9ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். இதனால் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் இருந்த சந்தேகங்கள் நீங்கி அன்பும் அமைதியும் கைகூடும். ஆர்வத்தோடு பணி ஆற்றுவீ்ர்கள்.

ஆனால், இதனால் ஏற்படும் சக பிரச்னைகளையும் சமாளிக்கும் ஆற்றலை ஆறாம் இட சனிபகவான் வழங்கவிருக்கிறார். ராசிக்கு ஆறாம் வீடான மகரத்தில் சனிபகவான் ஆட்சி பலம் பெற்று அமர்ந்திருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைக் கொடுப்பார். முன்னேற்றப்பாதையில் செல்வீர்கள். குடும்பத்தில் அமைதி இருக்கும். வருமானமும் உயரும். விலையுயர்ந்த ஆபரணங்கள், வீடு, மனை வாங்குவீர்கள். அதிகாரிகள் ஆட்சியாளர்களின் நட்பு கிடைக்கும்.

வியாபாரிகள்: தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களை மாற்றிப் புதியவர்களை நியமிப்பீர்கள். வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மே மாதம் புதிய தொடர்புகள் மூலம் தொழிலை விரிவுபடுத்தத் திட்டமிடுவீர்கள்.

ஜூன், ஜூலை, நவம்பர் மாதங்களில் நல்ல லாபமும் அதிரடியான முன்னேற்றமும் உண்டாகும். தொழில் செய்யும் இடத்தை உங்கள் விருப்பம்போல மாற்றியமைப்பீர்கள். லாபம் பெருகும். உணவு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், கமிஷன், தரகு அடிப்படையில் வேலை செய்பவர்கள், மின்சார, மின்னணுப் பொருள் விற்பனை செய்பவர்களுக்கு இது மிகவும் ஆதாயமான ஆண்டாக அமையும். கூட்டுத்தொழில் சிறக்கும்.

உத்தியோகஸ்தர்கள்: அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த பதவியுயர்வு இப்போது கிடைக்கும். சகஜ நிலை உருவாகும். அவமானங்கள், பிரச்னைகள் மறையும். வேலைபார்க்கும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். இதுவரை பிடித்தமான சம்பளப் பணம் மற்றும் சலுகைகள் திரும்பக்கிடைக்கும். புதிய வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு பரிபூரணமாகக் கிடைக்கும். பணிகளை விரைந்துமுடித்துப் பாராட்டுகளை வாங்குவீர்கள். அலுவலகம் தொடர்பான விஷயங்களை வெளியாட்கள் யாரோடும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஏப்ரல் மாதத்துக்குப்பின் முக்கிய ஆவணங்களைக் கையாளும்போது கவனம் தேவை.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு பதவி புகழையும், பணத்தையும் தந்து வாழ்வில் ஒரு படி உயர வைக்கும்.

பரிகாரம்: திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்கீழ்வேளூர் எனும் கீவலூரில் வீற்றிருக்கும் அருள்மிகு அட்சயலிங்கேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று தரிசியுங்கள்.

Back to top button