உலக சுகாதார ஸ்தாபனம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனை
உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் சில ஆலோசனைகளை பொதுமக்களுக்கு விடுத்துள்ளது.
இது குறித்து, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் அதனோம் (Tedros Adhanom) நேற்று (20) ஜெனிவாவில் தௌிவுபடுத்தினார்.
அவர் தெரிவித்திருப்பதாவது,
நாம் நாடுகளுக்கு மாத்திரமன்றி அனைத்து மக்களுக்கும் இந்த ஆலோசனைகளை வழங்குகின்றோம். இந்த நிலைமையால் பலரின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல், உள நலத்தை பாதுகாப்பதற்கு நாம் செயற்பட வேண்டும். ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள். மதுபான பாவனை மற்றும் குளிர்பானம் அருந்துவதைக் குறைக்க வேண்டும். புகைத்தல் வேண்டாம். கொவிட் – 19 தொற்றினால் புகைபிடிப்பவர்களுக்கு அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். முதியோர் நாளொன்றுக்கு 30 நிமிடங்களும் சிறுவர்கள் ஒரு மணித்தியாலமும் உடற்பயிற்சியில் ஈடுபடுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்கின்றது. வீட்டிலிருந்து பணிபுரிவதாயின் ஒரே இடத்தில் இருக்க வேண்டாம். தேவையான தகவல்களை நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து மாத்திரம் பெற்றுக்கொள்ளுங்கள்
இதேவேளை, சீனாவின் வுஹான் நகரின் நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட விதம், உலகிற்கு ஓர் எடுத்துக்காட்டு என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிக மோசமான நிலைமையை மாற்றியமைக்க முடிந்தமையால், உலகின் அனைத்து நாடுகளுக்கும் வுஹான் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. நிச்சயமாக நாம் கவனமாக இருக்க வேண்டும். அந்த நிலைமை மிகவும் மோசமடையக்கூடும். எனினும், உலகில் இந்த வைரஸை ஒழித்த நாடுகள், உலகின் ஏனைய நாடுகளுக்கு சக்தியை வழங்குகின்றன.
இதேவேளை, COVID 19 பரவியுள்ள ஆசிய நாடுகளுக்கு உதவுவதற்கு தாம் தயார் என அலிபாபா நிறுவனத்தின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான ஜெக்மா தமது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
18 இலட்சம் முகக்கவசங்கள், 2,10,000 பரிசோதனை உபகரணங்கள், 36,000 பாதுகாப்பு உடை, புகை விசுறும் இயந்திரங்கள், வெப்பமானி ஆகியவற்றை இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், கம்போடியா, லாஓஸ், மாலைத்தீவுகள், மொங்கோலியா, மியன்மார், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.