செய்திகள்

எச்சரிக்கை ! மீன்களை உண்பதால் புற்றுநோய் ஏற்படலாம் – இது தான் காரணம் !

‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பலின் விபத்தினால் கடலில் கலக்கப்பட்டுள்ள இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றை உணவாக்கிக்கொள்ளும் கடல்வாழ் உயிரினங்களை நாம் உட்கொள்ளும் வேளையில் அவை நீண்டகால அல்லது குறுகியகாலத்தில் புற்றுநோய் போன்ற நோய்களை உருவாக்க வாய்ப்புகள் உள்ளதாக உயிரியல் மற்றும் கடல்சார் தொழிநுட்ப பேராசிரியர் ருசிரா குமாரதுங்க தெரிவித்தார்.

இலங்கை கடல் பரவில் மூழ்கிக்கொண்டுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து வெளியாகியுள்ள இரசாயன பதார்த்தங்கள், பிளாஸ்டிக் துண்டுகள் காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கடல் உயிரினங்கள் எதிர்கொள்ளவுள்ள விளைவுகள் குறித்து தெளிவுப்படுத்துகையில் அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடல் உயிரினங்களை பொறுத்தவரையில் இந்த காலத்திலேயே இனப்பெருக்கம் செய்யும். மீனினங்கள் மற்றும் ஏனைய கடல் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்ய  கரையை நோக்கி வேகமாக வரும் காலகட்டமாகும்.

அவ்வாறானதொரு நிலையில் துரதிஷ்டவசமாக எமது கடல் பரப்பில் நச்சு இரசாயன பதார்த்தங்கள் கலக்க நேர்ந்துள்ளது.

சில வேளையில் எமது கடல் பரப்பில் ஏற்பட்டுள்ள விபத்தை மீனினங்கள் உணர்ந்தால் அவைகள் தமது பயணப்பாதையில் இருந்து விலகவும் வாய்ப்புகள் உள்ளது.

எவ்வாறு இருப்பினும் இப்போது கடலில் கலந்துள்ள இரசாயனங்கள் காரணமாக கடல் உயிரினங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.  

குறிப்பாக பிளாஸ்டிக் துண்டுகள் கடலில் கலந்துள்ளன. இவற்றை மீன்கள் உண்பதற்கு அதிக வாய்புகள் உள்ளன. அதேபோல் கடலில் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் நீருடன் கலந்து சூரிய ஒளியின் தாக்கங்கள் அதன்மேல் பட்டால் அவை வேறு இரசாயன பதார்த்தங்களாக மாற்றமடையலாம்.

இதன் விளைவுகள் மோசமானத அமையலாம்.  மீன்கள் இந்த பிளாஸ்டிக் பொருட்களை உணவாக்கிக்கொண்டால்  அவை மீன்களின் உடலில் படியும்.

சிறிய மீன்கள் இவற்றை உட்கொள்ளும் பட்சத்தில் சிறிய மீன்களை உண்ணும் பெரிய மீன்களும் இதனால் பாதிக்கப்படலாம். அதனையும் தாண்டி வெறுமனே பிளாஸ்டிக்காக இல்லாது வேறு இரசாயனமாக மாற்றம் பெற்றால் அவை மீனின் உடலில் பதியலாம்.

அவற்றை  அறியாது நாம் மீன்களை  உட்கொண்டால் அவை குறுகியகால அல்லது நீண்டகாலதின் பின்னர் புற்றுநோய் போன்ற நோய்களை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன.

எனவே இது மிக அச்சுறுத்தலான விடயமாகும். மக்கள் எந்த மீனை உணவாக பயன்படுத்துவது, எதனை நிராகரிப்பது என்பதை கூறுவதும் சிரமமான ஒன்றாகியுள்ளது. முடிந்த வரையில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடாது தவிர்ப்பது ஆரோக்கியமானதாகும்.

அதுமட்டுமல்ல இலங்கையின் கடல்சார் ஆய்வுகளை முழுமையாக செய்ததாக எம்மிடம்  தரவுகள் எதுவும்  இல்லை, கடந்த 2018 ஆம் ஆண்டில் நோர்வே ஆய்வுக்கப்பலொன்று எமது கடல் எல்லையில் முன்னெடுத்த ஆய்வுகளின் பின்னர் அவர்கள் வழங்கிய தரவுகள் மட்டுமே எம்மிடம் உள்ளன.

எனவே எமது கடல் வளம் எவ்வாறு இருந்தது என்பதையும் இப்போது அவை எவ்வாறு மாறியுள்ளது என்பதையும் அவதானிக்க முடியாத நிலையொன்று எமக்குள்ளது. எனவே எமக்கென்ற ஆய்வு மையங்களை இனியாவது ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். 

Back to top button