செய்திகள்

கடுமையாக்கப்பட்ட ஊரடங்கு விதிகள்..!: பிரதான, குறுக்கு வீதிகளுக்கு இறங்கினால் கைது – இதுவரை 4200 பேர் கைது

தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலப்பகுதியில் அதனை மீறி பாதைகள், குறுக்கு வீதிகளில் நடமாடுவோர், ஒன்று கூடுவோரை எந்த தயவுதாட்சனையும் இன்றி கைது செய்யுமாறும், அவ்வாறு கைது செய்யப்படுவோருக்கு பொலிஸ் பிணை வழங்காமல் அவர்களை நீதிமன்றங்களில் ஆஜர் செய்யுமாறும் பதில் பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளார்.

நேற்று மாலை இந்த விஷேட அறிவித்தல் விடுக்கப்பட்டதாக பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கேசரிக்கு தெரிவித்தார்.

ஊரடங்கு காலத்தின் போது வழங்கப்பட்ட சில சலுகைகளை பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்ததை அடுத்து அரச ஒசுசல தவிர்ந்த மருந்தகங்கள், ஏனைய அனைத்து விதமான வர்த்தக நிலையங்களையும் மூட உத்தரவிட்டதாகவும், அது தொடர்பில் செயற்படவும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

இந்த உத்தரவை மீறி வர்த்தக நிலையங்களை எவரேனும் திறந்தால், அவர்கள் கைது செய்யப்படுவர் எனவும் வர்த்தக நிலைய உரிமையாளர், முகாமையாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

இது குறித்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கேசரிக்கு தகவல் தருகையில்
‘ ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் இதுவரை 4200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1100 வாகனங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறுவது குறித்து கைது செய்யப்படும் எவருக்கும் இனிமேல் பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது.  வாகங்களும் நீதிமன்றிலேயே ஒப்படைக்கப்படும்.

மக்களுக்கு இன்னும்  இந்த தொற்றுநோய் நிலைமையின் பாரதூரம் விளங்கவில்லை. நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும். நாட்டில் பாரிய சுகாதார சவால் நிலவுவதாலேயே ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டது. எனவே, ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலத்தில் வௌியே செல்ல வேண்டாம். மீறி பிரதான, குறுக்கு வீதிகளுக்கு வருவோர் எந்த தயவுதாட்சனையும் இன்றி கைது செய்யப்படுவர்.

அத்தியவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு மட்டுமே பாதையில் பயணிக்க ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும். ‘ என தெரிவித்தார்.

இதனிடையே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு அனுப்புவதற்கான செயற்பாடுகளில் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணி செயற்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனவே, ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலத்தில் வௌியே செல்ல வேண்டாம் என அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட வாகனங்கள் மாத்திரமே இந்த காலப்பகுதியில் பயணிக்க முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, பொலிஸாரும் முப்படையினரும் ஊரடங்கு சட்ட விதிமுறைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button