செய்திகள்

கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதில் எவருக்கும் விஷேட சலுகை இல்லை – சன்ன ஜயசுமன

கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சினால் ஒழுங்குமுறையொன்று திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அப்பால் சென்று தனவந்தர்களுக்கோ அல்லது அதிகாரமுடையவர்களுக்கோ விஷேட சலுகைகள் எவையும் வழங்கப்பட மாட்டாது என்று ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

உலகின் பல நாடுகளிலும் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பு மருந்துகளில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரசெனிகா தடுப்பு மருந்தே பக்க விளைவுகள் மிகக் குறைவானதாகும்.

மில்லியனில் ஒருவருக்கே இதன் மூலம் பக்க விளைவு ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த தடுப்பூசி மூலம் பாரிய பக்க விளைவுகள் ஏற்படக் கூடும் என்று யாரும் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இலங்கையில் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துகையில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில் ,

18 வயதுக்கு மேற்பட்டோருக்கே தடுப்பூசி வழங்கப்படும். இலங்கையில் மொத்த சனத்தொகையில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமானோர் 18 வயதுக்கு மேற்பட்டோராவர். அதற்கமையவே 65 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்க எதிர்பார்த்துள்ளோம்.

முதற்கட்டமாக வைத்தியர்கள் , தாதிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோருக்கும் , இரண்டாம் கட்டமாக முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கும் , முன்றாம் கட்டமாக 65 வயதுக்கு மேற்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு திட்டமிட்டுள்ள ஒழுங்கு விதிமுறை மீறி யாருக்கும் தடுப்பூசி வழங்கப்படா மாட்டாது. அதாவது பணத்தை வழங்குபவர்களுக்கோ அதிகாரத்திலுள்ளவர்களுக்கோ தடுப்பூசி வழங்குவதில் எந்த சலுகையும் வழங்கப்படமாட்டாது.

இந்தியாவைத் தொடர்ந்து சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கான இராஜதந்திரமட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

அத்தோடு உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாகவும் மொத்த சனத்தொகையில் 20 வீதமானோருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். இவற்றின் பின்னர் பற்றாக்குறை ஏற்படும்பட்சத்தில் அதனை பணம் கொடுத்து கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

உலகின் பல நாடுகளிலும் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பு மருந்துகளில் ஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து பக்க விளைவுகள் குறைவானதாகும்.

இது வரையில் வழங்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்தினால் பாரிய பக்க விளைவுகள் எவையும் ஏற்பட்டதில்லை. எனினும் மயக்கமடைதல் உள்ளிட்ட ஏதேனுமொரு பக்க விளைவு ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் சர்வதே மதிப்பீட்டின்படி மில்லியனுக்கு ஒன்று அல்லது இரண்டு என்ற அடிப்படையிலேயே இவ்வாறு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இது குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கொரோனா வைரஸ் மற்றும் அண்மையில் உருவாகிய உருமாறிய வைரஸ் என்பவற்றுக்கு ஒக்ஸ்போட்ர் தடுப்பூசி ஈடுகொடுக்கக் கூடியது என நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

Back to top button