கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் 218 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக இன்று முதல் வெலிகந்த மற்றும் முல்லேரியா வைத்தியசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளன.
இந்த வைத்தியசாலைகளில் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
அதற்கமைய, இந்த வைத்தியசாலைகளில் இன்று முதல் அங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதனிடையே, கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அங்கொடை தொற்றுநோயியல் நிறுவகத்தில் விமானப்படையினரால் மற்றுமொரு விடுதி அமைக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டாலும் 21, 22 ஆம் திகதிகளைத் தவிர ஏனைய நாட்கள் அரசாங்க விடுமுறையாகக் கருதப்படாது என ஜனாதிபதி செயலாளர் அனுப்பிய சுற்றநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மாவட்ட செயலகங்களினதும், பிரதேச செயலகங்களினதும் கடமைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அந்த சுற்றுநிரூபத்தில் கூறப்பட்டுள்ளது.