கொரோனா தொற்று இருப்பதை அறிவித்தால் சன்மானம்
சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான பரிசோதனைகளுக்கு முன்வந்தால் அவர்களுக்குத் தகுந்த சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹுபே மாகாணத்தில் வசிக்கும் மக்கள் தமக்கு நோயின் அறிகுறிகள் இருப்பதாக முன்கூட்டியே தெரிவித்து பரிசோதனையின் பின்னர் குறித்த நோய் உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு சன்மானமாக 10,000 யுவான் (1,425.96 டொலர்) வரை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஹுபே மாகாணத்தின் தலைநகரான வுஹானிலிருந்து சுமார் 150 கிலோ மீற்றர் (90 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஒரு மில்லியன் மக்கள் வசிக்கும் கியாஞ்சியாங் நகரத்தில், இதுவரை மொத்தம் 197 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஹுபேயில் 65,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகியும், 2,600 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது. அத்தோடு உலகளவில், இறப்பு எண்ணிக்கை சுமார் 2,800 அதிகரித்துள்ளதுடன், சுமார் 80,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து குறித்த தொற்றுநோய் குறித்து பரிசோதனைகளை மேற்கொண்டுவரும் கியாஞ்சியாங் பணிக்குழு, மக்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் நோயறிகுறி இருப்பதாகத் தெரிவித்து அது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு 10,000 யுவான் சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என உடனடியாக நிராகரிக்கப்படாதவர்களுக்கு 1,000 யுவான் என்றும், அதே சமயம் “சந்தேகத்திற்கிடமான” என பரிசோதனையில் தெரியவந்தவர்களுக்கு 2,000 யுவான் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.