செய்திகள்

கொரோனா வைரஸ் புதிய திரிபு: “நோயாளிகளின் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கலாம்” – பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபு, ஒப்பீட்டளவில் நோயாளிகளின் உயிரை அதிகம் பறிக்கலாம் என தொடக்க நிலை ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதன் தரவுகளில் ஒரு நிலையற்றதன்மை நிலவுகிறது. இந்த கொரோனா வைரஸின் புதிய திரிபுக்கு எதிராகவும் கொரோனா தடுப்பு மருந்துகள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸின் புதிய திரிபு மற்றும் பழைய திரிபுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையை பகுப்பாய்வு செய்து கணிதவியலாளர்கள், இந்தத் தரவுகளை திரட்டியுள்ளனர்.

வேகமாக பரவக் கூடிய கொரோனா வைரஸின் புதிய திரிபு, ஏற்கனவே பிரிட்டன் முழுக்க பரவியுள்ளது.

“இந்த புதிய திரிபு (லண்டன் & தென் கிழக்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட திரிபு) அதிவேகமாக பரவுவதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளின் பலி எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாம் எனவும் சில ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தோன்றுகிறது” என்றார் பிரதமர் ஜான்சன்.

கொரோனா வைரஸின் இந்த புதிய திரிபு எந்தளவுக்கு ஆபத்தானது, எத்தனை பேரை பலி வாங்குகிறது என்பதைக் கண்டுபிடிக்க, இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு, இம்பீரியல் காலேஜ் ஆஃப் லண்டன், தி லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன், டிராபிகல் மெடிசின், எக்ஸ்டர் பல்கலைக்கழகம் என பல அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மதிப்பீடு செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

இதுதொடர்பான ஆதாரங்களை கொண்டு பிரிட்டனின் நியூ அண்ட் எமர்ஜிங் ரெஸ்பிரேடரி வைரஸ் த்ரெட்ஸ் அட்வைசரி குரூப் (Nervtag) என்றழைக்கப்படும் அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸின் புதிய திரிபு நிறைய நோயாளிகளின் உயிரைப் பறிப்பதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது, ஆனால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்கிறது இக்குழு.

“இதுவரை கிடைத்திருக்கும் தரவுகள் அத்தனை வலுவாக இல்லை” என பிரிட்டன் அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரான சர் பேட்ரிக் வலன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த திரிபு தொடர்பான தரவுகளைச் சுற்றி நிறைய நிலையற்றதன்மை நிலவுவதை நான் அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த திரிபு தொடர்பாக சரியான தரவுகளைப் பெற நாம் இன்னும் நிறைய உழைக்க வேண்டும். இந்த திரிபு வேகமாக பரவக் கூடியதாக இருப்பதோடு, நோயாளிகளின் உயிரிழக்கும் விகிதத்தை அதிகரிப்பது கவலையளிக்கும் விஷயம் தான்” என்றார் வலன்ஸ்.

கொரோனா வைரஸின் புதிய திரிபு, மற்ற திரிபுகளை விட 30 – 70 சதவீதம் வேகமாகப் பரவுவதாகவும், 30 சதவீதம் கூடுதலாக இறப்பு விகிதங்களை கொண்டிருப்பதாகவும் இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கூறின.

உதாரணத்துக்கு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 1,000 பேர் பழைய கொரோனா திரிபால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அதில் 10 பேர் இறப்பார்கள் என எதிர்பார்க்கலாம். ஆனால் கொரோனா வைரஸின் புதிய திரிபு தொற்று ஏற்பட்டால் 13 பேர் மரணிக்க வாய்ப்பிருக்கிறது.

கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் ஆன போது இந்த வேறுபாடு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனை தரவுகளை ஆராய்ந்த போது, இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுவது மேம்பட்டிருப்பதும், மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்றுவருவதையும் காட்டுகிறது.

"கொரோனா வைரஸின் புதிய திரிபு உயிரிழப்பை தீவிரப்படுத்தக்கூடும்" - எச்சரிக்கும் பிரிட்டன்

கொரோனா வைரஸின் இந்த புதிய திரிபு கடந்த செப்டம்பர் 2020-ல் கென்ட் பகுதியில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புதிய திரிபு தான் தற்போது இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து போன்ற பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இந்த புதிய திரிபு 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியிருக்கிறது.

ஃபைசர் & ஆக்ஸ்ஃபோர்டு – ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசிகள், பிரிட்டனில் உருவான இந்த புதிய திரிபுக்கு எதிராகவும் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் உருவானதாக கருதப்படும் கொரோனா திரிபுகள், இன்னும் கூடுதலாக கவலையளிப்பதாகக் கூறியுள்ளார் சர் பேட்ரிக்.

“இந்த திரிபுகளில் சில புதிய பாகங்கள் இருக்கின்றன. அதாவது இந்த புதிய ரக திரிபுகள், கொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்படுவது குறையலாம். இந்த திரிபை நாம் தொடர்ந்து கண்காணித்து ஜாக்கிரதையாக ஆராய வேண்டும்” என்றார்.

பிரிட்டனில் புதிய திரிபுகள் பரவாமல் இருக்க, பிரிட்டனின் எல்லைகளைப் பாதுகாக்க, அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

புதிய கொரோனா வைரஸ் திரிபு பிரிட்டனில் பரவிவிடக் கூடாது என்கிற நோக்கில், கடந்த வாரம் பிரிட்டன் அரசு, பல ஆப்பிரிக்க நாடுகள் மீது பயணத் தடையை விதித்தது.

அனைத்து சர்வதேச பயணிகளும் பிரிட்டனுக்கு வருவதற்கு முன், கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அதோடு பிரிட்டனுக்குள் வந்த பின் சுய தனிமைப்படுத்துதல் செய்து கொள்ள வேண்டுமெனவும் அரசு குறிப்பிட்டுள்ளது.

Source
BBC
Back to top button