செய்திகள்

சிங்கப்பூர் தேசிய நாள்: கேலி செய்யப்பட்ட சின்னஞ்சிறு தீவு பணக்கார நாடாக உருவெடுத்தது எப்படி?

இன்று சிங்கப்பூரின் தேசிய நாள். 1965-ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக சிங்கப்பூர் உருவெடுத்தது இந்த நாளில்தான்.

சமீப தசாப்தங்களாக உலக அளவில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள நாடுகளின் வருடாந்திரப் பட்டியலில் தொடர்ந்து முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறது சிங்கப்பூர். ஆனால் அது தனி நாடாக உருவான போது கட்டமைப்புகள் ஏதும் இல்லாத, உணவுப் பொருள் உற்பத்தி செய்ய இயலாத வெற்றுப் பரப்பாகவே இருந்தது.

இன்றைய மேம்பட்ட நிலைக்கு சிங்கப்பூரை உயர்த்தியவர்களில் முதன்மையானவர் லீ குவான் யூ. ஒன்றுமில்லாத நாட்டை வியந்துபோற்றும் அளவுக்கு மாற்றுவதற்காக அவர் செய்த முக்கியமான 8 நடவடிக்கைகளை இதில் பார்க்கலாம்.

பகை அதை உடை

சிங்கப்பூர் தனி நாடானபோது, அது நெடுங்காலம் நீடித்திருப்பதற்கான எந்தச் சாத்தியக்கூறும் இல்லை என்று பிரிட்டிஷ் ஊடகங்கள் எழுதின. சிங்கப்பூரில் பிரிட்டிஷார் உருவாக்கியிருக்கும் கட்டமைப்புகளை மூடிவிட்டால், சிங்கப்பூர் என்றொரு நாடே இல்லாமல் போய்விடும் என்று கேலி செய்தன.

ஒரு புறம் பிரிட்டன் இன்னொரு புறம் சீனா, அந்தப் பக்கம் அமெரிக்கா என பல தரப்பில் இருந்தும் சிங்கப்பூரில் ஆதிக்கம் செலுத்துவதற்கு வாய்ப்புகள் உருவாகியிருந்தன. தற்காத்துக் கொள்வதற்கு சிங்கப்பூரிடம் அப்போது ராணுவம் கூடக் கிடையாது. இருந்த இரு படைப்பிரிவுகளும் மலேசியாவிடம் இருந்து இரவலாகப் பெறப்பட்டவை.

இந்த நெருக்கடியைத் திறமையாகக் கையாண்டார் லீ. முதலில் ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளிலும் பிற நாடுகளிலும் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார்.

இந்தோனீசியா போன்ற பகை நாடுகளை இணங்கிவரச் செய்தார். இஸ்ரேல் போன்ற நாடுகளிடமிருந்து டாங்குகள், விமானங்கள் போன்றவற்றை வாங்கினார். இதனால் பகை குறைந்தது.

லீ
படக்குறிப்பு,சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ

ராணுவமும் வேலைவாய்ப்ப்பும் – ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

விடுதலையடைந்தபோது வர்த்தகம் முழுவதும் மலேசியாவின் கட்டுப்பாட்டில் இருந்ததால் சிங்கப்பூரின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. வேலை வாய்ப்பில்லாமல் இளைஞர்கள் தவித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது லீ குவான் யூ கட்டாய ராணுவப் பணிச் சட்டத்தைக் கொண்டு வந்தார். ராணுவம் என்றால் யார் சேருவார்கள்? அதனால் ராணுவ வீரர்களுக்கு அதிக சலுகை வழங்க லீ உத்தரவிட்டார்.

அதனால் ஏராளமானோர் ராணுவத்தில் சேர முன்வந்தார்கள். இதனால் ராணுவமும் வலிமையானது, வேலையில்லாத் திண்டாட்டமும் குறைந்தது.

தூய்மையே முதன்மை

சிங்கப்பூரின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் லீ திட்டங்களை அறிவித்தார். வீட்டு வசதிக் கழகம் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டன. நேர்த்தியான சாலைகள் போடப்பட்டன. சிங்கப்பூர் நவீன நாடாக உருவெடுக்கத் தொடங்கியது. மக்கள் அதற்கேற்றபடி உடனடியாக மாறிவிடவில்லை.

நவீன கட்டமைப்புகள் அனைத்தும் அசுத்தம் நிறைந்திருந்தது. அதைத் தடுப்பதற்காக முதலில் கண்ட இடங்களில் எச்சில் துப்புவதைத் தடுக்கும் பரப்புரையை லீ தொடங்கினார். எச்சில் துப்புவதையே மக்கள் மறக்கும் அளவுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தேவையில்லாமல் காரில் ஒலி எழுப்பினால் அபராதம் விதிக்கப்பட்டது. புகை கக்கும் வாகனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. கால்நடைகளைச் சாலையில் உலவவிட்டால் உரிமையாளருக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

அமெரிக்காவுடன் சூயிங்கம் மோதல்

ஆங்காங்கே ஒட்டப்படுகிறது என்பதால், 1960-களிலேயே சூயிங்கத்தையே தடை செய்ய பரிசீலிக்கப்பட்டது. தபால் பெட்டிகள், சாவித் துவாரங்கள், லிஃப்ட் பொத்தான்கள் என எங்கெங்கும் சூயிங்கத்தை ஒட்டி விடுகிறார்கள் என்று புகார்கள் வந்தன.

மெட்ரோ ரயில்கள் ஓடத் தொடங்கியபோது அதன் கதவுகளில் சூயிங் கம் ஒட்டப்பட்டது. இதனால் 1992-ஆம் ஆண்டு சூயிங் கம் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இது குறித்து பிபிசி செய்தியாளர் ஒருவர் லீ குவான் யூவிடம் கேட்டபோது, எதையாவது மென்றால்தான் கற்பனை வரும் என்றால், வாழைப் பழத்தை மெல்லுங்கள் என்று கூறினார்.

சிங்கப்பூர்
படக்குறிப்பு,பிரிட்டிஷார் விட்டுச் சென்றபிறகு சிங்கப்பூர் அழிந்துவிடும் என்று பலரும் நினைத்தார்கள்

இந்தத் தடைக்க பல தரப்பிலும் எதிர்ப்புக் கிளம்பியது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன..

1990-களின் இறுதியில் சிங்கப்பூரின் வர்த்தக உடன்பாடு செய்து கொண்ட அமெரிக்கா, தனது முக்கிய நிபந்தனையாக சூயிங்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்ற வேண்டும் என்பதை விதித்து. அதன் பிறகே சூயிங் கம் மீதான தடையை லீ குவான் யூ அகற்றினார்.

தோல்விகளை வென்ற தொழில்துறை

1960-களில் இருந்தே தொழில் துறையை மிக வேகமாக வளர்ச்சி பெறச் செய்தார் லீ குவான் யூ. எண்ணற்ற சோதனை முயற்சிகளைச் செய்து பார்த்தார். சில திட்டங்கள் தோல்வியடைந்தாலும், பெரும்பாலான திட்டங்கள் வளரச்சிக்குக் கைகொடுத்தன.

எண்ணெய்ச் சுத்திகரிப்பு, கணினி தயாரிப்பு, தொலைத் தொடர்பு என முக்கியத் தொழில்கள் சிங்கப்பூரில் பெருகின. பன்னாட்டு முதலீடுகள் குவிந்தன.

பெரு நிறுவனங்கள் சிங்கப்பூரில் கிளைபரப்பின. எதிர்பாராத அளவுக்குச் செல்வம் குவிந்தது. பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறிவிட்டால், அரசே நீடித்திருக்காது என்று கூறப்பட்ட ஒரு நாடு, உலகமே ஏக்கத்துடன் பார்க்கும் அளவுக்கு முக்கிய நாடாக உருவெடுத்தது.

எந்தக் கனிம வளமும் இல்லாத, குடிநீருக்குக்கூட வெளிநாட்டை நம்பியிருக்கும் நிலையில் இருந்த சிங்கப்பூர் ஆசியாவின் முதல்நிலைப் பொருளாதார நாடாக உயர்ந்தது.

நல்லிணக்கமும் தமிழ்ப் பாசமும்

பொருளாதார வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தாலும், மத நல்லிணக்கம், இன ஒற்றுமை போன்றவறைப் பாதுகாத்தவர் லீ. மொழிப் பாகுபாடு வந்துவிடக்கூடாது என்பதற்காக, மலாய், மாண்டரின், தமிழ், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவித்திருந்தார்.

சிங்கப்பூர்

இயல்பாகவே தமிழர்கள் மீது அதிகப் பாசம் கொண்டவர் லீ குவான் யூ. சிங்கப்பூரைக் கட்டமைப்பதில் தமிழர்களின் பங்கு அளப்பரியது என்ற கருத்து அவருக்கு இருந்தது. அதனால் தமிழர்களுடனும் தமிழ்நாட்டுடன் அவருக்கு நெருக்கமான தொடர்பு இருந்து வந்தது.

பிரம்படிக்கு பின்னால் உள்ள கதை

லீ குவான் யூ பிறந்தது பணக்காரக் குடும்பம். அங்கு கண்டிப்புக்கும் குறைவிருக்காது. சாதாரணமாக கேள்விப்படாத பலவிதமான தண்டனைகளை இளம் வயதிலேயே பெற்றிருக்கிறார் லீ குவான் யூ.

தனது தாய் வழி தாத்தாவின் வீட்டில் இருந்தபோது, விலை உயர்ந்த பொருள் ஒன்றை லீ வீணாக்கிவிட்டார். விவரம் லீயின் தந்தை சின் குவானுக்குத் தெரியவந்தது. அவர் லீயைத் தூக்கிக் கொண்டு கிணறுவரை சென்றுவிட்டார்.

இனி எப்போதாவது தவறு செய்தால் கிணற்றில்போட்டு மூடிவிடப்போவதாக எச்சரித்தார். சிறுவனான லீ குவான் யூ அச்சத்தில் உறைந்திருந்தார். குறும்பு செய்வதைக் குறைத்துக் கொண்டார். அதே நேரத்தில், தண்டனைகள் கடுமையாக இருந்தால் குற்றங்கள் குறைந்துபோகும் என்பது அவரது மனதில் ஆழப் பதிந்துபோனது.

இன்று சிங்கப்பூரில் பிரம்படிகள் கொடுப்பது, கடுமையாக அபராதம் விதிப்பது, ஊழல் அதிகாரிகளைக் கடுமையாகத் தண்டிப்பது போன்றவையெல்லாம் இதன் எதிர்வினைகள்தாம். நாட்டின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு இளம் வயதில் கற்றுக் கொண்ட பாடங்களை அமல்படுத்தும் விதமாக, விதிமீறல்களுக்குக்கு பிரம்படி உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்கும் முறையை லீ அமல்படுத்தினார்.

ஆனால், இந்த தண்டனைகள் மனித உரிமைக் குழுக்களால் இன்னும் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு உள்ளாகியும் வருகின்றன.

லீ
படக்குறிப்பு,1955-ஆம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசி லீ குவான் யூ

ஊழலால் நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படும் என்பதைப் புரிந்து கொண்ட அவர், அதற்காகவே அதிக அதிகாரங்களைக் கொண்ட கண்காணிப்பு அமைப்பையும் நிறுவினார்.

ஒழுக்கமில்லாவிட்டால், எந்தவிதமான இலக்கையும் அடைய முடியாது என்பது அவரது எண்ணம். அதையே ஆட்சியிலும் அவர் அமல்படுத்தினார். 1980-களில் தனது மூத்த அமைச்சர் மீது ஊழல் புகார் எழுந்தபோது, அதை விசாரிப்பதற்கு லீ உத்தரவிட்டார். அது தெரிந்தவுடனேயே அந்த அமைச்சர் தற்கொலை செய்து கொண்டார். அந்த அளவுக்கு லீ கண்டிப்பானவராக இருந்தார்.

போராட்டம் என்பது இடையூறு செய்வது அல்ல

சிங்கப்பூரில் போராட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. முறையான அனுமதி பெறாமல், மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவார்கள். தேவைப்பட்டால் விசாவை ரத்து செய்து நாடு கடத்தி விடுவார்கள்.

சிங்கப்பூரைக் கட்டியமைத்த லீ குவான் யூ கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானவர். ஆனால் தொழிலாளர்களுக்கு எதிராக அவர் ஒருபோதும் நடந்து கொண்டதே கிடையாது என்கிறார்கள். 1950-களில் தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதற்காகவும் அவர்கள் வேலை நிறுத்தம் செய்து உரிமைகளைப் பெறுவதற்காகவும் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.

போராட்டம் என்பது அரசின் கவனத்தைக் கவருவதாக இருக்க வேண்டுமேயன்றி ஒருபோதும் வன்முறைக்கு இடமளிக்கக்கூடாது என்று லீ குவான் யூ வலியுறுத்துவார். வன்முறைகளைத் தூண்டிவிட பலர் முயற்சிப்பார்கள், அதற்குத் தொழிலாளர்கள் பலியாகிவிடக்கூடாது என்று லீ குவான் யூ எச்சரிப்பார். அந்த வழிமுறையையே சிங்கப்பூர் இன்றும் பின்பற்றி வருகிறது.

Source : BBC Tamil

Back to top button