செய்திகள்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பயணித்த வாகன வேகத்தை கணிக்க முயன்ற பொலிஸார் உடனடியாக பணி இடை நிறுத்தம்

முந்தல் பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள், உடன் அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்தது இடை நிறுத்தப்பட்டுள்ளனர். புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரால் அவர்கள் இவ்வாறு பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். முந்தல் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொலிஸ் சார்ஜன், பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரே இவ்வாறு பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் அறிவுறுத்தலின்றி, வாகன வேகத்தை அளவீடு செய்யும் கருவியை  பயன்படுத்தக்கூடாதென  புத்தளம்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், தனது வலயத்தில் சேவையில் உள்ள பொலிஸாருக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். எனினும் அந்த உத்தரவை மீறி, கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி, அதிகாலை முந்தல் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின்  உத்தியோகத்தர்கள் இருவரும் வேக அளவீட்டு கருவியை எடுத்துச் சென்று கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, சிலாபம் – புத்தளம் வீதியில் பயணித்த வாகங்களின் வேகம் தொடர்பில் அவர்கள் அவதானம்  செலுத்தியுள்ளனர்.  இதன்போது அவ்வழியால் வந்த கார் ஒன்றினை அவர்கள் அதிக வேகம் காரணமாக நிறுத்தியுள்ளனர். அந்த  காரில், புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரே இருந்துள்ளார்.

இந்நிலையிலேயே, தனது உத்தரவை மீறி, வேக அளவீட்டு கருவியை எடுத்து சென்றமை தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Source : virakesari

Back to top button