செயலணிக்கு சிறுபான்மை பிரதிநிதிகள் இருவரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கான பிரதிநிதிகளின் சிபார்சுகளை செயலணிக்கு வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார்.
கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியாகியிருந்தது. ஏற்கனவே நியமிக்கப்பட்ட கிழக்கு தொல்பொருள் செயலணியில் சிறுபான்மையினர் எவரும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. எனவே இந்த விடயம் அரசியல் ரீதியில் சர்ச்சையை உருவாக்கியிருந்தது.
கடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த காரணிகளை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியிருந்ததுடன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்த கடிதத்திற்கு பதிலளித்திருந்த ஜனாதிபதி இரு சிறுபான்மையினரைஇணைத்துக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே நேற்று வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய படிவம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போதும் குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றிருந்தார். அதனை அடுத்து குறித்த பிரதிநிதிகளின் பரிந்துரைகளை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்பய ராஜபக்ச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரியுள்ளார்.