செய்திகள்

டொனால்ட் டிரம்ப் இந்திய வருகை: கங்கை நீரால் சுத்தம் செய்யப்படும் யமுனை நதி

உலக புகழ்பெற்ற தாஜ்மஹாலின் அழகின் அடிப்படை, சிறந்த கட்டடக்கலை மற்றும் வெண் பளிங்குக் கற்களும்தான். அதிலும், தாஜ்மஹால் அமைந்திருக்கும் யமுனை ஆறும் இந்த காதல் சின்னத்தின் அழகுக்கு மெருகூட்டுகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி 24 மாலை ஆக்ராவுக்கு வரவிருக்கிறார்.

எந்த யமுனை நதியின் கரையில் தாஜ்மஹால் அமைந்துள்ளதோ, அந்த யமுனை ஆறு தற்போது பெருமளவில் சுருங்கிவிட்டது. ஆற்றில் மிகவும் குறைவான நீர் மட்டுமே செல்கிறது.

அதுமட்டுமல்ல, யமுனையின் நீர் மிகவும் அழுக்காக இருக்கிறது.

ஆற்றின் அருகே யாரும் நிற்கவே முடியாது, ஏனென்றால் யமுனை துர்நாற்றம் வீசும் அசுத்தமான நதியாகிவிட்டது.

டிரம்ப் இந்திய வருகை: கங்கை நீரால் சுத்தம் செய்யப்படும் யமுனை நதி
படத்தின் காப்புரிமை GETTY IMAGES

ஆனால் இந்த கசப்பான உண்மையை சொற்ப காலத்திற்காக மாற்றியமைக்க மாநிலத்தில் ஆளும் யோகி ஆதித்யநாத் அரசாங்கமும் உத்தர பிரதேசத்தின் உள்ளூர் நிர்வாகமும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.

சுமார் ஒன்றரை அடி தண்ணீர்

இதற்காக, யமுனை நதியில் கூடுதல் நீரை பல இடங்களிலிருந்து விடுவிக்க உத்தர பிரதேச மாநில நீர்ப்பாசனத் துறை முடிவு செய்துள்ளது, இதனால் யமுனையில் நீரின் ஓட்டம் அதிகமாகும் என்பதோடு, அதிக நீர் ஓடுவதால், நதி சுத்தமாகும், துர்நாற்றம் குறையும், நதி தெளிவாகத் தெரியும்.

ஆக்ரா நகர மேயர் நவீன் ஜெயினிடம் பிபிசி பேசியது. ‘இதற்காக முதலமைச்சர் ஆதித்யநாத் யோகியிடம் கோரிக்கை விடுத்தேன்’ என்று அவர் கூறினார்.

யோகி ஆதித்யநாத்
படத்தின் காப்புரிமை PTI

“முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆக்ராவுக்கு வந்தபோது, யமுனை நதியில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஓடினால், நதி தெளிவாக இருக்கும், அழகாகவும் இருக்கும் என்று சொன்னோம். அதை ஆமோதித்த அவர், உடனடியாக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளிடம் பேசினார். அவருடைய அறிவுறுத்தல்களின்படி, புதன்கிழமை மாலை சுமார் ஒன்றரை அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது” என்று சொல்கிறார் ஆக்ரா நகர மேயர் நவீன் ஜெயின்.

‘ஹரித்வார் அருகே இருந்து கங்கை நதியிலிருந்தும், கிரேட்டர் நொய்டாவுக்கு அருகிலுள்ள ஹிண்டன் நதி மற்றும் வேறு சில நதிகளிலிருந்தும் யமுனைக்கு நீர் திறந்து விடப்படும். இந்த நதி நீர், பிப்ரவரி 22 அல்லது 23க்குள் ஆக்ராவை அடைந்துவிடும். அடுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்களில் யமுனையின் நீர் தெளிவாக இருக்கும்’ என்று நவீன் ஜெயின் கூறினார்.

நதி சுத்தமகும் என்று எதிர்பார்ப்பு

யமுனா நதி
படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES/GETTY IMAGES

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்தியப் பயணத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் செவ்வாய்க்கிழமையன்று ஆக்ராவிற்கு சென்றார்.

‘யமுனா நதியின் நிலையைப் பார்த்து அவர் வருத்தப்பட்டார், அப்போது அவரிடம் நதியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டதும், அவற்றை செயல்படுத்தும் முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டார்’ என்று நவீன் ஜெயின் கூறினார்.

‘மான்ட் கால்வாய் வழியாக 500 கியூசெக் கங்கை நீர் யமுனைக்கு திருப்பப்பட்டுள்ளது’ என்று உத்தர பிரதேச நீர்ப்பாசனத் துறையின் கண்காணிப்பாளர் பொறியாளர் தர்மேந்திர சிங் போகாட் கூறுகிறார்.

யமுனா
படத்தின் காப்புரிமை PTI

இதே அளவிலான கங்கை நீரை பிப்ரவரி 24 வரை யமுனாவிற்கு வழங்க நீர்ப்பாசனத் துறை முயற்சிக்கிறது.

‘யமுனையில் மேலும் அதிக தண்ணீர் விடப்படும்’ என்றும் தர்மேந்திர சிங் போகட் கூறினார்.

வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த அளவு நீர் யமுனையிலிருந்தால், மதுராவிலும் ஆக்ராவிலும் உள்ள யமுனா ஆற்றின் நீரில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். யமுனையின் நீரை குடிக்க முடியாவிட்டாலும், நீரின் துர்நாற்றம் குறையும்.

அதாவது, பிப்ரவரி 24 வரை ஆக்ராவில் யமுனை பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்பதோடு, சுத்தமாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

டிரம்ப் இந்திய வருகை: கங்கை நீரால் சுத்தம் செய்யப்படும் யமுனை நதி
படத்தின் காப்புரிமை GETTY IMAGES

ஆக்ரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து பல சாக்கடை குழாய்கள் யமுனை ஆற்றில் கலக்கின்றன. இந்த அழுக்கு நீரையும் சுமந்து கொண்டு செல்லும் யமுனை நதி மாசடைந்து போய்விட்ட து. நதிக்கரைகளும் அழுக்கு சேர்ந்து, களையிழந்து போய்விட்டன.

யமுனா நதி கரை
படத்தின் காப்புரிமை NURPHOTO/GETTY IMAGES

டிரம்பின் பயணத்தை முன்னிட்டு, யமுனை நதி தற்போது நீராட்டப்படுகிறது. அலங்காரங்களும் தொடங்கிவிட்டன. ஆக்ராவை சேர்ந்த சமூக ஆர்வலர் விபின் சர்மா கூறுகையில், ” அகமதாபாத் நகரில் குடிசைப் பகுதிகளில் சுவரைக் கட்டி அவற்றை மறைப்பதைப் போல யமுனையின் கரையில் சுவரை அமைக்க முடியாது. சுவரையும் கட்ட தயாராகி இருப்பார்கள். ஆனால், திடீரென்று தாஜ்மஹாலை பார்க்கும்போது, யமுனை நதியைப் பார்க்க விரும்புவதாக டிரம்ப் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற முன்யோசனையால் இந்த முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்” என்கிறார்.

Sources BBC Tamil

Back to top button