செய்திகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்துவதா ? – இன்று கூடுகிறது ஜனாதிபதி தலைமையிலான கொவிட் செயலணி

கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளின்றி நாட்டை திறக்க வேண்டாம். எவ்வித தயார்படுத்தல்களும் இன்றி நாடு திறக்கப்படுமானால் நாடு மீண்டும் அபாய நிலைக்கே செல்லும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கடந்த 6 ஆம் திகதி நீக்கப்படவிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் சுகாதார தரப்பினரின் கோரிக்கைக்கு அமைய இம்மாதம் 13 ஆம் திகதி வரை நீஎடிக்கப்பட்டது.

இந்நிலையில் 13 ஆம் திகதியின் பின்னரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை நீடிப்பதா ? அல்லது அன்றைய தினத்திலிருந்து அதனை தளர்த்துவதா என்பது குறித்த இறுதி தீர்மானம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை கூடவுள்ள கொவிட் செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இந்நிலையிலேயே விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நாட்டை மீண்டும் திறக்கும் போது முன்னரைப் போன்று செயற்பட்டால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் பெறாது.

எனவே திங்களன்று நாடு திறக்கப்படுமானால் அன்றிலிருந்து அன்றாட செய்றபாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் அடங்கிய வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு எவ்வித தயார்படுத்தல்களும் இன்றி நாடு திறக்கப்படுமானால் மீண்டும் அபாய நிலைமைக்கு செல்லக் கூடும்.

இது நாட்டை திறப்பதற்கு எடுக்கும் தீர்மானங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலேனும் நாடு திறக்கப்பட்டால் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது கொவிட் தொற்று பரவாமல் இருக்கக் கூடிய சூழலை ஏற்படுத்திக் கொள்ளுமாறு சகலரிடமும் வலியுறுத்துகின்றோம்.

நாட்டை தொடர்ந்தும் முடக்கி வைத்திருப்பது எமது நோக்கம் அல்ல. வைரஸ் தொற்று பரவாத வகையில் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதே முக்கியத்துவமுடையதாகும். அவ்வாறில்லை எனில் தற்போதைய நிலைமையை மேலும் இறுக்கமாக்க வேண்டியேற்படும் என்றார்.

Back to top button