செய்திகள்

நாட்டை முடக்குவதா ? இல்லையா ? விரைவில் தீர்மானம் – விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

நாட்டில் கொவிட் தொற்று பரவல் நிலைமை தீவிரமடையும் போது எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பான மாற்று தெரிவுகள் பல உள்ளன.

நாட்டை முடக்குதல் அந்த தெரிவுகளில் ஒன்றாகும். அதற்கமைய நிலைமை தொடர்பில் ஆராய்ந்து பொறுத்தமான தீர்மானம் எடுக்கப்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினர் , ஏனைய வைத்தியர் துறை நிபுணர்கள் ஆகியோர் கொவிட் பரவல் தீவிர நிலைமையைக் கவனத்தில் கொண்டு ஸ்திரமான தீர்மானமொன்றை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சு அவதானம் செலுத்திவருகிறது.

நாட்டை முடக்குதல் என்பது கொவிட் பரவல் தீவிரமடையும் போது எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பான தெரிவுகளில் ஒன்றாகும்.

எனவே நிலைமை தொடர்பில் நன்கு ஆராய்ந்து உரிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட வேண்டிய பொறுத்தமான தீர்மானம் அரசாங்கம் மற்றும் சுகாதார தரப்பினரால் எடுக்கப்படும்.

நாட்டில் யாருக்கும் பலவந்தமாக தடுப்பூசி ஏற்றப்படுவதில்லை. அது பிரஜைகளுடைய உரிமை சார்ந்ததாகும். ஆனால் தடுப்பூசிகள் தொடர்பில் வேறுபட்ட நிலைப்பாட்டை உடையவர்கள் தாம் எதற்காக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் இதுவரையில் திட்டமிடப்பட்டுள்ள குறிப்பிட்ட வயதெல்லையிலுள்ள சனத்தொகையில் 94 சதவீதமானோருக்கு முதற்கட்டமாகவேனும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இதனை அண்மித்தளவில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள நிலைமையால் ஸ்புட்னிக் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் சற்று தாமதம் ஏற்பட்டிருந்தாலும் , அதனை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களை விட பி.சி.ஆர். பரிசோதனைகளின்  அளவு குறைவடைந்துள்ள போதிலும் , அதற்கு சமஅளவிலான அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது.

அதற்கமைய நாளாந்தம் சுமார் 25 000 கொவிட் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தொற்றாளர்களை இனங்காண்பதற்கு போதிளயவு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை தெளிவாகக் கூற முடியும் என்றார்.

Source : virakesari

Back to top button