செய்திகள்
Trending

நிவர் புயல்: அதிதீவிர புயலாக கரையை கடக்கும் – தற்போதைய நிலவரம் என்ன? – Nivar Cyclone in Tamilnadu

நிவர் புயல் தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த மூன்று மணி நேரமாக நிலை கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், இன்று நற்பகல் 12 மணியளவில் தெரிவித்துள்ளனர்.

நிவர் புயல் பற்றிய சமீபத்திய தகவல்களை வெளியிட்ட சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், நாளை மாலை அதி தீவிரப் புயலாக கரையை கடக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், இந்த புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வரை மழை தொடரும் என்றும் கூறினார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுவையில் மிக பலத்த மழை பெய்யும் என்றார். திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுவையில் மிக பலத்த மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாமல்லபுரம்-காரைக்கால் இடையில் நிவர் புயல் கரையை கடக்கும் என்பதால், கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும், அதிக கனமழை ஏற்படும் என்றார் பாலச்சந்திரன். காற்றின் வேகம் சுமார் 100 முதல் 120கிமீ வேகத்தில் வீசும் என்றும் அவர் தெரிவித்தார்

தமிழகம்,புதுவையில் தற்போதைய நிலவரம் என்ன?

வங்கக் கடலில் நிவர் புயல் உருவாகியுள்ளதால், தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது; புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் அதிக கனமழை ஏற்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், புயலின் தாக்கம் போக்குவரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொது மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக புதுவை அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.

நிவர் புயல் நாளை மாலை புதுவையில் கரையை கடக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது என தெரிவித்துள்ள அதிகாரிகள், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய கூடும் என தெரிவித்துள்ளனர்.

நிவர் புயல் காரணமாக, புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் வழியாக செல்லும் திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரிக்கும் அரசு பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

nivar cyclone update in tamil

தமிழகத்தில் இன்றும் நாளையும் நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வுகள் டிசம்பர் 9 மற்றும் 11ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்கவேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னர் தெரிவித்திருந்தார்.

செவ்வாய் கிழமை காலை வரை, புதுச்சேரியில் வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே உள்ளது. இருந்தபோதும் புதுவையில் புயல் கரையை கடக்கும் என்பதால், முன்னச்சரிக்கை நடவடிக்கையாக 7ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை நகரத்தில் வசிப்பவர்கள், புயல் சேதம் ஏற்பட்டால் அல்லது இடர்கள் ஏற்பட்டால், உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்புகொள்ள 044 2538 4530, 044 2538 4530, 044 2538 4540 , 1913 ஆகிய உதவி எண்ணங்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடற்கரைகளில் பொது மக்கள் செல்வதற்கு அனுமதி இல்லை என்றபோதும், கடற்கரை சுற்றுப்பகுதிகளில் செல்ஃபி எடுப்பவர்கள், உடற்பயிற்சி செய்ய வருபவர்களையும் அங்கிருந்து காவல்துறையினர் வெளியேற்றுகின்றனர்.

கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை, இதுவரை பலத்த மழை காணப்படவில்லை என்றபோதும், புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டம் என்பதால், அரக்கோணத்தில் இருந்து 120 பேர் அடங்கிய ஆறு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கடலூருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை அதிக கனமழை ஏற்படும் என்றும் புயல் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், பொது மக்கள் பாதுகாப்போடு இருக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், நிவர் புயல் கரையை நாளை கடக்கும் என்பதால் கடைகளை திறக்க வேண்டாம் என்றும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்கள் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம்: என மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார். நிலச்சரிவு

நிவர் புயலை எதிர்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகின்றன. மேலும் பிரதமர் நரேந்திர மோதி தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் புதுவை முதல்வர் நாராயணசாமியிடம் புயல் விவரங்களை கேட்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையை அடுத்த, மரக்காணம் பகுதியில் உப்பளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், உப்பு உற்பத்தி செய்த குழிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

காரைக்கால் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு சென்றிருந்த மீனவர்களை தொடர்பு கொண்டு திரும்பிவர மீன்வளத்துறை அதிகாரிகள் முயற்சி செய்துவருகின்றனர்.

Source
BBC

Related Articles

Back to top button