பாகிஸ்தானில் பணியாற்றிய இந்தியத் தூதரக அதிகாரிகள் மாயம்
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் பணியில் இருந்த இரு இந்திய தூதரக அதிகாரிகள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் அந்நாட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதனை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரி உறுதிபடுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிடியில் அவர்கள் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஒரு சில நாட்களுக்கு முன்புதான், இரண்டு பாகிஸ்தான் உயர் ஆணைய (தூதரக) அதிகாரிகள் உளவு பார்த்தாக குற்றஞ்சாட்டி, இந்தியா அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது.
இந்நிலையில் தற்போது பாகிஸ்தானில் இரண்டு இந்திய அதிகாரிகள் காணாமல் போயுள்ளது அதற்கான பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட இரு உயர் ஆணைய அதிகாரிகளும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்பவர்களுக்கு விசா வழங்கும் பிரிவில் பணிபுரிந்து வந்தனர்.
அவர்கள் இருவருமே இந்திய அரசின் முக்கிய ஆவணம் ஒன்றை கைப்பற்ற முயற்சித்ததாகக் கூறப்பட்டது.