செய்திகள்

பிரதமர் மஹிந்த பதவி விலகினார்: ஜனாதிபதி செயலாளர் அறிவிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளார்.

இன்று காலை அலரிமாளிகையில் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆதரவாளர்களால் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளார்.

SLPP ஆதரவாளர்கள், அலரிமாளிகைக்கு வெளியே அமைதியான முறையில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதன் பின்னர், அவர்கள் கொழும்பில் காலி முகத்திடலில் உள்ள ‘போராட்டத் தளத்திற்குள் நுழைந்து, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அந்த இடத்தில் இருந்த பல பொருட்களையும் அழித்துள்ளனர்.

அமைதி எதிர்ப்பாளர்கள் மீது அரச ஆதரவுடன் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஜனாதிபதியும் பிரதமரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல போராட்டங்கள் வெடித்துள்ளதுடன், காலி முகத்திடலிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பாரியளவிலான போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு பல முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், மஹிந்த ராஜபக்ஷ அந்த அழைப்புகளுக்கு செவிசாய்க்க மறுத்தார்.

பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரியதாக செய்திகள் வெளியான போதிலும் அந்த செய்திகளை மறுத்த மஹிந்த ராஜபக்ஷ, அவ்வாறான கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும், தான் பதவி விலகப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்திருந்ததாக முன்னதாக வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) மற்றும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன, ஆனால் பிரதமர் பதவி விலகப் போவதில்லை என்று கூறினார்.

எவ்வாறாயினும், கொழும்பில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் இன்று நடத்திய அமைதியின்மை மற்றும் தாக்குதல்களைத் தொடர்ந்து, பிரதமர் பதவி விலகத் தீர்மானித்துள்ளார்.

Source : Hiru news

Back to top button