செய்திகள்

புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 196 பேர் அடையாளம்: அரசாங்கத்தகவல் திணைக்களம்

கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் மையத்தில் உள்ளோருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் படி புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 196 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் மையத்திலிருந்த போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், உத்தியோகத்தர்களுக்கு நடத்தப்பட்ட 338 பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் தற்போது கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அதில் 196 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அரசாங்கத்தகவல் திணைக்களம் அறிவித்திருக்கிறது.

அதன்படி நேற்று வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அடையாளங்காணப்பட்ட 56 பேருடன் சேர்த்து கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் மையத்தில் இனங்காணப்பட்டிருக்கும் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 252 ஆகும்.

கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் மையத்தில் இருப்பவர்களுக்கு மேலும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அங்கு இன்னமும் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் அடையாளங்காணப்படக்கூடிய சாத்தியப்பாடு இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு, குறித்த காலப்பகுதியில் கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் மையத்தில் புனர்வாழ்வு செயற்திட்டத்தை முடித்துக்கொண்டு வெளியேறிச் சென்றவர்கள் மற்றும் அங்கிருப்பவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களையும் இனங்கண்டு அவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், இதனூடாக கொரோனா வைரஸ் சமூகப்பரவல் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்கத்தகவல் திணைக்களம் அறிவித்திருக்கிறது.

கந்தக்காட்டிலுள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நிலையத்திலிருந்து கடந்த ஜுன் மாதம் 27 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதியொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தமை கடந்த 6 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Back to top button