செய்திகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மாபெரும் ஆர்ப்பாட்டம் : பொலிஸாரின் தடை உத்தரவை நிராகரித்தது சாவக்சேரி நீதிமன்றம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த தடை உத்தரவு கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் சுன்னாகம், காங்கேசன்துறை மற்றும் அச்சுவேலி பொலிஸார் முன்வைத்த விண்ணப்பங்களும் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பமே நிராகரிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கொவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன

ஜெனிவா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் நாட்டுக்கு சதி ஏற்படுத்தும் முயற்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முயற்சிக்கின்றனர் என்று பொலிஸார் நீதிமன்றில் எடுத்துரைத்தனர்.

“இலங்கை அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள ஒன்றுகூடும் உரிமையை பொலிஸாரின் தடை உத்தரவு கோரிக்கை மறுக்கின்றது. 

அத்துடன், ஒரு இனம் நாட்டுக்கு சதி செய்வதாக பொலிஸார் எண்பிப்பது ஏனைய இனங்களுக்கு வெறுப்புணர்வைத் தூண்டும். 

கொவிட்-19 தொற்றுநோய் தொடர்பில் பேரணி இடம்பெறும் இடங்கள் தனிமைப்படுத்தப்படவில்லை. அதனால் பொலிஸார் தாக்கல் செய்த அடிப்படையற்ற விண்ணப்பத்தை நிராகரிக்கவேண்டும்” என்று சட்டத்தரணி கேசவன் சயந்தன், நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த சாவகச்சேரி நீதிவான் பொலிஸாரின் தடை உத்தரவு கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

இதேபோன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் சுன்னாகம், காங்கேசன்துறை மற்றும் அச்சுவேலி பொலிஸார் தாக்கல் செய்த பேரணிக்கான தடை உத்தரவு விண்ணப்பங்கள் இன்று விசாரணைக்கு வந்தன.

மூத்த சட்டத்தரணிகள் என்.சிறிகாந்தா, வி.திருக்குமரன் மற்றும் சட்டத்தரணிகள் முன்னிலையாகி ஆட்சேபனை தெரிவித்து நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பம், சட்டத்தரணிகளின் ஆட்சேபனையை ஆராய்ந்த மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, பொலிஸாரின் விண்ணப்பங்களை நிராகரித்து கட்டளை வழங்கினார்.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தப் போராட்டம் மூன்றாம் நாளான இன்று காலை திருகோணமலையில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது. நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை பொலிகண்டியை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button